சமீபத்திய ஹீரோ என்றால் அது வேறு யாருமல்ல நமது மாண்புமிகு பினாங்கு, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர் அவர்கள் தான்.
அவர் தான் இப்போது கல்லடிபட்டுக் கொண்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர். அவர் பிரதமர் அன்வாரை, மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா ஆகியோருடன் ஒப்பிட்டுப் பேசியதை பலர் கடுமையாக விமர்சித்திருக்கின்றனர்.
ஆனால் ஒன்றை பலர் மறந்துவிட்டனர். இன்றைய நிலையில் பிரதமர் அன்வார் இந்தியர்களிடமிருந்து கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். உண்மை தான். இல்லையென்று சொல்லிவிட முடியாது. காந்தி, மண்டேலா ஆகியோருடன் ஒப்பிடும் போது குறைந்தபட்சம் பிரதமர், அந்த ஒப்பீடு தனக்கு ஏற்றதல்ல என்பது அவருக்கே தெரியும். ஆனால் அதுவே அவரின் தேர்தலுக்கு முன்னர் தனது எம்.ஜி.ஆர். வேடமும் பிரதமர் ஆன பின்னர் தனது நம்பியார் வேடமும் ஞாபகத்திற்கு வரத்தான் செய்யும்.
இப்போது அவருக்கு வந்திருக்கும் காந்தி, மண்டேலா பாராட்டு அவரை கொஞ்சமாவது யோசிக்க வைக்கவே செய்யும். நாம் பழையபடி எம்.ஜி.ஆர். ஆகவே மாறுவோம். இந்திய சாமுதாயத்திற்கு நாம் சொன்ன சொல்லை காப்பாற்றுவோம் என்று அவர் யோசிக்கலாம். வாய்ப்புண்டு. உலகின் இரு மாபெரும் தலைவர்களான காந்தியையும், மண்டேலாவையும் இந்நாட்டில் உள்ள ஒரு நாடாளுமன்ற உறுப்பினரான ராயர் ஒப்பிட்டுப் பேசுகிறார் என்றால் அதற்காகவாவது தான் இந்திய சமுதாயத்திற்கு நல்லதை செய்ய வேண்டுமே என்கிற ஊக்குவிப்பாகக் கூட அதுவும் அமையலாம். அவர் தானே நமது பிரதமர், நமது முன்னேற்றமும் அவரின் பொறுப்பு தான். அதனை அவர் தட்டிக்கழிக்க முடியாது அல்லவா?
கெடுதலிலும் நல்லது உண்டு என்பார்கள். கசப்பிலும் இனிப்புண்டு என்கிறார்கள் வைத்தியர்கள். ஆக ராயர் சொன்ன "காந்தி, மண்டேலா" எடுத்துக்காட்டு நல்லதாகவே அமையும் என எதிர்பார்ப்போம்.
No comments:
Post a Comment