சில இறப்பு வீடுகளில் நம் இளைஞர்கள் செய்யும் வெறித்தனமான செய்கைகள் நம்மைத் தலைகுனிய வைக்கிறது என்பதில் மாற்று கருத்து இல்லை. ஏன் இவர்கள் இப்படி செயல்படுகிறார்கள் என்று நமக்கும் புரிவதில்லை.
Sunday, 31 March 2024
நமக்கும் பொறுப்பு வேண்டும்!
Saturday, 30 March 2024
ஏன் கண்டு கொள்ளவில்லை?
சமயத்தைப் பற்றி பேசுவதை யாரும் விரும்புவதில்லை. ஆனால் இந்து சமயத்தைக் கேவலப்படுத்தி சிலர் பேசுவதை யாராலும் தடுக்க முடிவதில்லை. தடுப்பதற்கு யாருக்கு அதிகாரம் உண்டு என்றும் புரியவில்லை. எல்லாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
தேவையற்ற ஒரு பிரச்சனையை, தேவையில்லாமல் கிளப்பிவிட்டு, அது பற்றி பேசி, தேவையற்ற விவாதங்களைக் கிளப்பி ஒரு சிலர் பேசிக் கொண்டிருப்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சமயத்தைப் பற்றி பேசி அதனை சர்ச்சையாக்குவதில் யாருக்கென்ன இலாபம்?
எந்த ஒரு மதத்துக்காரனும் தன்னுடைய மதம் தாழ்ந்தது என்று எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. முதலில் அதனைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் கரடியாய்க் கத்துங்கள் அதற்காக உங்கள் மதம் உயர்ந்தது என்று எந்த கரடியும் ஒத்துக்கப் போவதில்லை. ஏன்? எவரஸ்ட் மலை மீது ஏறி எகிறி எகிறி குதித்து தலைகீழாக நின்று கத்துங்கள் அதற்கெல்லாம் யாரும் மசியப்போவதில்லை.
ஒரே காரணம் தான். அவனவனுக்கு ஒரு மதம் உண்டு. அதைத்தான் அவன் காலங்காலமாக வழிபட்டு வருகிறான். அந்த மதத்தின் மூலம் அவனுக்கு எந்தத் தாழ்வும் வந்ததில்லை. உலகில் சராசரி மனிதன் வாழும் வாழ்க்கையைத் தான் அவனும் வாழ்கிறான். அதனால் உங்கள் மதமோ எங்கள் மதமோ அவனை உயர்த்தி விடவாப் போகிறது? மதம் உயர்த்தாது உழைப்புத்தான் உயர்த்தும்.
மனிதன் சாமி கும்புடுகிறானே அதுவே பெரிய விஷயம். சாமியே வேண்டாம் என்று வெறுப்பவர்களும் இருக்கிறார்கள். நாத்திகர்கள் அதைத்தானே செய்கிறார்கள்? ஆனால் ஒன்றை யோசித்தது உண்டா? நாத்திகம் பேசுகிறவனால் எந்த மதப்பிரச்சனையும் வந்ததில்லை. மதத்துக்காக அடித்துக் கொள்வதில்லை. எந்த நாட்டிலாவது நாத்திகனால் வம்புதும்பு ஏதேனும் வந்ததுண்டா? அடிதடி வந்ததுண்டா?
நாம் சொல்ல வருவதெல்லாம் ஒன்று தான். மதத்தை வைத்துக் கொண்டு அரசியல் நாடகம் ஆடாதீர்கள். உங்களுக்கு அதனால் இலாபம் வருகிறது என்றால் தாராளமாக வரட்டும், கொட்டட்டும்! முடிந்தால் மலேசியாவின் ஒரு கோடிஸ்வரனாக வர முயலுங்கள். உங்களைப் பாராட்டுகிறோம். யாருக்கும் உங்கள் மீது கோபமில்லை. ஒரு மதத்தைத் தேர்ந்து எடுப்பது, தொழிலை தேர்ந்தெடுப்பது உங்கள் உரிமை. ஆனால் பிற மதத்தினரின் நம்பிக்கையைச் சிதைப்பது உங்களுக்கு உரிமையில்லை.
பிற மதங்களைப் பற்றி பேச யாரும் உங்களுக்கு அனுமதி வழங்கவில்லை என்பதை மறக்க வேண்டாம்!
Friday, 29 March 2024
நல்ல காலம் பொறக்குது!
நாட்டின் பொது எதிரி என்றால் ஊழல் என்பது அனைவருக்கும் தெரியும். தெரிந்து என்ன பயன்? வாயை மூடிக்கொண்டு தான் இருக்க வேண்டும். காரணம் அது அதிகாரம் படைத்தவர்களின் ஆதிக்கத்தில் இருக்கும் போது அனைவருமே அடங்கிப் போகத்தான் வேண்டியுள்ளது.
பிரதமர் அனவார் பதவிக்கு வந்த பிறகு ஒரு சில மாற்றங்கள் தெரிந்தன. அவரால் என்ன செய்ய முடியுமோ அதனை அவர் செய்து வருகிறார். கொஞ்சம் கொஞ்சமாக, ஒவ்வொன்றாக, ஒரு சில விஷயங்கள் வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்திருக்கின்றன. ஊழலை அவ்வளவு எளிதில் வெளிக்கொண்டு வந்துவிட முடியாது. பிரதமர் என்ன தான் முயற்சி செய்தாலும் அவர் பலரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகத்தான் வேண்டும்.
இந்த நேரத்தில் நல்ல செய்தி ஒன்றும் வெளியாகி இருக்கிறது. நமது மாமன்னரே களத்தில் இறங்கியிருக்கிறார் என்பது தான் அந்த செய்தி. ஆமாம் அவர் சொந்த மாநிலமே சிங்கப்பூர் அருகில் இருப்பதால் அங்கு ஊழல்வாதிகளுக்கு என்ன தண்டனை என்பதை அறிந்தவர். சிங்கப்பூர் நாடு ஊழலற்ற நாடு என்பது போல, அவர் ஆளும் மலேசியா நாடும் ஊழலிருந்து விடுபட வேண்டும் என்று நினைப்பதில் எந்த குற்றமுமில்லையே!
மாமன்னர் பதவிக்கு வருமுன்னரே பல கருத்துக்களைக் கூறி இருந்தார். அதில் ஊழல், இலஞ்சம் என்பதில் அதிகக் கவனம் செலுத்து விரும்புவதாகக் கூறி இருந்தார். சொன்னது போலவே தனது பணியை ஆரம்பித்துவிட்டார்.
நமக்கு அதிலே மகிழ்ச்சி தான். பூனைக்கு யார் மணி கட்டுவது என்று பேசிக் கொண்டிருந்த நமக்கு "இதோ நான் இருக்கிறேன்!" என்று முழக்கமிட ஆரம்பித்துவிட்டார் மாமன்னர்! மணி கட்டுவது என்பதெல்லாம் அதிகாரத்தில் உள்ளவர்களால்தான் முடியும்.
இதில் இந்தியர்களில் நிலைமை என்னவாக இருக்கும்? சிடேக், மித்ரா என்று சொல்லி எத்தனையோ அரசியல்வாதிகள் கொள்ளயடித்தார்களே அவர்கள் மட்டும் தப்பிக்க முடியுமா? அவர்களுக்கும் இருக்கிறது ஆப்பு என நம்பலாம்.
மித்ரா மட்டும் அல்ல இன்னும் எத்தனையோ கொள்ளைகள் நடந்தன. யாரால் என்ன செய்ய முடிந்தது? அதிகாரம் அவர்கள் கையில் இருந்தது. அதனால் யாராலும் எதனையும் செய்வதற்கில்லை. இப்போது தான் கொஞ்சம் வெளிச்சம் தெரிகிறது. பார்ப்போம்!
நல்ல காலம் பொறக்குது!
Thursday, 28 March 2024
நெருப்போடு விளையாடாதீர்கள்!
Wednesday, 27 March 2024
இனியும் ஆசிரியர் தொழிலா?
Minister of Education: Fadhlina Sidek
Tuesday, 26 March 2024
கோடரிக் காம்பு!
இந்து மதத்தைப் பற்றி இஸ்லாமிய மதபோதகர் ஸம்ரி வினோத் தனது விபரீதக் கருத்துகளை வெளியிட்டு வருகிறார். அதனால் இந்துக்களின் கோபத்திற்கு அவர் ஆளாகியிருக்கிறார். இருக்கும் இடம் வலுவான இடம் என்பதால் வாய் கொஞ்சம் அகலமாகவே திறக்கும் என்பதில் ஐயமில்லை!
