பெரும் பெரும் வியாபாரங்கள் என்பது வேறு சிறு சிறு வியாபாரங்கள் என்பது வேறு.
ஆனால் எல்லாவற்றுக்கும் அடிப்படை என்பது பணம் சம்பாதிப்பது மட்டும் தான். வேறு நோக்கம் இல்லை.
அதற்காக சிறு வியாபாரங்களைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. இந்த சிறு வியாபாரங்கள் தான் பிற்காலத்தில் பெரும் வியாபாரமாக மாற்றம் கண்டன. சீனர், இந்தியர், மலாய் இனத்தவர் யாராக இருந்தாலும் வியாபாரத்தில் ஒரே நாளில் எங்கிருந்தோ குதித்து வந்த விடவில்லை.
இன்று சீனர்கள் பெரும் வியாபாரங்களில் கொடிகட்டிப்பறக்கக் காரணம் அன்று அவர்களது முன்னோர் சிறு வியாபாரங்களில் ஈடுபட்டு தங்களது பொருளாதாரத்தை வளர்த்துக் கொண்டவர்கள் தான். சீனர்கள் மட்டும் அல்ல நமது தமிழ் முஸ்லிம்கள், குஜாராத்தியர், மலபாரிகள் என்று யாரை எடுத்துக் கொண்டாலும் அந்த வழியில் வந்தவர்கள் தான்.
சிறு வியாபாரங்களில் நாம் ஈடுபடும் போது குறைந்தபட்சம் இரண்டாவது, மூன்றாவது தலைமுறையில் அவர்கள் அதனை பெருந்தொழிலாக மாற்றி அமைத்து விடுவார்கள். அதற்கு ஒரு தொடக்கம் தேவை. தொடக்கம் இருந்தால் தான் அதன் நீட்சியும் சிறப்பாக அமையும்.
நமது சமுதாயத்தில் வியாபாரம் தொடங்குவதையே ஏதோ பாவம் செய்வதைப் போன்ற ஒரு தோற்றத்தை நமது சுற்றுச்சூழல் ஏற்படுத்திவிடுகிறது.வியாபாரத்தில் யார் யார் தோற்றுப் போனார்கள் என்கிற புள்ளிவிவரத்தை நமக்கு அடுக்குவார்கள்! வெற்றி பெற்றவர்களைப் பற்றி அவர்கள் வாய் திறக்கமாட்டார்கள். உண்மையில் தோல்வி அடைந்தவர்களை விட வெற்றி பெற்றவர்களே அதிகம்.
உங்களைச் சுற்றிப் பாருங்கள். உங்கள் நண்பர்கள் அனைவருமா வியாபாரத்தில் தோல்வி அடைந்தவர்கள்? வெற்றி பெற்றவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்! அப்படி ஒருவர் வெற்றி பெற்றால் அதனை ஏதோ ஒரு குருட்டு அதிர்ஷ்டம் என நா கூசாமல் பேசுவார்கள்.
அதனால் தான் நாம் சொல்ல வருவதெல்லாம் நிறைய பணம் போட்டு வியாபாராம் செய்யுங்கள் என்று நாம் சொல்ல வரவில்லை. இருக்கிற பணத்தையெல்லாம் கொண்டுவந்து கொட்டுங்கள் என்று நாம் சொல்லவில்லை. சிறிய அளவு முதலீட்டில் சிறியதாகவே வியாபாரத்தை ஆரம்பியுங்கள். அதனை வைத்தே படிப்படியாக வியாபாரத்தை விருத்தி செய்யுங்கள்.
வியாபாரம் செய்ய ஆரம்பித்த பிறகு வெற்றியைப் பற்றியே யோசியுங்கள். நட்டம் என்கிற ஒரு சொல் இருப்பதை மறந்துவிட்டு செயலாற்றுங்கள்.
வியாபாரம் செய்வோம்! வெற்றி பெறுவோம்!
No comments:
Post a Comment