மெட் ரிகுலேஷன் கல்வி என்றாலே ஒவ்வொரு ஆண்டும் இந்திய மாணவர்களுக்குப் பிரச்சனைக்குரியதாகவே தொடர்கிறது.
அதுவும் பிரதமர் அன்வார் வந்த பிறகு பிரச்சனை இன்னும் மோசமடைந்துவிட்டது. ஒவ்வொரு முறையும் போராட்டம் செய்ய வேண்டிய சூழலே ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.
பொதுவாக எல்லாவற்றிலும் பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால் பிரச்சனையாகவே தொடர்வது எந்த வகையிலும் நியாயமில்லை. முற்றுப்புள்ளியே வைக்க முடியாத அளவுக்கு அப்படி எதுவும் இல்லை.
முன்னாள் பிரதமர் நஜிப் அவர்களின் காலத்தில் 2,500 இடங்கள் ஒதுக்கப்பட்டன என்று கூறப்படுகிறது. சென்ற ஆண்டு அதுவும் பிரதமர் அன்வார் காலத்தில், 1,000 த்திற்கும் மேற்பட்ட இடங்களே ஒதுக்கப்பட்டன.
ஒரு விஷயம் நமக்குப் புரியவில்லை. கல்வி அமைச்சின் செயல்பாடுகளைப் பார்க்கும் போது ஒவ்வொரு ஆண்டும் இந்திய மாணவர்கள் மெட்ரிகுலேஷன் கல்விக்காக போராட வேண்டும் என்கிற சூழலை ஏற்படுத்துகிறதோ என்று தான் நினைக்க வேண்டியுள்ளது.
நம்மைக் கேட்டால் மிக எளிதாக இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும். ஏற்கனவே முன்னாள் பிரதமர் நஜிப் காட்டிய பாதை. - அதுவே சிறந்தது. ஒவ்வொரு ஆண்டும் 2,500 இந்திய மாணவர்கள் மெட் ரிகுலேஷன் கல்விக்காக அனுமதிக்க வேண்டும். அப்படி ஒரு எண்ணிக்கையை ஒவ்வொரு ஆண்டும் கொடுத்துவிட்டால் அதன் பிறகு யாரும் எந்தக் கேள்வியும் கேட்கப்போவதில்லை.
நமக்குள்ள தலைவலி எல்லாம் எத்தனை ஆண்டுகளாக இந்தப் பிரச்சனைக்காக நாம் பேச்சுவார்த்தைகள், ஆர்ப்பாட்டங்கள் என்று போய்க்கொண்டே இருப்பது, என்பது தான். ஒரு சிறிய பிரச்சனையைக் கூட பிரதமர் அன்வார் அரசாங்கம் தீர்வு காண முடியவில்லையே! மெட் ரிகுலேஷன் கல்வியைப் பொறுத்தவரை இந்திய மாணவர்களுக்கு அது தீராத பிரச்சனை. ஒவ்வொரு ஆண்டும் 'கிடைக்கும் ஆனா கிடைக்காது!' என்கிற பாணியிலேயே இழுத்துக் கொண்டே போகிறது!
பிரதமர் அன்வார் எந்தவொரு இந்தியர் பிரச்சனையையும் கையாள முடியவில்லை என்பது தான் இந்நாள் வரை அவர் மீதான குற்றச்சாட்டு. அதை பொய்யென்று சொல்லவும் முடியாது.
பிரதமர் இந்த ஆண்டாவது இந்தப் பிரச்சனையை ஒரு முடிவுக்குக் கொண்டு வரவேண்டும். கல்வியில் கூட பாரபட்சம் பார்ப்போம் என்றால் அப்படிப்பட்ட அராசங்கம் எங்களுக்குத் தேவையா என்று நாங்களும் சிந்திக்க ஆரம்பித்துவிட்டோம்.
கல்வி மிக வலிமையான ஆயுதம். அது எங்களுக்கும் சேர்த்துத் தான்!
No comments:
Post a Comment