Saturday 23 March 2024

எதிர்கட்சிக்கு வாய்ப்பு?

 

வருகின்ற இடைத் தேர்தலில் ஒரு சோதனை. அந்த இடைத் தேர்தலில் இந்தியர்கள் தங்களது  ஒற்றுமையைக் காட்டுவார்களா என்று பரிசோதிக்கும் களம்.

இந்தியர்களை எல்லாகாலங்களிலும் ஏமாற்றலாம்  என்று  நினைப்பவர்களுக்கு  ஒரு பாடம் கற்பித்துக் கொடுக்க  வேண்டிய நேரம். அதனை நாம் எப்படிப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறோம். என்பதைப்  பொறுத்துத்தான்  அது எச்சரிக்கை மணியா என்ன  என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

கோலகுபுபாரு, சிலாங்கூர், மாநில சட்டமன்ற தொகுதி காலியானதை ஒட்டி இன்னும் மூன்று மாதங்களுக்குள்  இடைத்தேர்தல் நடத்தப் பெற வேண்டும். அங்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஜ.செ.கட்சியின் திருமதி லீ,   மார்ச்-21-ம் தேதி புற்று நோய் காரணமாக மரணமடைந்தார்.

கோலகுபுபாரு தொகுதியில் மலாய்க்காரரே அதிகமாக இருந்தாலும் சீனர்களும் இந்தியர்களும் சேரும்போது  சிறிய அளவில் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர்.  அதனால் 18 விழுக்காடு உள்ள இந்தியர்களின் வாக்கு  முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இங்கு ஆளுங்கட்சி வெற்றி பெறுகிறதோ அல்லது எதிர்க்கட்சி  வெற்றி பெறுகிறதோ அதனால் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படப்போவதில்லை. ஆனால் நம்மைப் பொறுத்தவரை  இந்தியர்களின் வாக்கு எண்ணிக்கை எந்தப்பக்கம் சாய்கிறது  என்பது  தான் முக்கியம்.

புதிய அரசாங்கம் பதவி ஏற்றதிலிருந்து நமது தரம் கீழ்நோக்கிப் போகின்றதே தவிர எதுவும் மேல் நோக்கிப் போவதாகத் தெரியவில்லை.  கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு - இப்படி எந்த ஒரு பிரச்சனையும் தீர்க்கப்படும் என்கிற உத்தரவாதம் இல்லை. அதுவே பெரிய சிக்கல்.

நமது அதிருப்தியைப் பலவகைகளில் தெரிவித்துக் கொண்டுதான் வருகிறோம். அவைகள் எல்லாம் ஊடகங்களில் எதிரொலிக்கத்தான் செய்கின்றன.  ஆனால் தேர்தலில் எதிரொலிப்பது என்பது வேறு.  அது கொஞ்சம் ஆழமாகவே எதிரொலிக்கும்!  படபட வைக்கும்!

பார்ப்போமே! ஆதரவு  ஒற்றுமை அரசாங்கத்திற்கு  அதிகம் என்றால்  நாம் பிரதமர் அன்வாரின் தலைமைத்துவத்தில் திருப்தி அடைகிறோம் என்பது பொருள். அதுவே எதிரணிக்கு ஆதரவு என்றால் அது ஆளுங்கட்சிக்குப் பயமுறுத்தலாக அமையும் என்று எடுத்துக் கொள்ளலாம்!

முன்பெல்லாம்  அரசாங்கத்தின் மீதான நமது அதிருப்தியைக் காண்பிக்க ஐம்பது அறுபது ஆண்டுகள் பிடித்தன. இனி அப்படியெல்லாம் இருக்க முடியாது.  தருணம் வரும்போது அதனை உடனடியாகக் காட்ட வேண்டும். யாரும் நமக்குக் கை கொடுக்கப்போவதில்லை. 

நமது கையே நமக்கு உதவி!

No comments:

Post a Comment