Monday, 11 November 2024

மாநில அளவில் செயல் படலாமே!

 


இந்திய சமூகத்தில் உருமாற்றத்தைக்  கொண்டுவர அமைக்கப்பட்ட மித்ராவைப் பற்றி தொடர்ந்து சர்ச்சைகள்  வருவதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

மித்ரா  என்று ஆரம்பிக்கப்பட்டதோ அப்போது இருந்தே சர்ச்சைகளும் ஆரம்பித்துவிட்டன. நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.  ஆரம்ப காலத்தில் மித்ரா அல்லது செடிக்  என்கிற பெயரில் இருந்தாலும்  அப்போது அதன் செயலபாடுகள் எதுவும் நிறைவளிக்கவில்லை என்பது நமக்குத் தெரியும்.  ஏதோ ஊழல் ஊழல் என்கிற சத்தம் கேட்டதே தவிர அதனையெல்லாம் நம்மால் உறுதிப்படுத்தப்பட முடியவில்லை.

அதனால் தான் இப்போது பலவகைகளில் இந்தியர்கள் மித்ராவுக்கு நெருக்குதல்கள் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். சும்மா இருந்தால் எதுவும் நடவாது என்பதைப் புரிந்து கொண்டனர்.  இப்போது நாலாபுறமிருந்தும்  குறைகூறல்கள் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றன. நல்லது தான். இல்லாவிட்டால்  இவர்கள் எதையும் அசைக்கப் போவதில்லை.

இப்போது உள்ள மித்ரா நடைமுறையை மாற்ற வேண்டும் என்றே தோன்றுகிறது.  மித்ரா ஒவ்வொரு மாநிலத்திலும் தனது கிளைகளை அமைக்க வேண்டும். அப்போது தான் மக்கள் எளிதாக மித்ராவை அணுக வழி பிறக்கும்.  தொலைபேசிகளை ஒரு புறம் ஒதுக்கவிட்டு நேரடியாக இந்திய வியாபாரிகளை மித்ரா சந்தித்து அவர்களுக்கு ஏற்றவாறு  செயல்பட முடியும்.  

இந்திய வியாபாரிகளுக்கு உதவுவது தான் மித்ராவின் நோக்கம். கோலாலம்பூரிலிருந்து கொண்டு மக்களைச் சந்திப்பது என்பது ஆகாத காரியம்.  மாநிலங்களிலிருந்து செயல்படுங்கள்.வியாபாரிகளும் உங்களைத் தேடி வருவார்கள். நீங்கள் ஒரே ஒரு இடத்தில் தலைமையகத்தை அமைத்துக் கொண்டு   "அனைவரும் இங்கே வாருங்கள்" என்று அழைத்தால்  எதுவும் ஆகப்போவதில்லை.  மாநில ரீதியில் என்றால் வியாபாரிகளின் நிலையை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

மித்ரா வியாபாரிகளுக்காகத்தான்  உருவாக்கப்பட்டது.  நீங்கள் உதவ வேண்டும் என்கிற அக்கறை உங்களுக்கு இருந்தால்  நீங்கள் கொஞ்சம் கீழே இறங்கித்தான் வரவேண்டும். இடையே துணை அமைச்சர் ரமணன் மித்ராவின்  பாதையையே  மாற்றிவிட்டார். எப்படியோ இப்போதே நீங்கள் மாற்றிக்கொள்ள வாய்ப்புண்டு. இந்தியர்கள் வியாபாரத்தில்  வளர வேண்டும் என்கிற நோக்கத்திலிருந்து மித்ரா தனது பாதையை மாற்றிக்கொள்ளக் கூடாது.

மித்ரா மாநில அளவில் செயல்பட்டால் இந்தியர்களின் ஆத்ரவு பெருகும்  என்பதில் சந்தேகமில்லை.

No comments:

Post a Comment