அவரைப் பற்றி நாம் குறை சொல்லுவதில் பயனில்லை. அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலையை அவர் செய்கிறார். அவர் ஆட்டுவிக்கப் படுகிறார் என்று தான் சொல்ல வேண்டும். இந்துக்களைச் சினமூட்டும் வேலையை மீண்டும் செய்ய ஆரம்பித்திருக்கிறார். இருக்கட்டும். அவர் செய்யவில்லை என்றால் அவர் தொழில் பாதிக்கப்படும்.
இவரைப் போன்ற நபர்களின் செயலினால் நிச்சயமாக அமைதியின்மை ஏற்படத்தான் செய்யும். அதனால் தான் நிறைய கண்டனக் குரல்களை நாம் பார்க்கிறோம். வேறு வழியில்லை. சமயத்தை இழிவுபடுத்தினால் அங்குச் சமாதானம் நிலவ வாய்ப்பில்லை.
இந்து சகோதரர்களுக்கு ஒரு வேண்டுகோளை நான் வைக்கிறேன். ஆளுக்கு ஆள் வன்மத்தைக் கையில் எடுப்பதைவிட இந்து சமயத்தின் சார்பில் ஒரு குழுவாக செயல்படுவது அவசியம். இந்து சமயத்தினர் மட்டுமல்ல அனைத்து சர்வ சமயத்தினரும் சேர்ந்து ஒரு குழுவாகச் செயல்பட்டு சம்பந்தப்பட்ட அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இந்துக்களையே ஒருவன் குறிவைக்கிறான் என்றாலும் அதற்கும் சர்வ சமயத்தினரும் கூடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
நிச்சயமாக நீங்கள் அதனைத்தான் செய்வீர்கள் என்பது எனக்குப் புரிகிறது. இருந்தாலும் தெரிவிப்பது எனது கடமை. இந்தப் பிரச்சனையில் இளைஞர்கள் கோபப்படுவது இயல்பே. நம்மைப் பொறுத்தவரை இதனைத் தீர்க்க பேச்சுவார்த்தை ஒன்றே வழி. நாம் ஒரு பலவீனமான சமுதாயம் என்பது அவனுக்குப் புரிகிறது. சீன சமுதாயத்தோடு அவர்கள் மோதுவதில்லை.
அதனால் நமக்குத் தெரிந்ததெல்லாம் பேச்சுவார்த்தை மட்டும் தான். மற்றபடி நியாயங்கள் எல்லாம் எடுபடுவதில்லை. என்ன செய்வது? நமக்குத் தகுதி இல்லாதவர்களோடு உட்கார்ந்து பேசுவதைத் தவிர வேறு என்ன தான் செய்ய முடியும்?
வருங்காலங்களில் இது போன்ற பிரச்சனைகள் எழாது என நம்பலாம். படித்த சமுதாயம் புரிந்துணர்வோடு செயல்படும். அந்நாள் சீக்கிரமே வரும். அதுவரை பொறுமை காப்போம்!
Monday, 25 March 2024
வாங்கோ! பிரியாணி சாப்பிடலாம்!
அட! அன்று ஒரு மலாய் உணவகத்திற்குப் போனால் அங்கேயும் பிரியாணி! ஒன்று மட்டும் நிச்சயம். இப்போது இங்கு விற்கப்படும் பிரியாணிகளைச் சாப்பிட்டால் அதன்மீது உள்ள ஆசையே போய்விடும்!
பிரியாணி என்பது ஒரு விசேஷமான தயாரிப்பு. யார் வேண்டுமானாலும் அந்த உணவைத் தயாரித்து விடலாம் என்று நினைப்பது பெரிய கற்பனை! அதற்கென்று பல படிநிலைகள் உண்டு. அதனை வரிசையாகக் கடைப்பிடித்து ஒவ்வொரு படியாகச் செய்யும் போது தான் அது பிரியாணியாக இருக்கும்.
நினைத்தால் உடனடியாகப் பிரியாணி செய்துவிட முடியும் என்பதெல்லாம் வீண். எந்த ராணி செய்தாலும் அது பிரியாணியாக இருக்காது. நமது நாட்டைப் பொறுத்தவரை நல்ல பிரியாணிக்கு வாய்ப்பில்லை. நான் பிரியாணி விரும்பி அல்ல. ஆனால் நான் இது நாள் சாப்பிட்டவரை எனக்குத் திருப்தி இல்லை. பெரும்பாலோரைப் பொறுத்தவரை தமிழ் நாட்டுப் பிரியாணிக்கு ஈடில்லை என்பது தான். அதுவும், பிரியாணியைப் பொறுத்தவரை, இஸ்லாமிய சகோதரர்களுக்குத் தான் முதலிடம். முற்றிலுமாக பிரியாணி நூறு விழுக்காடு அவர்களின் தயாரிப்பு தான்.
சமீப காலங்களில் ஏகப்பட்ட தமிழக உணவகங்கள் இங்கு கிளைகளைத் திறந்து வருகின்றன. ஆனால் அங்கும் கூட பிரியாணி தயாரிக்கும் நல்ல சமையலர் இல்லை என்பது தான் சோகம். அங்குப் போகிறவர் எல்லாம் "நல்லா இல்லே" என்று தான் சொல்லுகிறார்கள். நல்லா இருக்கு என்று யாரேனும் சொன்னால் அந்த உணவகத்தின் சமையல்காரர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் என்று பொருள். அல்லது இன்னொரு குற்றச்சாட்டையும் சொல்லலாம். உணவில் சேர்க்க வேண்டிய பொருள்களைக் குறைத்தோ அல்லது தவிர்த்தோ அவர்கள் சமைக்கலாம். எதைக் குறைத்தாலும் கூட்டினாலும் விலையில் எந்த மாற்றமுமில்லை! விலை குறையும் என்று கனவு காண்பதோடு சரி!
நமக்கு ஒரு வருத்தம் உண்டு. மலேசியாவைப் பொறுத்தவரை எல்லா உணவகங்களுமே பிரியாணி செய்கிறார்கள். பழையவர்களோ, புதியவர்களோ எல்லா உணவகங்களுமே பிரியாணி உணவைத் தயாரிக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் தரமான பிரியாணிகள் கிடைப்பதில்லை. கிடைக்க வழியில்லை! செய்யத் தெரியாதவர்களிடம் பிரியாணி எப்படி இருக்கும்?
நம்முடைய உணவகங்கள் முறையாகக் கற்றுக்கொண்டவர்களை வைத்து பிரியாணி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இங்கு எந்தக் காலத்திலும் நல்ல பிரியாணி கிடைக்க வழியில்லை!
Sunday, 24 March 2024
ஒற்றுமைத் துறையா? பிரதமர் துறையா?
Saturday, 23 March 2024
எதிர்கட்சிக்கு வாய்ப்பு?
வருகின்ற இடைத் தேர்தலில் ஒரு சோதனை. அந்த இடைத் தேர்தலில் இந்தியர்கள் தங்களது ஒற்றுமையைக் காட்டுவார்களா என்று பரிசோதிக்கும் களம்.
இந்தியர்களை எல்லாகாலங்களிலும் ஏமாற்றலாம் என்று நினைப்பவர்களுக்கு ஒரு பாடம் கற்பித்துக் கொடுக்க வேண்டிய நேரம். அதனை நாம் எப்படிப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறோம். என்பதைப் பொறுத்துத்தான் அது எச்சரிக்கை மணியா என்ன என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.
கோலகுபுபாரு, சிலாங்கூர், மாநில சட்டமன்ற தொகுதி காலியானதை ஒட்டி இன்னும் மூன்று மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப் பெற வேண்டும். அங்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஜ.செ.கட்சியின் திருமதி லீ, மார்ச்-21-ம் தேதி புற்று நோய் காரணமாக மரணமடைந்தார்.
கோலகுபுபாரு தொகுதியில் மலாய்க்காரரே அதிகமாக இருந்தாலும் சீனர்களும் இந்தியர்களும் சேரும்போது சிறிய அளவில் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர். அதனால் 18 விழுக்காடு உள்ள இந்தியர்களின் வாக்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இங்கு ஆளுங்கட்சி வெற்றி பெறுகிறதோ அல்லது எதிர்க்கட்சி வெற்றி பெறுகிறதோ அதனால் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படப்போவதில்லை. ஆனால் நம்மைப் பொறுத்தவரை இந்தியர்களின் வாக்கு எண்ணிக்கை எந்தப்பக்கம் சாய்கிறது என்பது தான் முக்கியம்.
