RON 95 பெட்ரோல் மலேசியர்களுக்குக் குறைவான விலையில், அரசாங்க மானியத்துடன் விற்கப்படுகிறது என்பது மலேசியர்கள் உணர்ந்திருக்கிறோம். அதன் குறைந்த விலை மலேசியர்களுக்கு மட்டுமே.
குறைந்த விலையில் மலேசியர்களின் நலனுக்காக விற்கப்படும் அந்தப் பெட் ரோலை பிற நாட்டினர் பங்கு போடுவது ஏற்கக் கூடியது அல்ல. பிற நாட்டினர் என்னும் போது அது சிங்கப்பூர், தாய்லாந்து அந்த இரு நாட்டினரைத்தான் குறிக்கும்.
சிங்கப்பூர் போன்ற மிக மிக வளர்ச்சியடைந்த நாடுகளில் வாழ்பவர்கள் அங்குள்ள வளங்களைத்தான் பயன்படுத்த வேண்டும். அங்கு அதன் விலை கூடுதலாக இருந்தாலும் சம்பளமும் கூடுதலாகத்தானே வாங்குகிறீர்கள். அங்குள்ள அரசாங்கமும் அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்த்துத் தான் விலையை நிர்ணயம் செய்திருக்கிறது. அங்கு விலை கூடுதல் என்று சொல்லி இங்கு வந்து வாங்குவது இன்னொரு நாட்டின் வளத்தைச் சுரண்டுவது என்பது தான் பொருள். அதுவும் ஒரு வகை திருட்டு தான்
இந்தத் திருட்டு என்பது நீண்ட நாள்களாக நடந்து கொண்டிருப்பது என்பது இரகசியம் அல்ல. ஆனால் எந்த நடவடிக்கையும் அவர்கள் மீது எடுக்கப்படவில்லை என்பது ஏன் என்று தெரியவில்லை. அல்லது எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. என்ன செய்ய? நல்ல காலத்தில் யாரும் கண்டு கொள்வதில்லை. கஷ்ட காலத்தில் ஒவ்வொன்றையும் கணக்குப் பார்க்க வேண்டிய நிலைமை!
முடிந்து போன கதையை விடுவோம். இனி அந்த இரு நாட்டினரும் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருப்பர் என நம்பலாம். விதிமுறைகள் இனி கடுமையாகவே இருக்கும். அதனை எப்படி மீறுவது என்பதையும் அவர்கள் புரிந்து வைத்திருப்பார்கள்! இதெல்லாம் அவர்களுக்குப் புதிதா!
இத்தனை ஆண்டுகள் அனுபவித்தீர்கள். அது போதும். இது அரசாங்கத்தின் முடிவு.. மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அது தான் அனைவருக்கும் நல்லது!
No comments:
Post a Comment