Tuesday 19 March 2024

முடிவுக்கு கொண்டு வாருங்கள்!

 


பேரங்காடியான கே.கே. ,மார்ட்  இப்போது ஒரு  பெரும் சிக்கலில் மாட்டியுள்ளது.

அதனை அரசியல்வாதிகள் தங்களது சுயநலத்திற்கு நன்கு பயன்படுத்துகின்றனர்.  என்ன செய்வது?  ஒன்றுமில்லாததை ஊதி பெரிதாக்குவது  தானே அரசியலர்களின் வேலை!

யாருக்கும் நாம் வக்காளத்து வாங்கவில்லை.  தவறு நடந்துவிட்டது.  காலில் அணியும் காலுறையில் 'அல்லா' என்கிற சொல்லைப் பயன்படுத்தியது தவறு என்பதை நாம் ஒப்புக் கொள்கிறோம்.  அதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவிட்டது.  அந்தப் பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது.  அத்தோடு அந்தப் பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும்.  அரசாங்கத்தின் நடவடிக்கை எப்படி அமையும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

அதனை மீண்டும் மீண்டும் கிளறிக்கொண்டு இருப்பது, அந்தப் பேராங்காடியைப் புறக்கணியுங்கள் என்று மக்களைத் தூண்டிவிடுவது சற்றும் ஏற்றுக் கொள்ள முடியாதது. சமீபத்தில் தான் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தைப் புறக்கணியுங்கள் என்றார்கள். அதன் எதிரொலி? எண்பது விழுக்காடு முஸ்லிம்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தார்கள். இப்போதும் அதே கதை தான்.   எண்பது  விழுக்காடு முஸ்லிம்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை  இழக்கவிருக்கிறார்கள்.  புறக்கணியுங்கள் என்று சொல்லுபவர்கள் ஒன்றை மறந்துவிட்டார்கள்.  பாதிக்கப்பட்டவர்கள்  இந்த ரம்லான் மாதத்தையே ஏக்கத்தோடு பார்க்க  வேண்டிய சூழல்.  வருகின்ற பெருநாளை எப்படி அவர்களால் கொண்டாட முடியும்?  அரசியல்வாதிகள் கொடுத்து வைத்தவர்கள். பணத்திற்குப் பஞ்சமில்லை!

புறக்கணிப்பு  என்பது முட்டாள் தனம்.  பிரச்சனைக்குத் தீர்வு காணவேண்டுமே தவிர அதனை வைத்து அரசியல் ஆட்டம் கூடாது  என்பது தான் நாம் சொல்ல வருவது. இந்த ஆண்டு இன்றைய தினம் வரை நான்  பேரீச்சம் பழத்தைக் கண்ணால் கூட  பார்க்கவில்லை. நான் வாங்குகிற இடத்தில் அது கிடைக்கவில்லை. என்ன காரணமாக இருக்கும்?  அந்தப் பழங்கள் இஸ்ரேல் நாட்டிலிருந்து வருவதால்   அது  கிடைக்கவில்லை.  அது இஸ்ரேல் நாட்டைப் புறக்கணிப்பது.

சரி இத்தனை ஆண்டுகள் அவர்கள் மண்ணில் விளைந்த பழங்களைத்  தானே  சாப்பிட்டு வந்தீர்கள். ஏன் அப்போது புறக்கணிக்கவில்லை?  இங்கு வருவித்தவர்கள்  முஸ்லிம்  நிறுவனங்கள்  என்பதால் அந்த நிறுவனங்களை  நீங்கள்  புறக்கணிக்கவில்லையே!  அது என்ன?  வர்த்தகத்தில் சீன நிறுவனங்கள், மலாய் நிறுவனங்கள், இந்திய நிறுவனங்கள்  என்கிற பாகுபாடு?  உடனே 'புறக்கணியுங்கள்' என்கிற கோஷம்!

உண்மையைச் சொன்னால் அம்னோ இளைஞர் பிரிவு,  சம்பந்தப்பட்டது ஒரு சீன நிறுவனம் என்பதாலேயே  இந்தப் புறக்கணிப்பு வேலையை மிகத் தீவிரமாகச் செய்கிறது என்று தான் சொல்ல வேண்டியுள்ளது.

இனி அரசாங்கம் தான் இதற்கு ஒரு முடிவு காண வேண்டும்.

No comments:

Post a Comment