புதிய அரசாங்கம் பதவி ஏற்றதிலிருந்து நமது தரம் கீழ்நோக்கிப் போகின்றதே தவிர எதுவும் மேல் நோக்கிப் போவதாகத் தெரியவில்லை. கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு - இப்படி எந்த ஒரு பிரச்சனையும் தீர்க்கப்படும் என்கிற உத்தரவாதம் இல்லை. அதுவே பெரிய சிக்கல்.
நமது அதிருப்தியைப் பலவகைகளில் தெரிவித்துக் கொண்டுதான் வருகிறோம். அவைகள் எல்லாம் ஊடகங்களில் எதிரொலிக்கத்தான் செய்கின்றன. ஆனால் தேர்தலில் எதிரொலிப்பது என்பது வேறு. அது கொஞ்சம் ஆழமாகவே எதிரொலிக்கும்! படபட வைக்கும்!
பார்ப்போமே! ஆதரவு ஒற்றுமை அரசாங்கத்திற்கு அதிகம் என்றால் நாம் பிரதமர் அன்வாரின் தலைமைத்துவத்தில் திருப்தி அடைகிறோம் என்பது பொருள். அதுவே எதிரணிக்கு ஆதரவு என்றால் அது ஆளுங்கட்சிக்குப் பயமுறுத்தலாக அமையும் என்று எடுத்துக் கொள்ளலாம்!
முன்பெல்லாம் அரசாங்கத்தின் மீதான நமது அதிருப்தியைக் காண்பிக்க ஐம்பது அறுபது ஆண்டுகள் பிடித்தன. இனி அப்படியெல்லாம் இருக்க முடியாது. தருணம் வரும்போது அதனை உடனடியாகக் காட்ட வேண்டும். யாரும் நமக்குக் கை கொடுக்கப்போவதில்லை.
நமது கையே நமக்கு உதவி!
Friday, 22 March 2024
முன்னேற்றத்துக்குத் தடை: இலஞ்சம்!
பொதுவாக பல நாடுகளின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பது இலஞ்சம் தான்! நமது அருகில் இருக்கும் சிங்கப்பூர் நாட்டை ஒதுக்கிவிடுவோம். நம் நாட்டுக்கும் அந்த நாட்டுக்கும் எந்த வகையிலும் ஒத்துப் போக வழியில்லை! இரு நாடுகளுமே இருவேறு துருவங்கள்! மாதிரிக்கு ஒன்றைச் சொல்லலாம். ஒரு பிரச்சனை வந்தால் சிங்கப்பூர் அரசாங்கம் அதனை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து சரி பண்ணுவதில் முனைப்புக் காட்டும். இங்குள்ள நிலைமை வேறு. நிதியைப் பெற்றுக் கொள்ளுவார்கள். பிரச்சனையைப் பேசினால் சாமி கண்ணைக் குத்தம் என்பார்கள்! ஆக ஒன்றும் ஆகாது!
Thursday, 21 March 2024
மெட்ரிகுலேஷன் கல்வி!
மெட் ரிகுலேஷன் கல்வி என்றாலே ஒவ்வொரு ஆண்டும் இந்திய மாணவர்களுக்குப் பிரச்சனைக்குரியதாகவே தொடர்கிறது.
அதுவும் பிரதமர் அன்வார் வந்த பிறகு பிரச்சனை இன்னும் மோசமடைந்துவிட்டது. ஒவ்வொரு முறையும் போராட்டம் செய்ய வேண்டிய சூழலே ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.
பொதுவாக எல்லாவற்றிலும் பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால் பிரச்சனையாகவே தொடர்வது எந்த வகையிலும் நியாயமில்லை. முற்றுப்புள்ளியே வைக்க முடியாத அளவுக்கு அப்படி எதுவும் இல்லை.
முன்னாள் பிரதமர் நஜிப் அவர்களின் காலத்தில் 2,500 இடங்கள் ஒதுக்கப்பட்டன என்று கூறப்படுகிறது. சென்ற ஆண்டு அதுவும் பிரதமர் அன்வார் காலத்தில், 1,000 த்திற்கும் மேற்பட்ட இடங்களே ஒதுக்கப்பட்டன.
ஒரு விஷயம் நமக்குப் புரியவில்லை. கல்வி அமைச்சின் செயல்பாடுகளைப் பார்க்கும் போது ஒவ்வொரு ஆண்டும் இந்திய மாணவர்கள் மெட்ரிகுலேஷன் கல்விக்காக போராட வேண்டும் என்கிற சூழலை ஏற்படுத்துகிறதோ என்று தான் நினைக்க வேண்டியுள்ளது.
நம்மைக் கேட்டால் மிக எளிதாக இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும். ஏற்கனவே முன்னாள் பிரதமர் நஜிப் காட்டிய பாதை. - அதுவே சிறந்தது. ஒவ்வொரு ஆண்டும் 2,500 இந்திய மாணவர்கள் மெட் ரிகுலேஷன் கல்விக்காக அனுமதிக்க வேண்டும். அப்படி ஒரு எண்ணிக்கையை ஒவ்வொரு ஆண்டும் கொடுத்துவிட்டால் அதன் பிறகு யாரும் எந்தக் கேள்வியும் கேட்கப்போவதில்லை.
நமக்குள்ள தலைவலி எல்லாம் எத்தனை ஆண்டுகளாக இந்தப் பிரச்சனைக்காக நாம் பேச்சுவார்த்தைகள், ஆர்ப்பாட்டங்கள் என்று போய்க்கொண்டே இருப்பது, என்பது தான். ஒரு சிறிய பிரச்சனையைக் கூட பிரதமர் அன்வார் அரசாங்கம் தீர்வு காண முடியவில்லையே! மெட் ரிகுலேஷன் கல்வியைப் பொறுத்தவரை இந்திய மாணவர்களுக்கு அது தீராத பிரச்சனை. ஒவ்வொரு ஆண்டும் 'கிடைக்கும் ஆனா கிடைக்காது!' என்கிற பாணியிலேயே இழுத்துக் கொண்டே போகிறது!
பிரதமர் அன்வார் எந்தவொரு இந்தியர் பிரச்சனையையும் கையாள முடியவில்லை என்பது தான் இந்நாள் வரை அவர் மீதான குற்றச்சாட்டு. அதை பொய்யென்று சொல்லவும் முடியாது.
பிரதமர் இந்த ஆண்டாவது இந்தப் பிரச்சனையை ஒரு முடிவுக்குக் கொண்டு வரவேண்டும். கல்வியில் கூட பாரபட்சம் பார்ப்போம் என்றால் அப்படிப்பட்ட அராசங்கம் எங்களுக்குத் தேவையா என்று நாங்களும் சிந்திக்க ஆரம்பித்துவிட்டோம்.
கல்வி மிக வலிமையான ஆயுதம். அது எங்களுக்கும் சேர்த்துத் தான்!
Wednesday, 20 March 2024
இது தான் உண்மை!
வெளிநாட்டு தொழிலாளர்கள்
வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நாட்டில் தேவைக்கு மேல் குவிந்து கிடக்கின்றனர் என்பது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் 'அப்படியெல்லாம் இல்லை' என்று ஒன்றும் தெரியாதது போல நடிப்பவர்கள் ஒரு பக்கம்.
இரண்டாவது நியாயவாதிகள் வெளிநாட்டுத் தொழிலாளர்களை வைத்துத் தங்களின் வளத்தைப் பெருக்கிக் கொண்டவர்கள்! இவர்கள் தான் நாட்டில் இன்று ஏற்பட்டிருக்கும் குழப்பத்திற்குக் காரணம். ஆனால் அவர்களை யாரும் கண்டுகொள்ளப் போவதில்லை. அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு என்று பேசுபவர்கள்.
அரசாங்கத்தில் உள்ளவர்கள் தங்களின் பொறுப்பைத் தட்டிக்கழித்தால் இது தான் நடக்கும்.
