தீபதீ
அரசியல்வாதிகளின் தீபாவளி விருந்து என்பது ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி வருவது போல அவர்களும் "நாங்கள் இன்னும் உயிரோடு இருக்கிறோம்" என்பதைக் காட்டிக் கொள்ளுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் அவர்களுக்குத் தீபாவளி தேவைப்படுகிறது!
மற்ற நாள்களில் இவர்கள் எங்கே என்பது யாருக்கும் தெரியாத இரகசியம். அவர்கள் மக்கள் பிரதிநிதிகள் தான். ஆனால் மக்கள் கண்களுக்கு அகப்படாத ஆந்தை போன்றவர்கள். இரவு நேரங்களில் மக்களைச் சந்திப்பவர்கள்.
அவர்கள் என்ன தான் நேரமில்லாது பணி செய்பவர்களாக இருந்தாலும் மக்களுக்காக மட்டும் அவர்கள் மக்கள் முன்னால் காட்சியளிப்பது அந்த ஒரு நாள் தான். அது தான் தீபாவளி மற்றும் ஏனைய பெருநாள்கள் காலத்தில். அது அவர்களுக்கு அவசியம். நாங்கள் உங்களுக்கான சேவையில் இருக்கிறோம் என்பதைக் காட்டிக்கொள்ள.
அந்தப் பெருநாள் காலங்களின் செலவு கூட அவர்களின் 'பாக்கெட்டில்' இருந்து வருவதில்லை. எல்லாம் மக்களின் வரிப்பணம். எப்படியோ நாம் இது பற்றியெல்லாம் குறை சொல்லவில்லை. மக்கள் உங்களுக்குக் கொடுத்த பணி என்ன? அதை ஏன் செய்ய மறுக்கிறீர்கள்? உங்களை எங்கே தேடுவது. தேவையான நேரத்தில் உங்களைப் பார்ப்பது எங்கே? எதுவும் தெரிவதில்லை. தீபாவளி நேரத்தில் உங்களிடம் மக்கள் தங்களது பிரச்சனைகளைக் கூறலாமா? மனு கொடுக்கலாமா?
மற்ற நாள்களில் மக்களைச் சந்திக்கவே பயப்படுகிறீர்கள். அவர்களுக்கு உதவிகள் தேவைப்படுகின்றன. நீங்கள் உதவி செய்யத் தயாராக இல்லை. உங்களுடைய முகவரி தெரிவதில்லை. தெரிந்தாலும் அங்கு நீங்கள் இருப்பதில்லை.
அடாடா! மக்களுக்குச் சேவை செய்ய என்ன மாதிரி மக்கள் பிரதிநிதிகள்! இவர்களைப் பிரதிநிதிகள் என்று இவர்களுக்கு நாம் மதிப்பு கொடுப்பதே பெருந்தவறு. இவர்களுக்கு நாம் ஆயிரம் ஒய்பி, ஆயிரம் டத்தோ - தேவை தானா சொல்லுங்கள்? மாலை, மரியாதைகள் - இவைகள் தேவைதானா? என்று நாம் அவர்களுக்கான மரியாதையைக் குறைக்கிறோமோ அப்போது தான் அவர்கள் திருந்துவார்கள். அதுவரை நம்மை அவர்கள் மதிக்கப்போவதில்லை!
No comments:
Post a Comment