மலேசிய இந்தியர் காங்கிரஸ் தான் முதன் முதலாக - இந்தியர்களுக்கென - இப்படி ஒரு பெருந்திட்டத்தை தொகுத்தவர்கள். அதனைத் தொகுத்தவர் மறைந்த டத்தோ பத்மனாபன் அவர்கள். அதற்குப் பின்னர் பல மாற்றங்கள் அதே ம.இ.கா. விலிருந்தே வந்தன!
ஆகக் கடைசியாக இன்றைய ஒற்றுமைத்துறை அமைச்சர், தன்னுடைய சரவாக் மாநிலைத்தைச் சேர்ந்த பெமாண்டு என்கிற அமைப்பின் மூலம் மீண்டும் ஒரு மாபெரும் பெருந்திட்டத்தை வெளிக் கொணரவிருக்கிறார். சரவாக்கில் உள்ள ஒரு நிறுவனம் மேற்கு மலேசியாவில் உள்ள இந்தியர்களின் மேம்பாட்டுக்காக ஒரு திட்டத்தை வரைவது நமக்குப் புதிதாக இருக்கலாம்.
சரி இதனையே இங்கிலாந்தில் உள்ள ஒரு நிறுவனத்திடம் இந்தத் திட்டத்தை ஒப்படைத்திருந்தால் ...? நமது அரசியல்வாதிகள் வாய் திறந்திருப்பார்களா? வெள்ளைக்காரன் என்றால் ஆகா ஓகோ என்று புகழ்ந்து தள்ளியிருப்பார்கள்! அந்த அளவு அவன் மேல் நம்பிக்கை. இப்போது என்னன்னவோ கதைகளைக் கூறுகிறார்கள்!
இப்போது நான் சொல்ல வருவது: 'இதையும் பார்த்து விடுவோமே!' என்று நான் சொல்ல வரவில்லை. இப்படி ஒரு திட்டத்திற்காக ஒற்றுமைதுறை அமைச்சர் தானே முன் நின்று அந்த நிறுவனத்திடம் - பிரச்சனையைப் புரிந்து கொள்ள - நடவடிக்கை எடுத்திருக்கிறாரே அதற்காக அவரைப் பாராட்டலாம். இங்குள்ளவர்களுக்கே நமது பிரச்சனை புரியவில்லை. அவர், சம்பந்தமில்லாத இன்னொரு மாநிலத்தைச் சேர்ந்தவர். பிரச்சனையைப் புரிந்து கொண்டால் தான் அவரால் அதற்கான தீர்வைக் காண முடியும்.
ஓர் அமைச்சர் என்கிற முறையில் திட்டங்கள் கிடைத்த பின்னர் அவர் செயல்பட வாய்ப்புகள் அதிகம். இன்றைய நிலையில் அவர் பிரச்சனைக்குப் புதியவர். இருக்கட்டும் அது ஒன்றும் பெரிய பிரச்சனை அல்ல. அந்தப் பெருந்திட்டம் கைக்கு வந்தபின்னர் அதனை வைத்துக் கொண்டு அவர் செயல்பட வாய்ப்புகள் அதிகம். அவர் செயல்பட மாட்டார் என்று யாராவது உத்தரவாதம் அளிக்க முடியுமா?
இந்திய சமுதாயத்தை அன்றே கைவிட்டவர்கள் ம.இ.கா. வினர். இப்போது ஜனநாயக செயல் கட்சியினர் இந்தியர்களைப் புறக்கணிக்க ஆரம்பித்திருக்கின்றனர். பி.கே.ஆர். இன்னும் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. ஆனால் இவர்களின் கைகளில் தான் நமது அரசியல் எதிர்காலம்.
பெருந்திட்டத்தை நான் வரவேற்கிறேன். ஆனால் அதற்கான கெடு என்பது இரண்டு மாதங்கள் போதுமானது. அதற்குப் பின்னர் மாண்புமிகு ஒற்றுமைத்துறை அமைச்சர் செயல்பட வேண்டும். இனி நமக்குக் காரணங்கள் வேண்டாம். செயல் தான் வேண்டும்.
No comments:
Post a Comment