நாட்டின் தேவைகளுக்கு வெளிநாட்டினரின் சேவை தேவை என்றால் அதற்கு யாரும் எதிர்ப்பைத் தெரிவிக்கப் போவதில்லை. அளவுக்கு அதிகமானவர்களை நாட்டினுள் கொண்டுவந்து அவர்களின் கடப்பிதழ்களைப் பிடுங்கி வைத்துக் கொண்டு, அவர்களுக்கு வேலையும் கொடுக்காமல் அவர்களைப் பட்டினி போட்டுச் சாகடிப்பதை - யாருக்கும் அந்த உரிமையை - அரசாங்கம் வழங்கவில்லை.
ஆனால் ஒருசிலர் அதனைத் தங்களின் உரிமையாகக் கருதுகின்றனர்! வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் பெரும்பாலும் ஏழைகள். தங்களது குடும்ப சொத்துகளை விற்றோ அடகு வைத்தோ இங்கு வருகின்றனர். இங்கு வந்த பிறகு அவர்கள் ஏமாற்றப்பட்டால் அவர்களால் என்ன செய்ய முடியும்? அறிமுகம் இல்லாத ஊரில் அடங்கிப் போவதைத் தவிர வேறு என்ன தான் வழி?
ஆனாலும் அவர்களில் பலர் துணிச்சலோடு களத்தில் இறங்கினர். அதன் விளைவு தான் இன்று அவர்கள் சிறு சிறு தொழில்களில் ஈடுபட்டு இன்று பெரும் தொழில்களில் வளர்ந்து இன்று மலேசியர்களுக்கு மிரட்டலாக விளங்குகின்றனர்!
முதலில் வெளிநாட்டவர்களுக்கு வியாபாரம் செய்ய எந்த நாடும் உரிமம் கொடுப்பதில்லை. ஆனால் அவர்களுக்கு எல்லா சலுகைகளும் இங்குக் கொடுக்கப்பாடுகின்றன. உள்நாட்டவர்களைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. எல்லாமே இலஞ்சம் என்றால் என்ன தான் செய்ய முடியும்?
அரசாங்கம் இந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு என்ன வழியைக் கையாளும் என்பது நமக்குத் தெரியவில்லை. அவர்களைப் போலவே நாமும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். வெளிநாட்டவர் சிறு சிறு தொழில்களில் ஆழமுடன் வேரூன்றிவிட்டனர். இப்போது அவர்கள் உள்ளூர் வணிகர்களாகவும் வலம் வருகின்றனர்!
எல்லாம் நன்மைக்கே என்று சொல்லுவார்கள். இதுவும் நனமைக்குத்தான்!
Tuesday, 19 March 2024
முடிவுக்கு கொண்டு வாருங்கள்!
Monday, 18 March 2024
கொள்ளிக்கட்டை என்பது சரிதான்!
கைப்பேசியை ஒரு பேராசிரியை கொள்ளிக்கட்டை என்று வர்ணிப்பார்! மிகச் சரியான ஒரு சொல் தான்!
Sunday, 17 March 2024
இன்னொரு பெருந்திட்டமா?
மலேசிய இந்தியர் காங்கிரஸ் தான் முதன் முதலாக - இந்தியர்களுக்கென - இப்படி ஒரு பெருந்திட்டத்தை தொகுத்தவர்கள். அதனைத் தொகுத்தவர் மறைந்த டத்தோ பத்மனாபன் அவர்கள். அதற்குப் பின்னர் பல மாற்றங்கள் அதே ம.இ.கா. விலிருந்தே வந்தன!
ஆகக் கடைசியாக இன்றைய ஒற்றுமைத்துறை அமைச்சர், தன்னுடைய சரவாக் மாநிலைத்தைச் சேர்ந்த பெமாண்டு என்கிற அமைப்பின் மூலம் மீண்டும் ஒரு மாபெரும் பெருந்திட்டத்தை வெளிக் கொணரவிருக்கிறார். சரவாக்கில் உள்ள ஒரு நிறுவனம் மேற்கு மலேசியாவில் உள்ள இந்தியர்களின் மேம்பாட்டுக்காக ஒரு திட்டத்தை வரைவது நமக்குப் புதிதாக இருக்கலாம்.
சரி இதனையே இங்கிலாந்தில் உள்ள ஒரு நிறுவனத்திடம் இந்தத் திட்டத்தை ஒப்படைத்திருந்தால் ...? நமது அரசியல்வாதிகள் வாய் திறந்திருப்பார்களா? வெள்ளைக்காரன் என்றால் ஆகா ஓகோ என்று புகழ்ந்து தள்ளியிருப்பார்கள்! அந்த அளவு அவன் மேல் நம்பிக்கை. இப்போது என்னன்னவோ கதைகளைக் கூறுகிறார்கள்!
இப்போது நான் சொல்ல வருவது: 'இதையும் பார்த்து விடுவோமே!' என்று நான் சொல்ல வரவில்லை. இப்படி ஒரு திட்டத்திற்காக ஒற்றுமைதுறை அமைச்சர் தானே முன் நின்று அந்த நிறுவனத்திடம் - பிரச்சனையைப் புரிந்து கொள்ள - நடவடிக்கை எடுத்திருக்கிறாரே அதற்காக அவரைப் பாராட்டலாம். இங்குள்ளவர்களுக்கே நமது பிரச்சனை புரியவில்லை. அவர், சம்பந்தமில்லாத இன்னொரு மாநிலத்தைச் சேர்ந்தவர். பிரச்சனையைப் புரிந்து கொண்டால் தான் அவரால் அதற்கான தீர்வைக் காண முடியும்.
ஓர் அமைச்சர் என்கிற முறையில் திட்டங்கள் கிடைத்த பின்னர் அவர் செயல்பட வாய்ப்புகள் அதிகம். இன்றைய நிலையில் அவர் பிரச்சனைக்குப் புதியவர். இருக்கட்டும் அது ஒன்றும் பெரிய பிரச்சனை அல்ல. அந்தப் பெருந்திட்டம் கைக்கு வந்தபின்னர் அதனை வைத்துக் கொண்டு அவர் செயல்பட வாய்ப்புகள் அதிகம். அவர் செயல்பட மாட்டார் என்று யாராவது உத்தரவாதம் அளிக்க முடியுமா?
இந்திய சமுதாயத்தை அன்றே கைவிட்டவர்கள் ம.இ.கா. வினர். இப்போது ஜனநாயக செயல் கட்சியினர் இந்தியர்களைப் புறக்கணிக்க ஆரம்பித்திருக்கின்றனர். பி.கே.ஆர். இன்னும் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. ஆனால் இவர்களின் கைகளில் தான் நமது அரசியல் எதிர்காலம்.
பெருந்திட்டத்தை நான் வரவேற்கிறேன். ஆனால் அதற்கான கெடு என்பது இரண்டு மாதங்கள் போதுமானது. அதற்குப் பின்னர் மாண்புமிகு ஒற்றுமைத்துறை அமைச்சர் செயல்பட வேண்டும். இனி நமக்குக் காரணங்கள் வேண்டாம். செயல் தான் வேண்டும்.
Saturday, 16 March 2024
கடுமையான தண்டனை தேவை!
ஆனால் செய்திகளெல்லாம் பெரும்பாலும் வெளிநாட்டுப் பெண்கள் என்று தான் கூறுகின்றன. காவல்துறையினர் கைது செய்கின்றனர், தண்டனை அளிக்கப்படுகிறது. இப்படித்தான் நாம் அடிக்கடி செய்திகளைப் பார்க்கிறோம்.
இந்த முறை கொஞ்சம் வித்தியாசமான செய்தி. இந்தியாவிலிருந்து நான்கு பெண்கள் கடத்தி வரப்பட்டு விபச்சாரத் தொழிலில் கட்டாயப்படுத்தப் பட்டார்கள். ஏற்றுக்கொள்ள முடியாத செய்தி. பிழைப்பதற்கு வழியில்லாமல் இங்கு வந்தால் பிழைக்கலாம் என்று பெண்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாது போல் தோன்றுகிறது.
வேறு ஒரு நாட்டிலிருந்து கடத்தப்படுவது என்பது எத்துணை கொடூரமானது என்பது நமக்குப் புரிகிறது. இதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும். அந்நாட்டுடன் பலமான உறவு இருக்க வேண்டும்.
