ஆட்டம் சிறப்பாகவே இருக்கிறது! மற்ற இனத்தவர் கைதட்டி சிரிக்கும் அளவுக்கு ம.இ.கா. தனது ஆட்டத்தைச் சிறப்பாகவே ஆடிக் கொண்டிருக்கிறது!
அவர்களது கொள்கை நமக்குப் புரிகிறது. "நாங்களே, எங்களுக்குள்ளே ஆடிக்கொண்டோம்! உங்களை இந்த சமுதாயத்திற்காக ஆடவிடுவோமா?" என்று மார்தட்டிக் கொண்டிருக்கிறார்கள்!
நம்மைப் பொறுத்தவரை மித்ராவில் யார் பொறுப்பில் இருக்கிறார்கள் என்பது நமது பிரச்சனையல்ல. அது பிரதமரின் பிரச்சனை. நம்முடைய தேவை எல்லாம் உதவி யாருக்குத் தேவைப்படுகிறதோ அவர்களுக்கு மித்ரா உதவ வேண்டும். அதுவே நமது எதிர்பார்ப்பு.
ஆனால் எங்களைத்தவிர வேறு யார் பொறுப்புக்கு வந்தாலும் நாங்கள் சும்மா இருக்கப் போவதில்லை என்பது ம.இ.கா.வினரின் ஆட்டமாக இருக்கிறது! இந்த நிலையில் மித்ராவால் யாருக்கும் எந்தப் பயனுமில்லை என்கிற நிலைமை தான் மீண்டும் ஏற்படுகிறது. மித்ராவால் யாருக்கும் எத்தகைய பயனும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பது தான் ம.இ.கா.வின் பிரார்த்தனை.
உண்மையைச் சொன்னால் இது ம.இ.கா.விற்கும் பி.கே.ஆர். க்கும் ஏற்பட்டிருக்கும் போட்டி என்றே சொல்லலாம். ஒன்றை ம.இ.கா.வினர் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் இனி இந்தியர்களின் ஆதரவைப் பெற வாய்ப்பில்லை என்பது உங்களுக்கே தெரியும். நீங்கள் அந்தக் கட்சியோடு ஒட்டுவதும் உறவாடுவதும் எதற்காக என்பது தெரிந்ததுதான்.
உங்களுக்கு இனி வாய்ப்பில்லை என்று தெரிந்தும் உங்கள் தலைவர் என்ன செய்தாரோ அதையே நீங்களும் செய்கிறீர்களே அது வருத்தத்தை அளிக்கத்தான் செய்கிறது. நம்மால் ஒன்றைத்தான் சொல்ல முடியும். நீங்கள் செய்கின்ற பாவங்களை உங்கள் வாரிசுகளிடம் ஒப்படைத்துவிட்டுப் போகாதீர்கள். நல்லது செய்தால் நல்லது நடக்கும். கெட்டது செய்தால் கெட்டதே நடக்கும்.
இப்போது நாம் என்ன தான் சொல்ல வருகிறோம்? மித்ரா இப்போது ஒற்றுமைத் துறையின் கீழ் இயங்குகிறது. பிரதமர், அவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்துள்ளார். இனி அவர்களின் பாடு அவ்வளவு தான். இத்தனை ஆண்டுகள் மித்ராவின் மூலம் யாரும் பெரிதாக எதனையும் சாதித்துவிடவில்லை. இவர்கள் என்ன சாதிக்கப்போகிறார்கள் என்பதையும் பார்த்து விடுவோமே. இதற்கு ஏன் ம.இ.கா. தடையாக இருக்க வேண்டும்? அது தான் நமது கேள்வி.
சமுதாயத்தைக்கூறு போடும் வேலையை யார் செய்தாலும் குற்றம் குற்றமே! கூறுபோட்டுவிட்டு நீங்கள் இங்கிருந்து தப்பிவிட முடியாது! ஆட்டத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்பது தான் நமது ஆலோசனை.
No comments:
Post a Comment