வீடுகளில் சிவப்பு வர்ணத்தை அடித்து அசிங்கப்படுத்துவதும், கார்களில் சிவப்பு வர்ணத்தை தெறிக்க விடுவதும் - இதெல்லாம் நாட்டில் பல ஆண்டுகளாக நடந்து கொண்டு தான் வருகிறது. காவல்துறை இதற்கெல்லாம் ஒரு முடிவைக் காண முடியவில்லை. முடிவு காணும் வரை அது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும். நாமும் சகித்துக் கொள்ளத்தான் வேண்டியுள்ளது.
இதற்கான காரணகர்த்தாக்கள் யார் என்பது நமக்குத் தெரியும். ஆலோங் அல்லது வட்டி முதலைகள். இவர்கள் யாவரும் எட்ட முடியாத இடத்தில் இருக்கிறார்கள். குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகுபவர்கள் யாவரும் சில்லறைகள். அகப்படுபவர்கள் இவர்கள் தான். இவர்களைக் கைது செய்வதன் மூலம் இந்த சாயம் அடிக்கும் வேலை நின்றுவிடப் போவதில்லை. முதலைகள் தான் பின்னிருந்து இயக்குபவர்கள். அந்த இயக்கத்தை வேரறுக்கும் வரை குற்றங்கள் பெருகத்தான் செய்யும்.
ஆனால் இந்த ஆலோங் அடிவருடிகள் செய்கின்ற காரியங்கள் மக்களுக்குப் பல அசௌகரியங்களை ஏற்படுத்துகின்றன. பல சமயங்களில் கொஞ்சமும் சம்பந்தமே படாதவர்கள் கூட பாதிக்கப்படுகின்றனர். இந்த அளவுக்குத் துணிச்சல் அவர்களுக்கு இருக்கிறதென்றால் அவர்கள் பின்னணி பலமாக இருக்கிறது என்பது தான் பொருள்.
இவர்களிடம் உள்ள பெரிய பிரச்சனை ஒரு சிறிய தொகையைக் கடனாகப் பெற்றவர்கள் அந்தக் கடனை அடைக்க வாழ்நாள் முழுவதும் கடனை கட்டிக்கொண்டிருக்கின்றனர். அதற்கு முடிவே இல்லை. யாரும் அவர்களிடம் கேள்விகள் கேட்க ஆளில்லை.
நிச்சயமாக இது இப்படியே தொடர்ந்து கொண்டே இருக்க முடியாது. முற்றிலுமாக ஒரு நாள் நிறுத்தப்படும். காவல்துறை அதன் பணியை நிறுத்திவிடாது. எல்லா தீய செயல்களுக்கும் ஒரு முடிவு உண்டு. இதற்கும் ஒரு முடிவு வரும் என எதிர்பார்க்கலாம்.
இத்தனை ஆண்டுகளாக முடிவுக்கு வராதது இனி வந்துவிட முடியுமா? முடிவுக்கு வரும் என்பது உறுதி. ஆனால் நாம் நினைத்தபடி அது வர வாய்ப்பில்லை. காரணம் அங்கும் பல சிக்கல்கள் உண்டு.
ஒழிக்க முடியும்! வெகுவிரைவில் நடக்கும்!
No comments:
Post a Comment