பணம் சம்பாதிப்பதில் பல வழிகள் இருக்கலாம். ஆனால் எல்லாருக்கும் தெரிந்த வழி என்றால் அது வியாபாரம் செயவது மட்டுமே! அது தான் பணம் கொட்டுகிற இடம்!
வேறு வழிகள் ஏதேனும் இருக்கின்றனவா என்று பார்த்தால் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.
உலகளவில் எடுத்துக் கொண்டால் யூதர்கள் தான், பணம் என்று வரும் போது, முன்னணியில் நிற்கின்றனர். நமது நாட்டில் சீனர்களுக்குத் தான் முதலிடம். என்ன தான் கபடி ஆடினாலும் அவர்களை அடித்துக் கொள்ள ஆளில்லை! நினைத்தால் அவர்களாகவே ஓர் அரசாங்கமாகவே இயங்க முடியும்!
சரி, நமது நிலை என்ன? மலேசியர்களில் மிகக் குறைந்த சம்பளம் வாங்குபவர்கள் என்றால் அது நாம் தான். எல்லாம் முதலாளிகள் வைத்ததுதான் சட்டம். நமக்கும் வேறு வழியில்லை!
இன்னும் எத்தனை ஆண்டு காலம் இப்படியே நாம் சொல்லிக்கொண்டு இருக்கப் போகிறோம்? இந்த வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கப் போகிறோம்?
அதனால் தான் நாம் சொல்லுவது எல்லாம் வியாபாரத்தில் இறங்குங்கள் என்பது! அதற்காக நாம் என்ன இலட்சக்கணக்கில் முதலீடு செய்து வியாபாரம் செய்யுங்கள் என்று சொல்ல வரவில்லை. சிறிய அளவில் செய்யலாம்.
கணவன் மனைவி வேலை செய்தால் ஒருவர் வேலை செய்யலாம் ஒருவர் வியாபாரம் செய்யலாம். என்னுடைய கருத்து பெண்கள் வியாபாரத்தில் ஈடுபடுவது தான் சிறப்பு. இப்போது பல இடங்களில் நாம் பார்க்கிறோம். பெண்கள் தான் சிறு சிறு வியாபாரங்களைச் செய்து வருகின்றனர். இன்னொன்று அவர்களிடம் ஒர் ஒழுங்கை எதிர்பார்க்கலாம். பொறுப்புணர்வு அவர்களிடம் உண்டு. குடும்ப நலன், பிள்ளைகளின் கல்வி இவைகளைப் பற்றியெல்லாம் யோசிப்பவர்கள் பெண்கள் மட்டுமே. மேலும் வாடிக்கையாளர்களிடம் வெற்றிகரமாகப் பேசி விற்பனை செய்பவர்கள் பெண்கள். அவர்களிடம் இயற்கையாகவே அமைந்தது அந்த குணம்
எப்போது வியாபாரம் செய்ய நல்ல நேரம்? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை! எல்லாமே நல்ல நேரம் தான். வியாபாரம் செய்ய நல்ல நேரம் என்றால் எப்போது உங்களுக்கு வியாபாரம் செய்ய ஆர்வம் பொங்கி எழுகின்றதோ வியாபாரத்தை தொடங்கி விடுங்கள்.
No comments:
Post a Comment