Sunday, 17 November 2024

அவைகளும் உயிர்கள் தானே!


பாலஸ்தீன மக்களின் உயிர் முக்கியம் என்பது தவறல்ல. அவர்களுக்காகப் போராடுவது என்பது கூட  தவறல்ல.  அதனையெல்லா யாரும் குறைசொல்லுவதில்லை.

ஆனால் ஒரே ஒரு குறை முக்கியமாக ஒரு சிலருக்குப் பெருங்குறையாகத் தெரிகிறது. தெரு நாய்களுக்கு உணவளிப்பது  பெருங்குறையாம். அது இஸ்லாமிய மதத்திற்கு எதிரானதாம்.  இப்படியெல்லாம் பேசுவதற்கு நம்மிடையே மக்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர்!

உணவகம் நடத்தும் இஸ்லாமியப் பெண் ஒருவர்  இதனையெல்லாம் சொல்லி அழுகின்றார்.   உணவகத்தில் மிஞ்சிப்போகும் உண்வுகளை நாய்களுக்குப் போடுவதை ஒரு சிலர் விரும்புவதில்லை. அவர்கள் அதனை வெறுக்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரை நாய்கள் என்பது உயிரற்ற ஜடமாக அவர்கள் கருதுகின்றனர்.  அவைகளுக்குச் சோறு போடுவதா என்று அவரை வெளுத்து வாங்குகின்றனர்.

அந்தப் பெண்மணி அவர் வீட்டில் 50க்கும் மேற்பட்ட பூனைகளை  வளர்க்கிறாராம்.  குறை சொல்பவர்கள் அந்தப் பூனைகளுக்கு ஏதேனும் உணவு பொட்டலங்களைக் கொடுக்கிறார்களா அல்லது பணம் தான் கொடுக்கிறார்களா? எதுவுமில்லை!  ஆனால் குறை சொல்ல முன்னுக்கு வந்து நிற்கிறார்கள்!  

பிராணிகளை விரும்புவர்களுக்கு  எல்லாமே உயிர்கள் தான்.  அவர்கள் எதனையும் பிரித்துப் பார்ப்பதில்லை. ஒன்றை நன்றாகக் கவனித்தால் இந்தக் குறைகளை அள்ளி விடுபவர்களிடம் ஒரு  குணம் உண்டு.  பூனைகளை வளர்ப்பார்கள். அவைகளிடம் அளவற்ற அன்பைச்  செலுத்துவார்கள்.  கொஞ்சம் சலிப்பு ஏற்பட்ட பின்னர் தூக்கி,  குழந்தைகளைப் போல் வளர்த்த அந்தப் பூனைகளை,    ஏதோ ஒரு தாமானில் வீசிவிட்டுப் போய்விடுவார்கள்! இதை நாங்கள் அடிக்கடி பார்க்கிறோம். பாவம் அந்தப் பூனைகள். 

மதம்,  நாய்களை வளர்க்கக் கூடாது என்கிறதாம். ஆனால் மதம் விரும்பும் அந்தப் பூனைகளை  ஏன் தெருக்களில்  விட வேண்டும்?  அதற்கு மதம் எதுவும் சொல்லுவதில்லையோ? அந்த உயிர்களை அப்படியே வீசிவிட்டுப் போவதை மதம்  ஏற்றுக்கொள்கிறதா?  பூனைகளோ தெரு நாய்களோ யாரும் வதம்  செய்தால் நீதிமன்றம் நடவடிக்கை எடுப்பதை நாம் பார்க்கிறோம்.  அவைகளுக்குச் சாப்பாடு போடாமல்  கொல்வதும் குற்றம் தான். அனைத்து உயிர்களும் சமம்.

கடவுள் படைத்த தெரு நாய்களின் உயிரும்  நம் மனித உயிர் போன்றது தான்!  அவைகளுக்கு உணவு அளிக்கும் அந்தப் பெண்மணியும் கடவுளின் உயர்ந்த படைப்பு தான்!

No comments:

Post a Comment