உயர் கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ ஸம்ரி அப்துல் காதிர், உயர் கல்விக் கூடங்களில் மாணவர்களின் சேர்க்கைப் பற்றிய விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார்.
அதுவும் மருத்துவ மாணவர் சேர்க்கையில் எந்த இனப்ப்பாகுபாடும் காட்டப்படுவதில்லை என்று வேறு கூறியிருக்கிறார். அமைச்சரின் விளக்கத்திற்கு நன்றி கூறுகிறோம்.
நம் இந்திய மாணவர்களைப் போலவே மலாய் மாணவர்களும் மருத்துவம் பயில வாய்ப்பில்லாமல் பலர் இருப்பதாகக் கூறியிருக்கின்றார் அமைச்சர். அவர்கள் அனைவரும் ஆனைத்துப் பாடங்களிலும் "ஏ" பெற்ற மாணவர்கள். இருப்பினும் அவர்களுக்கும் வாய்ப்பில்லை என்பதாகக் கூறியிருக்கிறார்.
இன்றைய நிலையில் மருத்துவம், மருந்தகம் ஆகிய படிப்புகளுக்கு ஏகப்பட்ட கிராக்கி என்பதில் ஐயமில்லை. இவைகள் இரண்டுமே பணம் சார்ந்த படிப்புகள். அதனால் போட்டிகள் அதிகம் இருக்கத்தான் செய்யும்.
அமைச்சரே சொன்னது போல மருத்துவம் பயில ஒவ்வொரு ஆண்டும் சுமார் 700 இடங்கள் உள்ளன. பயில்பவர்கள் நமது மலேசிய மாணவர்கள் அப்படியிருந்தும் நாட்டில் மருத்துவர் பற்றாக்குறை என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயமாகிவிட்டது. நம் நாட்டில் சேவை செய்ய வருடந்தோறும் 700 மருத்துவர்கள் வெளியாகின்றனர் என்பதால் மருத்துவர் பற்றாக்குறை எங்கிருந்து வந்தது.? இந்த 700 "ஏ" பெற்ற மாணவர்கள் கடைசிவரை 700 ஆகத்தான் இருக்கிறார்களா? அல்லது 70 ஆக குறைந்து விடுகின்றனரா? அவர்கள் உண்மையில் "ஏ" பெற்றவர்களா அல்லது மருத்துவம் பயில தகுதியற்றவர்களா? இப்படிப் பல கேள்விகள் உள்ளன.
இந்திய மாணவர்களைப் பொறுத்தவரை மருத்துவம் அவர்கள் விரும்பும் துறை. அதனால் அவர்கள் பாதியில் ஓடுகின்ற பழக்கம் இல்லை. தகுதி தான் அடிப்படை என்றால் மாணவர்கள் கல்வி முடியும்வரை இருக்கத்தான் செய்வார்கள். அவர்களைப் பிடித்து இழுத்து வந்து படிக்க வைத்தால் அது தோல்வியில் தான் முடியும்.
இதனையெல்லாம் ஒரு காரணமாக வைத்து இந்திய மாணவர்களை 'ஒதுக்கிவிடுவது' சரியான போக்கு அல்ல என்பதை அமைச்சருக்கு நினைவூட்டுகிறோம். தகுதி தான் அடிப்படை என்றால் தகுதியான மருத்துவர்கள் ஒருசில ஆண்டுகளில் உருவாகிவிடுவார்கள். அதுவரை பொறுத்திருப்போம்!
No comments:
Post a Comment