கந்து வட்டிக்கரர்களை ஒழிக்க முடியாதா?
காவல்துறையால் ஒழிக்கவே முடியாத அல்லது கண்டு பிடிக்கவே முடியாத ஒரு சில விஷயங்கள் உண்டு. அப்படியென்றால் யாரால தான் இவர்களைக் கண்டு பிடிக்க முடியும் அல்லது ஒழிக்க முடியும் என்று பொது மக்களும் கேள்வி கேட்க முடியும்.
ஆலோங் எனப்படுகிற கந்து வட்டிக்காரர்களை அறவே இயங்காமல் அவர்களை ஒழித்துக்கட்ட வழிவகைகள் உண்டா என்றால் இதுவரை அது சாத்தியப்படவில்லை~ அவ்வப்போது ஓரிருவர் கைது செய்யப்படுகிறார்களே தவிர மற்றபடி இவர்கள் சுதந்திரமாகத் தான் வட்டித்தொழிலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
சமீபத்தில் ஒரு பெண் தன் காதலனுக்காக ஆலோங்கிடம் பணம் வாங்கப் போக அந்த காதலன் அதோடு நிற்காமல் மேலும் பல ஆலோங்களிடம் - சுமார் 38 பேரிடம் - அந்தப் பெண்ணின் பெயரில் பணம் வாங்கி கடைசியில் அந்தப் பெண்ணை நடுவீதிக்குக் கொண்டு வந்துவிட்டான். இப்போது அந்தப் பெண்ணின் குடும்பம் இந்த ஆலோங்களால் பிரச்சனைக்கு உள்ளாகி இருக்கின்றனர். அந்தப் பெண்ணும் இப்போது தலைமறைவாக வாழ வேண்டிய சூழல்.
அவ்வப்போது தான் இதுபோன்று விஷயங்கள் ஊடகங்களில் வெளியாகின்றன. ஆனால் வெளி வராமல் இருப்பவை நிறையவே இருக்கின்றன.
காவல்துறையின் நடவடிக்கைகள் சரியாக இருக்கின்றனவா என்பது நமக்குத் தெரிய வழியில்லை. ஆனால் இந்த வட்டிமுதலைகளின் அட்டுழியங்கள் ஒரு முடிவுக்கு வருமா என்பது புரியாத புதிர்!
காவல்துறையால் கண்டுபிடிக்கவே முடியாத பட்டியலில் ஒரு சிலர் இருக்கின்றனர். நமக்கு அதிகம் தெரிந்த, ஊடகங்களில் அதிகம் பேசப்பட்ட - இந்திராகாந்தியின் மகள் பிரசன்னா. தனது முன்னாள் கணவரால் கடத்திச் செல்லப்பட்ட அந்தக் குழந்தை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. குழந்தை படிக்கிறாள். கடத்திக் கொண்டு போனவன் கார் வாங்குகிறான், வீடு வாங்குகிறான், வேலை செய்கிறான், EPF. SOCSO வெட்டுகிறான் ஆனால் அவனைக் காவல்துறை கண்டுபிடிக்க முடியவில்லை!
இன்னும் சில வழக்குகளும் உண்டு. கிறிஸ்துவ பாஸ்டர்கள் கடத்தப்பட்டார்கள். அதில் ஒருவர் இராணுவ வாகனமொன்றில் கடத்தப்பட்டார் என்பதற்கான ஆதாரங்கள் இருந்தும் அவரைக் காவல்துறை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த வழக்குகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
ஒழிக்க முடியாதவை, கண்டு பிடிக்க முடியாதவை தொடர்ந்து கொண்டு தான் இருக்கும் என்றே தோன்றுகிறது!
No comments:
Post a Comment