Friday, 15 November 2024

வேப் சிகிரெட்டுகள் தடை செய்யப்பட வேண்டும்



சிகிரெட்டுகள் எந்த வடிவில் வந்தாலும் அவைகள் விஷத்தைக் கக்குபவைகள் தான். அதில் எந்த கருத்து வேறுபாடில்லை.

வேப் சிகிரெட்டுகள் மாணவர்களிடையே அதிகப் பயன்பாட்டில் இருப்பது ஒன்றும் புதிதல்ல. சமீபத்தில் ஒரு மாணவன் அதனைப் புகைக்கப் போக அவன் மயக்கமடைந்து கீழே விழ,  அது  நாடெங்கும் தீயாய் பரவிவிட்டது. மற்றபடி மாணவர்களுக்கு வேப் என்பது புதிதல்ல.

ஆனால் சமீபகாலமாக வேப் சிகிரெட்டுகள தடை செய்யப்பட வேண்டும் என்கிற குரல்  ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. அதனை நல்ல நேரத்தில் நல்ல சகுனத்தில் ஒலிக்கும் குரலாகவே பார்க்கிறேன்.  பகாங், சுல்தான் அவர்கள்   வேப் அல்லது மின்னியல் சிகிரெட்டுகள்  தடை செய்யப்பட வேண்டும்  என்று  அந்தப் பிரச்சாரத்தை தொடங்கி வைத்திருக்கிறார். அவரின் அந்தக் கருத்துக்கு  மலேசிய மருத்துவ சங்கமும் ஆதரவு கரம் நீட்டியிருக்கிறது.

மருத்துவர் சங்கம் இந்த சிகிரெட்டுகள் மூலம் மக்களுக்கு   நிறைய  உடல் சார்ந்த பிரச்சனைகள் எழுவதாகக் கூறியிருக்கிறது. சிகிரெட்டுகள் பிடிப்பதில் இது உயர்ந்தது, அது தாழ்ந்தது என்கிற பேதம் எதுவுமில்லை. எல்லாமே நமது உடம்பில்  ஏதோ ஒரு நோயை நோக்கி நகர்கின்றது.  உடனடியாக அது தெரியாவிட்டாலும் நாளடைவில் அது  புற்று நோயாக மாறலாம், இதய நோயாக மாறலாம் - எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.  அந்த நிலையில் நம்மால் எதுவும் செய்ய முடியாது. மருத்துவர்கள் சொல்லுவதைக் கேட்டுத்தான் ஆக வேண்டும்.

சிகிரெட்டுகளைத் தடை செய்ய  முடியாது.  அது பல்லாண்டுகளாக நம்மிடையே ஒட்டிக்கொண்டு விட்ட  ஒரு விஷம்.  புதிதாக வந்த இந்த நவீன எமன்களைத்  தடை செய்யலாம்.  வேப், மின்னியல் சிகிரெட்டுகள்  நாட்டிற்குத் தேவையற்ற நஞ்சு.  ஒழிக்கப்பட வேண்டிய நஞ்சு.  அதுவும் இளைய சமுதாயத்தினரிடையே உள் புகுந்துவிட்ட நஞ்சு.

எப்படியோ "தடை செய்க" என்று நாம் சொன்னாலும், கத்தினாலும் அதைவிட நாமே அதற்குத் தடை செய்வது தான் பொறுத்தமாக இருக்கும். தடை செய்தால் அது கள்ளத்தனமாக நாட்டுக்குள் புகுந்துவிடும்.

ஆக சிறப்பு,  நம்மை நாமே திருத்திக் கொள்வது தான்!

No comments:

Post a Comment