Tuesday 26 March 2024

கோடரிக் காம்பு!

 

இந்து மதத்தைப் பற்றி  இஸ்லாமிய மதபோதகர் ஸம்ரி வினோத் தனது விபரீதக்  கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.  அதனால் இந்துக்களின் கோபத்திற்கு அவர் ஆளாகியிருக்கிறார்.  இருக்கும் இடம் வலுவான இடம் என்பதால்  வாய் கொஞ்சம் அகலமாகவே  திறக்கும் என்பதில் ஐயமில்லை!

அவரைப் பற்றி நாம் குறை சொல்லுவதில் பயனில்லை. அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலையை அவர் செய்கிறார்.  அவர் ஆட்டுவிக்கப் படுகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.  இந்துக்களைச் சினமூட்டும் வேலையை மீண்டும் செய்ய ஆரம்பித்திருக்கிறார்.  இருக்கட்டும். அவர் செய்யவில்லை என்றால் அவர் தொழில் பாதிக்கப்படும்.

இவரைப் போன்ற நபர்களின் செயலினால்  நிச்சயமாக அமைதியின்மை ஏற்படத்தான் செய்யும்.  அதனால் தான் நிறைய கண்டனக் குரல்களை நாம் பார்க்கிறோம்.  வேறு வழியில்லை. சமயத்தை இழிவுபடுத்தினால்  அங்குச்  சமாதானம் நிலவ வாய்ப்பில்லை.

இந்து சகோதரர்களுக்கு ஒரு வேண்டுகோளை நான் வைக்கிறேன்.  ஆளுக்கு ஆள் வன்மத்தைக் கையில் எடுப்பதைவிட  இந்து சமயத்தின் சார்பில் ஒரு குழுவாக செயல்படுவது அவசியம்.  இந்து சமயத்தினர் மட்டுமல்ல அனைத்து சர்வ சமயத்தினரும் சேர்ந்து  ஒரு குழுவாகச் செயல்பட்டு சம்பந்தப்பட்ட அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.  இந்துக்களையே ஒருவன் குறிவைக்கிறான் என்றாலும் அதற்கும் சர்வ சமயத்தினரும் கூடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

நிச்சயமாக நீங்கள் அதனைத்தான் செய்வீர்கள் என்பது எனக்குப் புரிகிறது.  இருந்தாலும் தெரிவிப்பது எனது கடமை.  இந்தப் பிரச்சனையில் இளைஞர்கள் கோபப்படுவது இயல்பே.  நம்மைப் பொறுத்தவரை இதனைத் தீர்க்க பேச்சுவார்த்தை ஒன்றே வழி.  நாம் ஒரு பலவீனமான சமுதாயம் என்பது  அவனுக்குப் புரிகிறது.  சீன சமுதாயத்தோடு அவர்கள் மோதுவதில்லை.

அதனால் நமக்குத் தெரிந்ததெல்லாம்  பேச்சுவார்த்தை மட்டும் தான்.  மற்றபடி நியாயங்கள் எல்லாம் எடுபடுவதில்லை.  என்ன செய்வது?  நமக்குத் தகுதி இல்லாதவர்களோடு  உட்கார்ந்து பேசுவதைத் தவிர  வேறு என்ன தான் செய்ய முடியும்?

வருங்காலங்களில்  இது போன்ற பிரச்சனைகள் எழாது என நம்பலாம். படித்த சமுதாயம் புரிந்துணர்வோடு  செயல்படும். அந்நாள் சீக்கிரமே வரும்.  அதுவரை பொறுமை காப்போம்!

No comments:

Post a Comment