இது போன்ற குற்றங்களை இழைப்போருக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். உண்மையைச் சொன்னால் நம் நாட்டில் தண்டனைகள் கடுமையாக இல்லையோ என்று தான் நினைக்க வேண்டியுள்ளது. அப்படியிருக்க நியாயமில்லை. வேண்டுமானால் பல குற்றச்சாட்டுகள் போக வேண்டிய இடத்திற்குப் போகாமல் தடுக்கப்படுகிறது என்று சொல்லலாம். வல்லவன் வகுத்ததே வாய்க்கால் அவ்வளவு தான் வாய் திறக்க வழியில்லை!
எது எப்படியிருந்தாலும் இது போன்ற குற்றங்களுக்குத் தண்டனைக் கடுமையானதாக இருக்க வேண்டும். அவர்களின் ஆயுள் முழுவதும் தண்டனையை அனுபவிக்க வேண்டும். இப்போழுது சரியான தண்டனை சரியான குற்றவாளிக்குப் போய்ச் சேரவில்லை. எத்தனை பெரிய பிரச்சனையாக இருந்தாலும் அதனை பிசுபிசுத்துப் போய்விட செய்துவிடுகின்றனர்.
ஆனால் சமீபத்திய இந்த - கடத்தல் + விபச்சாரம் - குற்றம் சம்பந்தப்பட்டவர்களுக்கு எளிதாக தப்பிக்க முடியாது என்றே நமக்குத் தோன்றுகிறது.
இது போன்ற குற்றங்கள் கடுமையானவை. கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவை.
Friday, 15 March 2024
சிவப்பு வர்ணம் ஒழிக்க முடியாததா?
வீடுகளில் சிவப்பு வர்ணத்தை அடித்து அசிங்கப்படுத்துவதும், கார்களில் சிவப்பு வர்ணத்தை தெறிக்க விடுவதும் - இதெல்லாம் நாட்டில் பல ஆண்டுகளாக நடந்து கொண்டு தான் வருகிறது. காவல்துறை இதற்கெல்லாம் ஒரு முடிவைக் காண முடியவில்லை. முடிவு காணும் வரை அது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும். நாமும் சகித்துக் கொள்ளத்தான் வேண்டியுள்ளது.
Thursday, 14 March 2024
தமிழ் பள்ளிகளில் மாணவர் சரிவு
தமிழ் பள்ளிகளில் மாணவர் சரிவு சென்ற ஆண்டை விட சுமார் இருநூறு மாணவர்கள் குறைவு என்று அறிகிறோம்.
Wednesday, 13 March 2024
கொஞ்சம் காதில் போடுங்களேன்!
ரம்லான் மாதத்தில் ஏகப்பட்ட உணவுகள் குப்பைகளுக்குப் போகின்றன என்பதையறியும் போது வருத்தமாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய? நோன்பிருப்போர் சிலர் புரிந்து கொள்ள மறுக்கிறார்களே!
ஆனால் நம்மிடையே ஒரு கேள்வியும் உண்டு. ரம்லான் அல்லாத மற்ற மாதங்களில் மலேசியர்கள் உணவுகளை வீணடிப்பது இல்லையா? அப்படியெல்லாம் சொல்லிவிட முடியாது. வீணடிப்பு என்பது எப்போதுமே உண்டு.
அதனால் தான் அந்தப் பழக்கத்தை நம்மால் விட்டுவிட முடியவில்லை. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பார்கள். நம் தாய் எப்படி நம்மை வளர்த்தாரோ அதன்படி அனைத்தையும் சுடுகாடு மட்டும் கொண்டு தான் செல்லுவோம்! நமது பழக்க வழக்கங்களைத் தாயிடமிருந்து தானே கற்றுக் கொள்கிறோம்? இடையிலே நம்மால் நிறுத்த முடிவதில்லை!
கடந்த பத்தாண்டுகளாக, பினாங்கு பயனீட்டாளர் சங்கம், இந்த உணவு வீணடிப்பு சம்பந்தமாக பல பிராச்சாரங்களை மேற்கொண்டு வந்தாலும் அது ஏனோ போய் சேர வேண்டிய இடத்தில் சேரவில்லை. அதனால் தொடர் பிரச்சாரங்கள் தொடர்கின்றன. சென்ற ஆண்டு மட்டும் ரம்லான் மாதத்தில் சுமார் 90 ஆயிரம் டன் உணவுகள் குப்பைத் தொட்டிகளுக்குள் தஞ்சமடைந்திருக்கின்றன.
ஒன்று வியப்பைத் தருகிறது. ஸ்டார் பக்ஸ் நிறுவனத்தைப் புறக்கணியுங்கள் என்று சொன்னதும் அதனை வெற்றிகரமாக நிறைவேற்றியவர்கள் மலேசியர்கள். இப்போது அந்நிறுவனமே நம்மை வருந்தி வருந்தி அழைக்கிறது!
இந்தப் பிரச்சனைக்கு ஒரே தீர்வு தான் உண்டு. அம்னோ இளைஞர் பகுதி வாய் திறந்தால் அது நடக்கும் என்றே அவர்களே சொல்லிக் கொள்வார்கள். இதனை அவர்கள் ஏன் கையில் எடுக்கக் கூடாது? மக்கள் அவர்களது குரலுக்குச் செவிசாய்ப்பார்கள் என நம்பலாம் தானே. பாலஸ்தீன, காஸா பகுதியில் நிலவும் அசாதாரண நிலைமை அவர்களுக்குத் தெரியாமலா போகும். உணவு இல்லாமல் அவர்கள் படும் துயரம் நாளுக்கு நாள் மோசமடைந்து போய்க்கொண்டிருக்கிறதை நாம் அறியாமலா இருக்கிறோம். அறிகிறோம். அறிந்து என்ன செய்கிறோம்?
நாம் எதனையும் யார் மீதும் அழுத்தம் கொடுக்கவில்லை. உணவு வாங்குவதைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்று தான் சொல்லுகிறோம். நமது குடும்பத்திற்கான தேவைகள் என்ன என்பது ஓரிரு நாளில் தெரிந்துவிடும். அதனை வைத்து நாம் உணவுகளை 'பட்ஜட்' போட்டு வாங்களாம். இந்திய முஸ்லிம் குடும்பங்களில் எதையும் வீணடிக்க மாட்டார்கள். அங்கே ஓர் ஒழுங்கு உண்டு. அதனையே மற்றவர்களும் பின்பற்ற வேண்டும்.
சொல்லிவிட்டோம். நெஞ்சம் பொறுக்கவில்லை. கொஞ்சம் இதனையும் காதில் போட்டுக் கொள்ளுங்கள். அவ்வளவு தான்.
Tuesday, 12 March 2024
பள்ளி சிற்றுண்டிச்சாலை மூடப்பட வேண்டுமா?
புனித ரம்லான் மாதத்தில் பள்ளி வளாகங்களில் செயல்படும் சிற்றுண்டிசாலைகளின் நிலைமை என்ன?
Monday, 11 March 2024
என்னடா கலிகாலம்!
School Boys
Sunday, 10 March 2024
நன்றாகவே ஆடுகிறார்கள்!
ஆட்டம் சிறப்பாகவே இருக்கிறது! மற்ற இனத்தவர் கைதட்டி சிரிக்கும் அளவுக்கு ம.இ.கா. தனது ஆட்டத்தைச் சிறப்பாகவே ஆடிக் கொண்டிருக்கிறது!
அவர்களது கொள்கை நமக்குப் புரிகிறது. "நாங்களே, எங்களுக்குள்ளே ஆடிக்கொண்டோம்! உங்களை இந்த சமுதாயத்திற்காக ஆடவிடுவோமா?" என்று மார்தட்டிக் கொண்டிருக்கிறார்கள்!
நம்மைப் பொறுத்தவரை மித்ராவில் யார் பொறுப்பில் இருக்கிறார்கள் என்பது நமது பிரச்சனையல்ல. அது பிரதமரின் பிரச்சனை. நம்முடைய தேவை எல்லாம் உதவி யாருக்குத் தேவைப்படுகிறதோ அவர்களுக்கு மித்ரா உதவ வேண்டும். அதுவே நமது எதிர்பார்ப்பு.
ஆனால் எங்களைத்தவிர வேறு யார் பொறுப்புக்கு வந்தாலும் நாங்கள் சும்மா இருக்கப் போவதில்லை என்பது ம.இ.கா.வினரின் ஆட்டமாக இருக்கிறது! இந்த நிலையில் மித்ராவால் யாருக்கும் எந்தப் பயனுமில்லை என்கிற நிலைமை தான் மீண்டும் ஏற்படுகிறது. மித்ராவால் யாருக்கும் எத்தகைய பயனும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பது தான் ம.இ.கா.வின் பிரார்த்தனை.
