கைப்பேசியை ஒரு பேராசிரியை கொள்ளிக்கட்டை என்று வர்ணிப்பார்! மிகச் சரியான ஒரு சொல் தான்!
அதனைச் சரியாகப் பயன்படுத்தினால் அதனால் நிறைய பயன் உண்டு. ஆனால் அவர்கள் ஒரு சிலர் தான். இங்கு நாம் பேசுவது கொள்ளிக்கட்டையால் சொறிந்து கொள்கிறார்களே அவர்களைப் பற்றி!
அதிலும் பெரும்பாலும் தாய்மார்கள்! பொறுப்பற்ற தாய்மார்கள்! குழந்தைகளைக் காரிலே வைத்து பூட்டிவிட்டுச் செல்கிறார்களே அவர்களைப் பற்றி தான்.
சமீபகாலங்களில் எத்தனை குழுந்தைகள் இப்படி பூட்டப்பட்ட காரில் இறந்து போயிருக்கின்றனர். ஒன்றா இரண்டா? வேண்டுமென்றே செய்கின்றார்களா என்றால் அப்படி ஒன்றும் தோன்றவில்லை. ஆனால் நிறைய இது போன்ற சம்பவங்கள் நடக்கும் போது அப்படியும் இருக்குமோ என்று தோன்றத்தான் செய்கிறது.
அதுவும் இது போன்ற வெயிற் காலங்களில் பச்சிளங்குழந்தைகளைக் காரினில் வைத்து பூட்டிவிட்டுச் சென்றால் .....? பல சம்பவங்கள் நடைபெற்றுவிட்டன. எல்லாருமே கைப்பேசிகளைக் கைகளில் பத்திரமாக வைத்திருக்கின்றனர். குழந்தைகளைத் தான் ஆளைக் காணோம்!
இந்தச் சம்பவம் பம்பாயில் நடந்தது. ஆட்டோவை விட்டு இறங்கிய பெண்மணி ஒருவர் கைப்பேசியில் பேசிக்கொண்டே வேகமாக நடந்து போகிறார்! ஆட்டோ ஓட்டுநர் குழந்தையைக் கையில் தூக்கிக் கொண்டு அவர் பின்னால் ஓடுகிறார்! அம்மணி குழந்தை இருப்பதை மறந்தே போனார்!
நம் நாட்டில் குழந்தைகள் காரில் இறக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. வெளியே ஷாப்பிங் போகிறவர்கள் குழந்தைகளைக் காரில் பூட்டிவிட்டுச் செல்கின்றனர். இதெல்லாம் அடுக்குமா என்றால்? குழந்தைகளை வைத்துக் கொண்டு அவர்களால் ஷாப்பிங் செய்ய முடிவதில்லை. அதில் உண்மை இருக்கலாம். ஆனால் அக்காலத்துப் பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு தானே ஷாப்பிங் செய்தார்கள். இன்றைய பெற்றோர்களுக்கு மட்டும் என்ன கேடு வந்தது?
கைப்பேசிகள் குழந்தைகளுக்கு எமனாக மாறிவிட்டன. குழந்தைகளை மறந்துவிட்டுப் போவது ஆயிரத்தில ஒரு சம்பவம் நடக்கலாம். ஆனால் நமது நாட்டில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால் அதனையும் சந்தேகக்கண் கொண்டு தான் பார்க்க வேண்டியுள்ளது.
இதற்கு ஒரு விடிவுகாலம் உண்டா? தெரியவில்லையே!
No comments:
Post a Comment