Friday, 8 November 2024

வேப் புகைத்ததால் வந்த வினை!


 பொதுவாகவே புகைத்தல் என்பது கேடு.  அது வேப் ஆக இருந்தாலும் சரி, சாதாரண சிகிரெட்டாக இருந்தாலும் சரி அல்லது விலை உயர்ந்த   ஹவானா சுருட்டாக இருந்தாலும் சரி,  உடலுக்குக் கேடு கேடு தான். அதில் எந்த சமரசமும் செய்துகொள்ள வாய்ப்பில்லை.

கேடு என்று  சொல்லுகின்ற மருத்துவர்களே  புகைப்பதை விட்டுவிடத் தயாராக இல்லை  என்கிற போது   மற்றவர்களைச் சொல்லிப் பயனில்லை.

அதுவும் மாணவரிடையே இப்படி  ஒரு பழக்கம் இருந்தால் யார் என்ன செய்ய முடியும்?  சில  மாணவர்கள் தெரிந்தே செய்கிறார்கள், பலர் மறைவாகச் செய்கிறார்கள்.  ஆசிரியரே செய்யும் பொழுது  மாணவர்கள் செய்யலாமலா இருப்பார்கள்?

இன்று பள்ளிகளில் மாணவரிடையே புகைப்பது என்பது  சர்வ சாதாரணமாக  நடப்பது தான். பெர்லீஸ், கங்காரில் நடந்த சம்பவமும் எப்போதும் போல நடப்பது தான்.  ஆனால் அந்த மாணவன்  மேல் தளத்திலிருந்து  கீழே விழுந்தான்  என்பதால் தான் செய்தியாயிற்று. மற்றபடி  மாணவர்கள் புகைப்பது ஒன்றும் புதிதல்ல.

இது போன்ற சம்பவங்கள் பல வெளியே வருவதில்லை.  நிர்வாகங்கள் அனைத்தையும் மறைத்து விடுகின்றன. பள்ளிகளுக்குக் கெட்ட பெயர் வரும்  என்பதை மறைக்க விரும்புகிறார்களே தவிர மணவர்களைத் திருத்துவதற்கான முயற்சிகள் எதுவும் நடப்பதில்லை மாணவர்கள் திருந்துவார்கள் என்கிற நம்பிக்கையும் நிர்வாகத்திற்கும் இல்லை!

எப்படிப் பார்த்தாலும் புகைப்பிடிப்பது என்பது சிறியவர்கள், பெரியவர்கள்  அனைவருக்குமே ஆபத்தானது.  புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்கள் உண்டு  என்கிறார்கள் மருத்துவர்கள்.  அதுவும் பள்ளிகாலத்திலேயே புகைப்பிடித்தால்  அவர்களுக்கு எந்த வயதில் எந்த வியாதி வரும் என்று அனுமானிக்கக் கூட வழியில்லை.

புகைப்பிடிப்பதின் ஆபத்தைப்பற்றி இன்னும் அதிகம் விழிப்புணர்வு மாணவர்களுக்குத் தேவை  என்பதைத்தான் கங்கார் பள்ளியில் நடந்த சம்பவம் நமக்கு நினைவுறுத்துகிறது. அந்த மாணவன் புகைப்பிடித்தான் அதனால் மயங்கி கீழே விழுந்தான்.  அவனுக்கு இது முதல் முயற்சியாக இருக்கலாம்.

பள்ளிகள் அலட்சியம் காட்டாமல் இன்னும் அக்கறையோடு செயல்பட வேண்டும்  என்பதே நமது பிரார்த்தனை.

No comments:

Post a Comment