ஒவ்வொரு நாட்டிலும் பணக்காரர்கள் என்றால் அவர்கள் யாராக இருக்க முடியும்?
நமக்குத் தெரிந்தவரை தொழில் செய்பவர்கள் மட்டுமே பணக்காரர் பட்டியலில் வரக்கூடியவர்கள். ஆனால் அதையெல்லாம் மீறி அரசியல்வாதிகளும் பெரும் பணக்காரர் ஆகலாம் என்று போட்டியில் இறங்கியிருக்கிறார்கள்! பலநாடுகளில் இது நடந்து கொண்டிருக்கிறது. இங்கும் இந்தப் போட்டி டாக்டர் மகாதிர் காலத்தில் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது!
மலேசியாவில் அரசியல்வாதிகள் பலர் பெரும் செல்வந்தர்களாக இருக்கின்றனர். இது எப்படி நடக்கிறது? அந்த அளவுக்கு அவர்கள் தங்களது உழைப்பைப் போட்டிருக்கிறார்களோ? அரசியலில் என்ன தான் உழைப்பைக் கொட்டினாலும் அது செல்வத்தைக் கொடுக்காது! செல்வாக்கை வேண்டுமானால் கொடுக்கும்! பணத்தைக் கொடுக்காது! பதவியை வேண்டுமானால் கொடுக்கும்!
என்னதான் ஒர் அரசியல்வாதி அமைச்சர் ஆனாலும், பிரதமர் ஆனாலும் அவருடைய சம்பாத்தியம் என்பது ஒரு வியாபாரியுடன் ஒப்பிடமுடியாது. ஏன் ஒரு காப்புறுதி முகவர் இந்த அரசியல்வாதிகளை விட அதிகமாகவே சம்பாதிக்கிறார்! ஒரு விற்பனையாளர் அரசியல்வாதிகளைவிட எத்தனையோ மடங்கு அதிகம் சம்பாதிக்கிறார். அதற்குக் காரணம் அவர்களது உழைப்பு. ஆனாலும் ஓர் அரசியல்வாதி எந்த உழைப்பையுமே போடாமல் ஐம்பத்தெட்டு மாடி கட்டடத்திற்கு உரிமையாளராக முடிகிறது என்றால் அதனை ஓர் அசாதாரண சாதனை என்று தானே சொல்ல வேண்டும்! அது எப்படி முடிகிறது என்பது தான் நம் முன்னே உள்ள கேள்வி?
போகிற போக்கை பார்க்கின்றபோது இன்றைய அரசியல்வாதிகள் எல்லாம் பெரும் தொழில் அதிபர்களையே மிஞ்சி விடுவார்கள் என்றே தோன்றுகிறது! இன்றைய நிலையில் நம்மிடையே ஏகப்பட்ட கட்சிகள். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி அத்தோடு பிரச்சனை முடியவில்லை ஆளுங்கட்சியை ஆதரிக்கும் கட்சிகள் எதிர்க்கட்சியை ஆதரிக்கும் கட்சிகள் என்று பல கட்சிகள் இந்தியர்களுக்கு மட்டும்! எதற்காக என்று புரிகிறதா? ஏதாவது ஜாக்போட் அடிக்காதா என்னும் ஆசை தான், என்ன செய்ய?
ஆனால் ஒன்று மட்டும் உண்மை. அரசியல்வாதி தனது காலத்தில் ஏகப்பட்ட சொத்துகளைச் சேர்க்கலாம். அது அவனோடு போய்விடும்! அல்லது அடுத்த தலைமுறையோடு போய்விடும் சாத்தியம் உண்டு. சும்மா வந்தது சும்மாவே போகும்!! அதற்கெல்லாம் பிள்ளைகள் தயாராகத்தான் இருப்பார்கள்! அவர்களுக்கு என்ன கேடு சாபங்களை ஏன் சுமக்க வேண்டும்?
ஒரு தொழில் அதிபரை அப்படியெல்லாம் சொல்ல முடியாது. சமீபத்தில் 'ஜயன்' பேரங்காடியின் நிறுவனர் காலமானார். அவர் தொழிலில் எந்த பாதிப்பும் வர வாய்ப்பில்லை. தொழிலைத் தொடர வாரிசுகள் இருப்பார்கள். அது இன்னும் பல தலைமுறைகள் தொடரத்தான் செய்யும். அது தான் தொழிலின் மேன்மை.
ஒருவர் பணக்காரர் என்றால் அவரது தொழிலை வைத்துத்தான் சொல்ல வேண்டும். அரசியலை வைத்து அல்ல!
No comments:
Post a Comment