உண்மையைச் சொன்னால் இது ம.இ.கா.விற்கும் பி.கே.ஆர். க்கும் ஏற்பட்டிருக்கும் போட்டி என்றே சொல்லலாம். ஒன்றை ம.இ.கா.வினர் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் இனி இந்தியர்களின் ஆதரவைப் பெற வாய்ப்பில்லை என்பது உங்களுக்கே தெரியும். நீங்கள் அந்தக் கட்சியோடு ஒட்டுவதும் உறவாடுவதும் எதற்காக என்பது தெரிந்ததுதான்.
உங்களுக்கு இனி வாய்ப்பில்லை என்று தெரிந்தும் உங்கள் தலைவர் என்ன செய்தாரோ அதையே நீங்களும் செய்கிறீர்களே அது வருத்தத்தை அளிக்கத்தான் செய்கிறது. நம்மால் ஒன்றைத்தான் சொல்ல முடியும். நீங்கள் செய்கின்ற பாவங்களை உங்கள் வாரிசுகளிடம் ஒப்படைத்துவிட்டுப் போகாதீர்கள். நல்லது செய்தால் நல்லது நடக்கும். கெட்டது செய்தால் கெட்டதே நடக்கும்.
இப்போது நாம் என்ன தான் சொல்ல வருகிறோம்? மித்ரா இப்போது ஒற்றுமைத் துறையின் கீழ் இயங்குகிறது. பிரதமர், அவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்துள்ளார். இனி அவர்களின் பாடு அவ்வளவு தான். இத்தனை ஆண்டுகள் மித்ராவின் மூலம் யாரும் பெரிதாக எதனையும் சாதித்துவிடவில்லை. இவர்கள் என்ன சாதிக்கப்போகிறார்கள் என்பதையும் பார்த்து விடுவோமே. இதற்கு ஏன் ம.இ.கா. தடையாக இருக்க வேண்டும்? அது தான் நமது கேள்வி.
சமுதாயத்தைக்கூறு போடும் வேலையை யார் செய்தாலும் குற்றம் குற்றமே! கூறுபோட்டுவிட்டு நீங்கள் இங்கிருந்து தப்பிவிட முடியாது! ஆட்டத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்பது தான் நமது ஆலோசனை.
Saturday, 9 March 2024
'மாமாக் 'உணவகங்களில் என்ன நடக்கிறது?
பொதுவாக 'மாமாக்' உணவகங்களுக்கு என்னதான் ஆயிற்று என்று கேட்கின்ற அளவுக்கு அந்த உணவகங்களின் நிலைமை வரவர மோசமடைந்து வருவதாகவே நமக்குத் தோன்றுகிறது.
என்ன தான் காரணமாக இருக்க முடியும்? நான் வழக்கமான ஒரு வாடிக்கையாளன். எனது பள்ளி காலத்திலிருந்தே நான் வாடிக்கையாளன் தான். அப்போது எல்லாம் பரோட்டா ரொட்டி (ரொட்டி சானாய்) அவர்களின் கடையில் தான் கிடைக்கும். பள்ளி காலங்களில் அதனைச் சாப்பிட்டே வளர்ந்தவன். இப்போதும் கூட அவர்களின் மீ கோரிங் எனக்குப் பிடிக்கும்.
சமீபகாலங்களில் அவர்களின் உணவகங்களைப் பற்றியான புகார்கள் அதிகமாகவே வருகின்றன. மாமாக் உணவகங்கள் பெரும்பாலும் அதிகமான மலாய் வாடிக்கையாளர்களைக் கொண்டவை.
இந்திய வாடிக்கையாளர்களை அவர்கள் குறை சொல்ல முடியாது. இந்தியர்கள் தான் எதற்கெடுத்தாலும் குறை சொல்லுபவர்கள் என்கிற குற்றச்சாட்டில் நியாயமில்லை. சமீபத்தில் வந்த குற்றச்சாட்டு ஒரு மலாய்க்கார வாடிக்கையாளரால் கொண்டுவரப்பட்டது. சரி அது யாராக இருக்கட்டும் அதுவல்ல பிரச்சனை. குடிக்கும் மைலோவில் கண்ணாடித் துண்டுகள் இருப்பது ஒன்றும் சாதாரண விஷயமல்ல. எந்த வாடிக்கையாளாராக இருந்தால் என்ன? அறியாமல் குடித்திருந்தால்? குழந்தைகள் குடித்திருந்தால்? அவர்கள் நிலை என்னாவது?
இது போன்ற குற்றச்சாட்டுகள் வரும்போது 'கடை சுத்தமில்லை' என்று கூறி இரண்டு வாரங்களுக்குக் கடையை அடைப்பதும் அதன் பின்னர் 'எல்லாம் சரியாகிவிட்டது' என்று கடையைத் திறப்பதும் சும்மா கண்துடைப்பு வேலையாகவே தோன்றுகிறது. சுகாதார அமைச்சு தனது பணியைச் சரியாக ஆற்றவில்லை என்று தான் நினைக்க வேண்டியுள்ளது.
சும்மா இரண்டு வாரம், மூன்று வாரம் தண்டனை என்பதெல்லாம் அது எத்தகைய குற்றச்சாட்டு என்பதைப் பொறுத்தது. எல்லா குற்றங்களுக்கும் பொருந்தாது. இந்தக் குற்றச்சாட்டு மிகக் கடுமையானது. அவர்கள் உரிமம் பறிபோயிருக்க வேண்டும். அவர்களுக்கு அதனால் பெரிய பாதிப்பு எதுவுமில்லை. வேறு ஒரு இடத்தில் புதிய பெயரில் புதிய உணவகத்தை ஆரம்பித்து விடுவார்கள்! மாமாக்களுக்கு சொல்லியா கொடுக்க வேண்டும்?
மாமாக் உணவகங்களுக்கு இப்படி ஒரு அவப்பெயர் வருவது நமக்கு வருத்தமளிக்கிறது. நம்முடைய ஆலோசனை எல்லாம் உங்களுடைய ஊழியர்களை நல்லபடியாக நடத்துங்கள். அவர்களை அலைய விடாதீர்கள். அவர்களைத் துன்புறுத்தினால் அதற்கான பலனை நீங்கள் அனுபவித்துத் தான் ஆக வேண்டும்.
கடை முதலாளிகள் தங்களை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் இது போன்ற சம்பவங்கள் தொடரவே செய்யும்.
Friday, 8 March 2024
கேவலப்படுத்தாதீர்கள்!
Thursday, 7 March 2024
இன்னும் மூடுகிற நிலைமைதானா?
ஆனால் "Goodyear" நிறுவனம் ஷா ஆலமிலுள்ள தனது தொழிற்சாலை வருகிற ஜூன் மாதத்தில் மூடுவிழா காணும் என்று அறிவித்திருப்பது அதிர்ச்சியமான செய்தி என்பதில் சந்தேகமில்லை.
கூட் இயர் நிறுவனம் என்பது மிகவும் பெயர் பெற்ற ஒரு நிறுவனம். ஏறக்குறைய மலேசியாவில் நூறு ஆண்டுகளை எட்டவிருக்கும் ஒரு நிறுவனம். கார் டயர்கள் என்றாலே அந்நிறுவனத்தின் டயர்கள் தான் கண்முன்னே வரும். எனது சிறு வயது முதலே அந்நிறுவனத்தின் விளம்பரங்களை நான் பார்த்து வருகிறேன். அதாவது பள்ளி காலத்திலிருந்தே!
மிகவும் புகழ் பெற்ற ஒரு நிறுவனம் இப்படி ஒரு முடிவை எடுப்பதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. அரசாங்கம் அதற்கான காரணத்தை தெரிந்திருக்கலாம். பெருந்தொற்று காலத்தில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டதற்கான காரணம் நமக்குத் தெரியும். ஆனால் இப்போது எந்தக் காரணமும் இல்லையென்றாலும் முடிந்தவரை அரசாங்கம் அதனைத் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டதா என்பது தெரியவில்லை.
இன்று நம்மிடையே வேலையில்லாதவர்கள் நிறையவே இருக்கின்றனர். இந்த நிலையில் இருக்கின்ற தொழிற்சாலைகளும் மூடப்படுகிறது என்றால் நாம் சரியான பாதையில் தான் செல்லுகின்றோமா என்பது புரியாத புதிராக இருக்கிறது.
