தமிழ் பள்ளிகளில் மாணவர் சரிவு சென்ற ஆண்டை விட சுமார் இருநூறு மாணவர்கள் குறைவு என்று அறிகிறோம்.
எதுவும் சும்மா வந்துவிடாது என்பது போல பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது சாதாரண விடயம் அல்ல. விழிப்புணர்வை ஏற்படுத்த பலர் - மிகப்பலர் - உழைத்திருக்கின்றனர். யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது.
அப்படி இருந்தும் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டிருப்பது சோர்வடையத்தான் செய்யும். இதற்குப் பல காரணங்கள் உண்டு. தோட்டப்புறங்களில் நமது இனத்தவரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்பது முதல் காரணம். இதனைத்தான் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இருக்கலாம். ஏற்றுக்கொள்வோம்!
பட்டணப்புறங்களில் உள்ள படித்த தமிழர்கள் தங்கள் பிள்ளைகளைத் தமிழ் பள்ளிகளில் சேர்க்கிறார்கள் என்பது மிக நல்ல செய்தி. இவர்களில் பெரும்பாலோர் ஏற்கனவே தமிழ் பள்ளிகளில் படித்தவர்கள். காலம் மாறிவிட்டது. இப்போது கட்டடங்களும் மாறிவிட்டன. இப்போது தமிழ் பள்ளிகளைக் குறுகிய கண்ணோட்டத்தோடு யாரும் பார்ப்பதில்லை.
தமிழ்ப்பள்ளிகளில் மட்டும் தான் இன்னும் நமது கலாச்சாரங்கள் கற்பிக்கப்படுகின்றன; கடைப்பிடிக்கப்படுகின்றன.. ஆறாண்டு கல்வி அவர்களின் கண்களைத் திறக்கின்றன. வேறு பள்ளிகளுக்கு அனுப்புவதால் நமது கலாச்சாரங்கள் அனைத்தும் மறக்கடிக்கப்படுகின்றன! புறக்கணிக்கப்படுகின்றன! என்ன செய்ய? அது அவர்களின் பணி அல்லவே!
சீன பள்ளிகளுக்குப் பிள்ளைகளை அனுப்புவதில் கொஞ்சம் அதிகமாகவே யோசிக்க வேண்டும். உங்கள் பிள்ளைகளுக்கு டியூஷன் எடுக்க தனியாக ஓர் ஆசிரியரை நியமிக்க வேண்டும்! உங்களுக்கு அந்த மொழி தெரியாவிட்டால் உங்கள் பிள்ளைகளின் பாடு திண்டாட்டம் என்பதில் ஐயமில்லை. தேசிய மொழி பள்ளிகளில் உங்கள் பிள்ளைகளைப் பற்றிய அக்கறையே இல்லை!
உங்கள் பிள்ளைகள் கல்வி கற்க ஏற்ற இடம் தமிழ் பள்ளிக்கூடங்கள் தான்.மொழி மட்டும் அல்ல பண்பாடு, கலாச்சாரம் குறைந்தபட்சம் ஆறு ஆண்டுகள் உங்கள் பிள்ளைகளுக்குக் கற்பிக்கப்படுகின்றன. ஓரு நல்ல குடிமகனாக வாழ தரமான கல்வியைக் கொடுக்கின்றன.
இந்த ஆண்டு ஒரு சிறிய சரிவு. அவ்வளவு தான். அடுத்த ஆண்டு அதனைச் சரி செய்துவிடும் என நம்புவோம். வாழ்க தமிழ்!
No comments:
Post a Comment