பொதுவாக பல நாடுகளின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பது இலஞ்சம் தான்! நமது அருகில் இருக்கும் சிங்கப்பூர் நாட்டை ஒதுக்கிவிடுவோம். நம் நாட்டுக்கும் அந்த நாட்டுக்கும் எந்த வகையிலும் ஒத்துப் போக வழியில்லை! இரு நாடுகளுமே இருவேறு துருவங்கள்! மாதிரிக்கு ஒன்றைச் சொல்லலாம். ஒரு பிரச்சனை வந்தால் சிங்கப்பூர் அரசாங்கம் அதனை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து சரி பண்ணுவதில் முனைப்புக் காட்டும். இங்குள்ள நிலைமை வேறு. நிதியைப் பெற்றுக் கொள்ளுவார்கள். பிரச்சனையைப் பேசினால் சாமி கண்ணைக் குத்தம் என்பார்கள்! ஆக ஒன்றும் ஆகாது!
ஒரு சில நாடுகளில் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஊழல். புதிதாக பாலம் ஒன்றைக் கட்டினார்கள். திறப்புவிழா நடத்தி பாலத்தைக் கோலாகலமாக திறந்து வைத்தார்கள். பாலத்தின் ஆயுசு கம்மி. ஐந்தாறு நாட்களிலேயே பாலம் 'ஐயகோ' என்று கவிழ்ந்து போனது.
மழை, வெள்ளம், புயல், காற்று என்று வந்துவிட்டால் அதைப்பார்த்து மகிழ்ச்சி அடைபவர்கள் அரசியல்வாதிகள் தான். இங்கிருந்து பல கோடிகளைத் தங்களுக்கு ஒதுக்கிவிட்டு அப்புறம் மிச்சம் மீதி உள்ள பணத்தில் தான் நிவாரண வேலைகள் நடக்கும்! அரசியல்வாதிகள் விசேஷமான ஜந்துக்கள்!
முதலில் கையில் இலஞ்சம் வாங்கிவிட்டு, அதன் பின்னர் மக்களுக்குத் தொண்டு செய்பவர்கள் தான் அரசியல்வாதிகள்! உலகில் எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும் அவர்களின் அடிப்படைக் கொள்கை என்பது ஒன்று தான். 'கையில காசு வாயில தோச' இது தான் அவர்களின் கொள்கை. தொண்டு என்கிற சொல்லின் பொருளையே மாற்றிவிட்டார்கள்!
பெரும்பாலான நாடுகளில் உள்ள அரசியல்வாதிகளின் சொத்துக்களைக் கணக்கிலெடுத்தால், அதுவும் அரசியலுக்கு முன் அதற்குப் பின் - என்று ஒரு கணக்கெடுப்பு நடத்தினால் முன்: பிச்சைக்காரன், பின்: கோடிஸ்வரன் - என்று தான் புள்ளி விபரங்கள் சொல்லும். ஒரு சில நாடுகளில் இலட்சக்கணக்கிலான கோடிகள்! அப்பாடா! எப்படிடா சாத்தியம்? என்று நம்மைக் கேட்க வைக்கும்! காஞ்ச மாடு கம்புல பாஞ்ச மாதிரி என்று எடுத்துக் கொள்ள வேண்டியது தான்!
நம் நாட்டில் அரசியலுக்கு வந்தவர்களில் பெரும்பாலானோர் சாதாரணமாகத்தான் வந்தார்கள். அவர்கள் போகும் போது பெரிய செல்வந்தர்களாகப் போனார்கள்! நம் ஜாதிக்காரனைப் பணக்காரன் ஆக்குவது நமது கடமை என்று சில தலைவர்கள் நினைத்தார்கள். கடமை சரிதான். ஆனால் கடமை மக்களை ஓட்டாண்டியாக்கிவிட்டது என்பதும் உண்மை!
இலஞ்சம், ஊழலில் சிக்கிய நாடுகளின் வளர்ச்சி நிச்சயமாகத் தடைபடும். நாம் ஏன் முன்னேறவில்ல என்றால் சிங்கப்பூரைத்தான் படிக்க வேண்டும். அதைப்படிக்க அசியல்வாதிக்கு எங்கே நேரம்?
No comments:
Post a Comment