வெளிநாடுகளிலிருந்து புதிய முதலீடுகள் நாட்டுக்குள் வருவது நல்ல செய்திகள் தான். ஆனால் அந்த முதலீடுகள் இன்றோ நாளையோ வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திவிட முடியாது. அது ஒரு சில ஆண்டுகள் பிடிக்கலாம். இப்போது மலேசியர்களுக்கும் வெளிநாட்டினருக்கும் வேலை வாய்ப்புகளைக் கொடுக்கும் தொழிற்சாலைகளைத் தக்கவைத்துக்கொள்ள அரசாங்கம் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
புதிய முதலீடுகள் வருவதற்குள் இருப்பவை 'தொடைத்துக்' கொண்டு போனால் நாட்டில் வாழ்வதற்கே இடமில்லாமல் போய்விடும். மக்கள் வாழ்வாதாரத்திற்கே வழியில்லை என்றால் என்ன செய்வார்கள்? வெளிநாட்டவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கொடுக்கவும் கடமைப்பட்டுள்ளோம். அவர்கள் என்ன செய்வார்கள்?
ஏற்கனவே நாட்டில் இயங்கும் தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்க வேண்டும். அதுவே நமது வேண்டுகோள்.
Wednesday, 6 March 2024
மீ கோரிங் சாப்பிடலாமா?
நம் நாட்டில் மீ கோரிங் சாப்பிடுகின்ற விஷயங்கள் எல்லாம் ஒரு பிரச்சனையே அல்ல. எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம் எங்கு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
பொதுவாக எல்லா இன உணவகங்களிலும் மீ சாப்பிடலாம். வெவ்வேறு மீ வகைகள் என்றால் அது சீன உணவகங்கள் மட்டும் தான். நான் பெரும்பாலும் இந்திய உணவகங்களில் மீ சாப்பிடுவேன். சீன உணவகம் என்றால் அது 'லக்சா' மட்டுமே. 'லக்சா' எனக்குப் பிடிக்கும்.
சமீபகாலங்களில் சீன உணவகங்கள் 'ஆளைப்பார்த்து' செயல்படுகிறார்கள் என்று சிலர் சொல்லுகிறார்கள். சீனர்களை ஏமாற்ற வழியில்லை. மலாய்க்காரர் அங்குப் போவதில்லை. இந்தியர்கள் என்றால் ஏமாற்றுவது எளிது என்று நினைக்கிறார்கள். சமீபகாலங்களில் இந்தியர்களில் சிலர் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். கெட்டுப்போன மீயைய் பயன்படுத்துவது, புழு வைத்த மீயைய் பயன்படுத்துவது இதெல்லாம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
இப்போது வியாபாரம் என்பது எதிர்பார்த்தபடி இல்லை என்றாலும் அது எல்லா வியாபாரிகளுக்கும் பொதுவானது தான். உணவகம் மட்டும் தான் என்று சொல்லுவதற்கில்லை. அதற்காக 'நான் போடுகிற உணவை நீ சாப்பிடு! என்று அதிகாரம் பண்ணுகிற அளவுக்குச் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. எல்லா இந்தியரிடமும் அது செல்லுபடியாகாது என்பது அவர்களுக்கே தெரியும். இளிச்சவாயர் யாராவது அகப்படுவார்களா என்று காத்திருப்பர் போல தோன்றுகிறது.
எது எப்படியோ இது கண்டிக்கத்தக்க விஷயம். ஆனாலும் இப்படிச் செய்து பழக்கப்பட்டவர்களைத் திருத்த முடியாது. நம்மால் முடிந்த ஒரே விஷயம். நாம் பழக்கப்பட்ட, அனுபவப்பட்ட சீன உணவகங்களுக்குப் போவது கொஞ்சம் பாதுகாப்பாக இருக்கும். புதிய உணவகங்களுக்குப் போவதை நாம் தவிர்ப்பது நல்லது. சீன உணவகங்கள் இந்திய வாடிக்கையாளர்களை நம்பி இல்லை என்பது நமக்குத் தெரியும். அதனால் நாம் போகவில்லை என்றாலும் அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் வரப்போவதில்லை.
அல்லது கொஞ்சம் நேர்மறையாக சிந்திப்போம். அவர்கள் செய்கின்ற அடாவடியினால் நாம் நமது உணவகங்களை ஆதரிப்போமே. என்ன வந்துவிட்டது! நமது வியாபாரங்களை நாம் ஆதரிப்பது ஒன்றும் தவறில்லையே. இனி வருங்காலங்களில் இப்படித்தான் நாம் யோசிக்க வேண்டியுள்ளது.
யோசித்துச் செயல்படுங்கள்!
Tuesday, 5 March 2024
இது என்னா கணக்கு?
Monday, 4 March 2024
யார் பணக்காரர்?
ஒவ்வொரு நாட்டிலும் பணக்காரர்கள் என்றால் அவர்கள் யாராக இருக்க முடியும்?
நமக்குத் தெரிந்தவரை தொழில் செய்பவர்கள் மட்டுமே பணக்காரர் பட்டியலில் வரக்கூடியவர்கள். ஆனால் அதையெல்லாம் மீறி அரசியல்வாதிகளும் பெரும் பணக்காரர் ஆகலாம் என்று போட்டியில் இறங்கியிருக்கிறார்கள்! பலநாடுகளில் இது நடந்து கொண்டிருக்கிறது. இங்கும் இந்தப் போட்டி டாக்டர் மகாதிர் காலத்தில் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது!
மலேசியாவில் அரசியல்வாதிகள் பலர் பெரும் செல்வந்தர்களாக இருக்கின்றனர். இது எப்படி நடக்கிறது? அந்த அளவுக்கு அவர்கள் தங்களது உழைப்பைப் போட்டிருக்கிறார்களோ? அரசியலில் என்ன தான் உழைப்பைக் கொட்டினாலும் அது செல்வத்தைக் கொடுக்காது! செல்வாக்கை வேண்டுமானால் கொடுக்கும்! பணத்தைக் கொடுக்காது! பதவியை வேண்டுமானால் கொடுக்கும்!
என்னதான் ஒர் அரசியல்வாதி அமைச்சர் ஆனாலும், பிரதமர் ஆனாலும் அவருடைய சம்பாத்தியம் என்பது ஒரு வியாபாரியுடன் ஒப்பிடமுடியாது. ஏன் ஒரு காப்புறுதி முகவர் இந்த அரசியல்வாதிகளை விட அதிகமாகவே சம்பாதிக்கிறார்! ஒரு விற்பனையாளர் அரசியல்வாதிகளைவிட எத்தனையோ மடங்கு அதிகம் சம்பாதிக்கிறார். அதற்குக் காரணம் அவர்களது உழைப்பு. ஆனாலும் ஓர் அரசியல்வாதி எந்த உழைப்பையுமே போடாமல் ஐம்பத்தெட்டு மாடி கட்டடத்திற்கு உரிமையாளராக முடிகிறது என்றால் அதனை ஓர் அசாதாரண சாதனை என்று தானே சொல்ல வேண்டும்! அது எப்படி முடிகிறது என்பது தான் நம் முன்னே உள்ள கேள்வி?
போகிற போக்கை பார்க்கின்றபோது இன்றைய அரசியல்வாதிகள் எல்லாம் பெரும் தொழில் அதிபர்களையே மிஞ்சி விடுவார்கள் என்றே தோன்றுகிறது! இன்றைய நிலையில் நம்மிடையே ஏகப்பட்ட கட்சிகள். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி அத்தோடு பிரச்சனை முடியவில்லை ஆளுங்கட்சியை ஆதரிக்கும் கட்சிகள் எதிர்க்கட்சியை ஆதரிக்கும் கட்சிகள் என்று பல கட்சிகள் இந்தியர்களுக்கு மட்டும்! எதற்காக என்று புரிகிறதா? ஏதாவது ஜாக்போட் அடிக்காதா என்னும் ஆசை தான், என்ன செய்ய?
ஆனால் ஒன்று மட்டும் உண்மை. அரசியல்வாதி தனது காலத்தில் ஏகப்பட்ட சொத்துகளைச் சேர்க்கலாம். அது அவனோடு போய்விடும்! அல்லது அடுத்த தலைமுறையோடு போய்விடும் சாத்தியம் உண்டு. சும்மா வந்தது சும்மாவே போகும்!! அதற்கெல்லாம் பிள்ளைகள் தயாராகத்தான் இருப்பார்கள்! அவர்களுக்கு என்ன கேடு சாபங்களை ஏன் சுமக்க வேண்டும்?
