Tuesday, 12 November 2024

கங்குவா படத்திற்கு ஏன் இந்த நிலைமை?


 கங்குவா என்பது ஒரு தமிழ் திரைப்படம்  அவ்வளவு தான். பிடித்தால் பாருங்கள் பிடிக்காவிட்டால் பார்க்காதீர்கள்!  ஒரு சினிமா படத்தைப் பற்றி வேறு ஏதும் அபிப்பிராயம்  சொல்லுவதற்கு  என்ன உண்டு? 

ஆனால் ஒரு சிலரின் நடவடிக்கைகள் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றது என்பது மட்டும்  உண்மை. நாம் என்ன சினிமாவிற்குப் புதியவர்களா?  நாம் சினிமா பைத்தியங்கள் என்பதை ஊரே அறியும்.  அதனால் தான் சினிமா நடிகர்களையே  முதலமைச்சர்களாக  மாற்றி வைத்திருக்கின்றோம்.

அப்படிப்பட்ட நாம் எத்தனையோ சினிமா படங்களைப் பார்த்திருக்கின்றோம். அதில் தோல்விப் படங்களுக்கு என்ன கணக்கா வைத்திருக்கிறோம்?  தோல்வி என்றால் தோல்வி தான். தோல்விப் படங்களை ஏற்றுக்கொண்டு தானே இருக்கிறோம்.

எந்த ஒரு தோல்விப்படத்திற்கும்  வராத கோபம் ஏன் இந்தப் படத்திற்கும் மட்டும் வந்திருக்கிறது?  படம் வந்து முழுமையாக ஒரு நாள் கூட ஆகாத நிலையில் அப்படி என்ன தான் இந்தப்படத்தின் மீது  அப்படி ஒரு கோபம்? படம் தோல்வி என்றால் உண்மையில் படத்தை தயாரித்த நடிகர் சூரியாவுக்குத் தான் கோபம் வரவேண்டும்.   ஆனால் பாவம் படம் பார்க்கும் இரசிகனுக்குக் கோபம் வரவேண்டிய அவசியமில்லையே!

ஆனால் இந்த அளவு வன்மத்தைக் கக்கிய இரசிகனுக்குக் கோபம் வரவேண்டிய அவசியம் என்ன?  இதன் பின்னணியில் ஏதேனும் அரசியல் உண்டோ என்று தான்  நாம் சந்தேகிக்க வேண்டியுள்ளது.  அதுவும் சூர்யா என்றாலே அவருடைய ஜாதிக்காரர்களே அவருக்கு எதிரிகளாக இருக்கின்றனர். அது ஒரு வகையான அரசியல்! நமக்கு அது விளங்காது! அந்த அரசியல் நாற்றம் நமக்கு வேண்டாம்!

நாம் சொல்ல வருவதெல்லாம் எந்தப்படமாக இருந்துவிட்டுப் போகட்டும். படத்தை ஒரு வாரமாவது ஓட விடுங்கள். விமர்சனம் செய்யுங்கள். சரியோ தவறோ மக்களுக்குப் பிடித்தால்  பார்க்காட்டும். பிடிக்காவிட்டால் படம் தியேட்டரிலிருந்து  தூக்கப்படும். அவ்வளவு தானே?  இதில் என்ன ஆர்ப்பாட்டம் வேண்டியுள்ளது.   இன்னொன்று படம் பார்த்தவர்கள் அனைவருமே  ஒரு கலவையான  விமர்சனத்தைத் தானே வைத்திருக்கிறார்கள்? சிலர் நன்றாக இருக்கிறது என்கிறார்கள் சிலர் நன்றாக இல்லை என்கிறார்கள். இரசிகர்களே முடிவு செய்யட்டுமே.

ஆனால்  ஆர்ப்பாட்டம் செய்பவர்களின்  நோக்கம் சரியாக இல்லை. யாரும் தியேட்டர் பக்கம் வரக்கூடாது  என்பது தான் அவர்களின் நோக்கமாக இருக்கிறது!  சரியில்லையே!

வெகு விரைவில் இவர்களின் அரசியல் வெளிவரும். அதுவரை காத்திருப்போம்!

No comments:

Post a Comment