அடுத்த பதினைந்தாவது பொதுத் தேர்தல் பற்றியான பல செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்த ஆண்டு வரும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
இதில் ஆளும் தரப்பினர் தான் 'உடனடித் தேர்தல்' என்பதில் அவசரம் காட்டுகின்றனர்! ஆனால் தேர்தல் நடப்பதற்கு இன்னும் ஓர் ஆண்டுக்கு மேல் இருப்பதால் அப்போது தேர்தல் வைத்தால் போதும் என்கிற நிலைப்பாடை எதிர்க்கட்சிகள் எடுக்கின்றன.
பொது மக்களும் அதனையே விரும்புகின்றனர். இன்னும் ஓர் ஆண்டு இருக்கும் போது ஏன் இப்போது அவசரம் காட்ட வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் ஏன்னும் நடைமுறையை நான்காண்டு தேர்தலாக ஏன் மாற்ற வேண்டும்?
இப்போது தேர்தல் வேண்டும் என்பதில் அதிகம் அக்கறை காட்டுபவர்கள் இப்போது நாட்டை ஆண்டுக் கொண்டிருப்பவர்கள். சென்ற பொதுத் தேர்தலில் மக்களால் கரிபூசப்பட்டவர்கள்! சென்ற தேர்தலில் மக்களால் உதாசீனப்படுத்தப்பட்டவர்கள்! இலாயக்கில்லாதவர்கள் என்று மக்களால் தூக்கி எறியப்பட்டவர்கள்!
ஆனால் இப்போது காற்று அவர்கள் பக்கம் அடிப்பதாக கனவுலகில் சஞ்சரிக்கும் அம்னோ, எம்.ஐ.சி., எம்.சி.ஏ. போன்ற கட்சிகள் மக்களிடமிருந்து அதிகம் எதிர்ப்பார்க்கின்றனர். அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்.
இந்தக் கட்சிகள் மக்கள் நிலை என்ன என்பதைப் புரிந்து கொள்ள மறுக்கின்றன. இப்போது தான் கோரோனா பெருந்தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது. தொழிற்சாலைகள் திறக்கப்பட்டு மக்களும் வேலைக்குப் போக ஆரம்பித்திருக்கின்றனர். பிரச்சனைகள் அப்படி ஒன்றும் முடிவுக்கு வந்துவிட்டன என்று சொல்வதற்கில்லை. இன்னும் தொழில்கள் வழக்க நிலைக்குத் திரும்பவில்லை. நாட்டின் நிலை சீரடைய இன்னும் சில காலம் பிடிக்கும்.
இந்த நிலையில் பொதுத் தேர்தலுக்கு ஏன் அவசரம் காட்ட வேண்டும் என்பது தான் கேள்வி. பொதுத்தேர்தலை நடத்த குறைந்தபட்சம் தொற்று இல்லாத காலங்களில் சுமார் நாற்பது, ஐம்பது கோடிகளாகவது தேவைப்படும். இன்றைய நிலையில் தொற்று நோய் முற்றிலும் அகலாத நிலையில் இன்னும் அதிகமாகவே செலவு செய்ய வேண்டிய நிலை வரும்.
எதிர்க்கட்சிகளுடன் ஆளுங்கட்சி போட்டிருக்கும் ஒப்பந்தம் ஜுலை மாதம் முடிவடையும். அதுவரை நாட்டில் எந்த குழப்பமும் ஏற்பட வாய்ப்பில்லை என நம்பலாம். முடிந்தவரை அடுத்த பொதுத் தேர்தல் வரும்போது தேர்தலை நடத்துவதே சிறப்பு.
தேர்தல் களம் காண இது சரியான தருணம் அல்ல என்பதே நமது கருத்து!
No comments:
Post a Comment