ஒரு சிலரின் தீவிரவாத பேச்சு கடைசியாக பெட்ரோல் குண்டுகளை வீசுகிற அளவுக்குப் போய் நிற்கிறது.
அதனால் தான் தீவிரவாத பேச்சுக்கள் வேண்டாம் என்று பலர் சொல்லியும் சில தறுதலைகள் தங்களை வீராதிவீரன் என்று நினைத்துக் கொண்டு தொடர்ந்து அந்த கே.கே.மார்ட் மீது தாக்குதலை மேற்கொண்டனர்.
காவல்துறையினர் சொன்னார்கள்' பேரரசர் பேசினார்; மாநில சுல்தான்கள் சூசகமாக எடுத்துரைத்தார்கள். சொன்னது யார் காதிலும் விழவில்லை. தொடர்ந்து அந்த விற்பனையகத்தின் பொருள்களைப் புறக்கணியுங்கள் என்று பிரச்சாரம் செய்து வந்தார்கள்.
பெட்ரோல் குண்டுகளோ, நாட்டுக் குண்டுகளோ அல்லது உண்மை குண்டுகளோ எதனையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இன்று பெட்ரோல் குண்டுகள் என்றால் நாளை இந்த பிரபஞ்சத்தையே அழிக்கும் குண்டுகளாகவும் வரலாம். அப்படித்தான் பயங்கரவாத வளர்ச்சி அமையும்.
ஆனால் குண்டுகளைப் போட்டு தங்களது எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என்கின்ற நிலைமை நாட்டில் இல்லை. பிரச்சனைகள் வரும் போது காவல்துறை நடவடிக்கைகளில் இறங்குகிறது. நடவடிக்கை சம்பந்தப்பட்டவர்கள் மீது எடுக்கப்படுகிறது. இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. சட்டதிட்டங்கள் கடுமையாகப் பின்பற்றப்பட்டால் காவல்துறையின் நடவடிக்கைகளே போதுமானது. காவல்துறை ஆள்பார்த்துச் செயல்படுவதில்லை! பயங்கரவாதம் யாருக்கும் நல்லதில்லை.
பெட்ரோல் குண்டுகள் வீசுவது என்பது பயங்கரவாதத்தின் ஆரம்பம். இதை நிச்சயமாக எந்த நாடும் விரும்பாது. நமது மலேசியா போன்ற நாடுகள் நிச்சயம் அதனை விரும்ப வாய்ப்பில்லை. பல்லின மக்கள் வாழ்கின்ற ஒரு நாட்டில் பயங்கரவாதம் மிக எளிதில் தீ பிடித்துவிடும். அதனால் நம் நாட்டைப் பொறுத்தவரை இது முளையிலேயே கிள்ளியெறியப்பட வேண்டிய விஷம். அதனால் தான் நம் நாட்டில் அமைதி இன்னும் நிலவுகிறது.
குண்டுகளை வீசுவது நெருப்புடன் விளையாடுவது. அதனைப் பரவ விட்டால் நாட்டுக்கே ஆபத்து. அரசாங்கம் எந்த அளவுக்குத் தீவிரமாக செயல்படுகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். நிச்சயமாக அது வேடிக்கை விளையாட்டு அல்ல. ஆபத்தான விளையாட்டு.
பார்ப்போம்!
No comments:
Post a Comment