டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் பிரதமர் ஆகி இதோ வருகிற 24.11.24, ஞாயிற்றுக் கிழமையோடு இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.
இந்த இரண்டு ஆண்டுகளில் அவர் தலைமை தாங்கும் ஒற்றுமை அரசாங்கத்தின் அடைவுநிலை என்ன நிலைமையில் இருக்கிறது என்கிற விவாதமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
தேர்தல் சீர்திருத்தங்களுக்கான அமைப்பு - பெர்சே - (BERSIH) பிரதமர் அன்வார் தலைமையிலான அரசாங்கத்திற்கு "D" என்னும் மதிப்பெண்ணைத்தான் கொடுத்திருக்கிறது. அதாவது ஏதோ பிழைத்துப்போ என்பது போல 45.8 என்னும் புள்ளிகளைக் கொடுத்திருக்கிறது.
ஆனால் நம் நாட்டில் 45.8 புள்ளிகள் என்றால் மிக உயர்ந்த படிப்புகளையெல்லாம் படித்துவிட முடியும். அதனால் நமது மலேசிய மதிப்பீட்டில் அது உயர்ந்த மதிப்பெண் தான். குறைந்த மதிப்பெண் என்று சொல்லிவிட முடியாது.
பெர்சே யை விட்டு, மக்களிடையே உள்ள மதிப்பெண்கள் என்னவாக இருக்கும்? ரொம்பவும் மோசமாகத்தான் இருக்கும். மக்களைப் பொறுத்தவரை இதுவரை இருந்த அரசாங்கங்களைவிட இதுவே மிக மோசமான நிர்வாகத்தைக் கொண்ட அரசாங்கம் என்பது தான் மக்களின் தீர்ப்பாக இருக்கின்றது.
பிரதமர் செய்யும் சில நல்ல விஷயங்கள் எதுவும் மக்களுக்குச் சென்றடையவில்லை. அவர்களைப் பொறுத்தவரை அன்றாடப் பிரச்சனைகள் தான் அவர்களை அழுத்துகின்றன. குறிப்பாக வேலையில்லாப் பிரச்சனை, உணவுப்பொருள்களின் விலையேற்றம் - இவைகள் முக்கியமானவை - மக்களைப் பெரிய அளவில் பாதிக்கின்றன.
இந்த அளவு பாதிப்பு உள்ள போது அவர்கள் எப்படி ஒற்றுமை அரசாங்கத்திற்கு 45,8 புள்ளிகள் கொடுப்பார்கள்? நேரடியாக மக்களிடம் கேட்டால் பெர்சே கொடுக்கும் புள்ளியைவிட அதில் பாதியைத்தான் மக்கள் கொடுப்பார்கள்! இது தான் கீழ்மட்ட நிலவரம்.
பிரதமர் செய்துவரும் மாற்றங்கள் மக்களுக்குச் சென்றடைய ஒரு சில ஆண்டுகள் பிடிக்கும். அது வரை மக்களிடமிருந்து தேர்ச்சி பெறும் அளவுக்கு அதிகப் புள்ளிகளை ஒற்றுமை அரசாங்கம் எதிர்பார்க்க முடியாது!
No comments:
Post a Comment