ஒரு தொழில் அதிபரை அப்படியெல்லாம் சொல்ல முடியாது. சமீபத்தில் 'ஜயன்' பேரங்காடியின் நிறுவனர் காலமானார். அவர் தொழிலில் எந்த பாதிப்பும் வர வாய்ப்பில்லை. தொழிலைத் தொடர வாரிசுகள் இருப்பார்கள். அது இன்னும் பல தலைமுறைகள் தொடரத்தான் செய்யும். அது தான் தொழிலின் மேன்மை.
ஒருவர் பணக்காரர் என்றால் அவரது தொழிலை வைத்துத்தான் சொல்ல வேண்டும். அரசியலை வைத்து அல்ல!
Sunday, 3 March 2024
இதற்கெல்லாம் காரணம் யார்?
வங்காளதேசத்தவரை வேலைக்காக வரவழைத்து கடைசியில் அவர்களை அம்போ என்று நடுத்தெருவில் தவிக்கவிட்டு ஓடிப்போன அந்த 'மர்ம' நபர்கள் யார்?
Saturday, 2 March 2024
நிறுத்துங்கள் அரசியல் ஆட்டத்தை!
"நிறுத்துங்கள் உங்கள் அரசியல் ஆட்டத்தை!" என்று பலர் சொல்லிவிட்டார்கள்.
அதில் பலருக்கு சுயுநல நோக்கம் இருக்கலாம். அதனால் "நீ என்ன சொல்வது? நான் என்ன கேட்பது!" என்று எதிர்கட்சி அரசியல்வாதிகள் நினைக்கத்தான் செய்வார்கள். அப்படி நினைப்பதில் தவறு ஒன்றுமில்லை.
பொது மக்களும் அதைத்தான் சொல்லுகிறார்கள். காரணம் நாம் தானே அரசியல்வாதிகளுக்கு எஜமானர்கள்! ஆனால் அந்த எஜமானர்கள் என்பது தேர்தல் காலம் வரை தான்! அதற்குப் பின்னர் அவர்கள் எஜமானர்கள் நாம் எச்சில் பொறுக்கிகள்! நிலைமை அப்படித்தானே! நாம் தானே அவர்கள் காலில் விழுகிறோம்?
சரி நம்மை விடுவோம். நமது மாமன்னரே அந்தக் கருத்தை வலியுறுத்தி இருக்கிறார். மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறார். "உங்கள் அரசியல் ஆட்டத்தை நிறுத்திவிட்டு ஒன்று சேர்ந்து நாட்டின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுங்கள்" என்பதாக அவர் அனைத்து நாடாளுமன்றத்திற்கும் நினைவுருத்தியிருக்கிறார். இது போதுமே! நாட்டின் தலைவர் அவர் வேறு யார் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்?
விலைவாசிகள் குறைய வேண்டும். வேலை வாய்ப்புகள் அதிகரிக்க வேண்டும். வெளி நாட்டு முதலீடுகள் உள்ளே வரவேண்டும், தண்ணீர் பற்றாக்குறை - இப்படி பல பிரச்சனைகளை நாடு எதிர்நோக்குகின்ற இந்த நேரத்தில் எதிர்கட்சியினரின் உலகமே வேறு என்பது போல பேசுகின்றனர். இவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாதது போல நடந்து கொள்கின்றனர்,. ஆமாம் இவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் முதலாம் தேதி சம்பளம் கிடைத்துவிடுகிறது அல்லவா!
இதனையும் பிரதமர் தனது கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஓர் ஆண்டுக்கு இவர்களது சம்பளத்தை நிறுத்தி வைத்தால் என்ன? செத்தா போய்விடுவார்கள்? அவர்களுக்கு எதுவும் ஆகாது! எந்நேரமும் அரசாங்கத்தைக் கவிழ்ப்பது பற்றி பேசுவதைத் தவிர வேறு எதுவும் இவர்களது நிரலில் இல்லை. மக்களின் பிரச்சனைகளென்ன, எப்படி தவிர்ப்பது, என்ன செய்ய முடியும் போன்ற விஷயங்களுக்கெல்லாம் எந்த ஒரு பதிலும் இல்லாமல் சும்மா கவிழ்ப்போம்! கவிழ்ப்போம்! என்றால் நிச்சயமாக மக்களுக்குக் கோபம் வரத்தான் செய்யும்.
கடவுள் ஏன் இப்படி ஒரு ஜென்மங்களைப் படைத்தார் என்று நினைக்கும் போது கஷ்டமாகத்தான் இருக்கிறது! என்ன செய்ய!
Friday, 1 March 2024
இது எனது நாடு!
"இது எனது நாடு" என்று யாரால் தைரியத்தோடு சொல்ல முடியும்?
நிச்சயமாக எந்த ஓர் ஆளும் அரசியல்வாதியால் சொல்ல முடியாது. ஆளும் அரசியல்வாதி என்றால் முன்னாள் தேசிய முண்ணனியே தான். இன்றும் நாட்டை அவர்கள் கட்டுப்பாட்டில் தானே வைத்திருக்கிறார்கள். அது மட்டும் அன்றி இன்றைய எதிர்கட்சியினரும் அவர்கள் தான். அதனால் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம். இங்கு நாம் சொல்ல வருவது முன்னாள் தேசிய முண்ணனியினர் தான்.
என்று டாக்டர் மகாதிர் போன்ற துரோகிகள் நாட்டை ஆள வந்தார்களோ அன்றே நாட்டுக்குப் பிடித்தது ஏழரை சனியன். அவர்களிடம் நாட்டுப்பற்றோ, இனப்பற்றோ, நாட்டின் மீது விசுவாசாமோ எதுவுமே இல்லாத ஒரு கொள்ளைக்கூட்டம்! அவரது சொத்து மதிப்பு, பிள்ளைகளின் சொத்து மதிப்பு இதற்கெல்லாம் எல்லையே இல்லை! ஓர் அரசியல்வாதியால் இவ்வளவு சம்பாதிக்க முடியுமா? அவரது மகன்களால் - எனன தான் தொழிலசெபவர்களாக இருந்தாலும் - இந்த அளவு கோடிக்கணக்கில் பணம், சொத்துகள் வைத்திருக்க முடியுமா?
அவருக்குப் பின்னால் வந்தார்களே முகைதீன், சப்ரி போன்ற பிரதமர்கள் - இவர்களுக்கு மட்டும் நாட்டுப்பற்று ஊற்றுத்தண்ணீராய் ஓடுகிறதோ? இவர்களும் கொள்ளையர்கள் பட்டியலில் தானே வருகிறார்கள்! கொள்ளையடிப்பதற்கு ஓர் எல்லையே இல்லையா? இவர்களுடைய சொந்தங்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிகளில் உள்ள அதிகாரிகள் - இப்படி யாரை எடுத்தாலும் யாரையாவது கைநீட்டி இவர் 'புனிதன்' என்று சொல்லுகிற அளவுக்கு யாரேனும் இருக்கிறார்களா? அப்படி சொல்லத்தான் முடியுமா?
அரசியல்வாதி என்றாலே புறங்கையால் தேனை நக்கத்தான் செய்வான். இது ஒன்றும் அதிசயமல்ல! ஆனால் தேன் கூடே எனக்குத்தான் என்று செயல்பட்டால் அதுவே அவனுக்கு எமனாகிவிடும்! அது தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இலஞ்ச ஊழல் ஆணையம் சும்மாவா இருக்கும்? அதன் வேலையை அது செய்யத்தான் செய்யும். எல்லாகாலமும் தனக்குச் சாதகமாக இருக்கும் என்று அரசியல்வாதிகள் நினைக்கிறார்கள். அது தப்பு என்று இப்போது நிருபணமாகி வருகிறது.
கொள்ளையடிக்கும் கூட்டம் எல்லாம் 'நாட்டிற்கு விசுவாசம், இனப்பற்று, மொழிப்பற்று, சமயப்பற்று' என்று பேசாமல் இருந்தால் போதும். உங்களைப் பற்றி மக்களுக்கே தெரியும்
'இது எனது நாடு' என்று வாய் திறக்கும் முன்னர் கொஞ்ச மேலே சொன்னவைகளை நினைத்துப் பாருங்கள்!