பள்ளி மாணவர்கள் எதனை நோக்கி நகர்கின்றனர்? ஒன்றும் புரியவில்லை.
செனற வாரம் தான் ஒரு மாணவன் பள்ளி மேல் தளத்திலிருந்து கீழே விழுந்ததைப் படித்தோம் அது வேப் சிகிரெட் பிடித்ததனால் வந்த விபத்து. அதுவும் பள்ளி மாணவர்களுக்கு ஏதோ ஒரு சமிக்ஞையைக் காட்டுகிறது என்று தான் சொல்ல வேண்டும்.
இதோ இப்போது ஒரு பள்ளி மாணவி, இரண்டாம் பாரம் படிக்கின்ற மாணவி, அவளுக்கு என்ன துன்பமோ துயரமோ, தெரியவில்ல பள்ளியின் எட்டாவது மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டாள். அவள் எழுதி வைத்த கடிதத்தில் தனது பள்ளி பாடங்களில் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகவே தான் இந்த முடிவுக்கு வந்ததாக அவள் எழுதியிருந்தாள்.
நமக்குள்ள கவலை எல்லாம் இது போன்ற செயல்கள் எல்லாம் மற்றவர்களுக்கு, மற்ற மாணவர்களுக்கு, ஓர் எடுத்துக்காட்டாக அமையுமோ என்கிற பயம் தான். இத்தோடு முடிந்தால் அதனை மறந்துவிடலாம். ஆனால் தொடர்ந்தால்? அது தான் நமக்குப் பயத்தை ஏற்படுத்துகிறது.
பள்ளியின் சுற்றுச்சூழல் எப்படியோ நமக்குத் தெரியவில்லை. எங்களது காலத்தில் அப்படியெல்லாம் ஏதோ குறைகள் இருந்ததாக நாம் சொல்ல முடியாது. ஆனால் அப்போதெல்லாம் இப்போது உள்ளது போல் மிக உயர்ந்த மாடி கட்டடங்கள் இருந்ததில்லை. அதனால் தற்கொலை எண்ணங்கள் வந்ததில்லை. இன்றைய நிலையோ வேறு. எட்டு மாடி கட்டடம் என்பது கூட இப்போது தான் எனக்குத் தெரிய வருகிறது. இது கூட ஏதோ ஒன்று இரண்டு தான் நாட்டில் இருக்கும் என நம்புகிறேன்.
எது எப்படி இருந்தாலும் மாணவர்களின் இது போன்ற செயல்கள் நாட்டிற்கு நல்லதல்ல. மன அழுத்தம் என்று சொல்லி தொடர்ந்து நடக்கலாம். அல்லது பலவேறு காரணங்களைச் சொல்லியும் நடக்கலாம்.
இதற்குப் பள்ளிகள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். மாணவர்களின் தேவைகளை அறிந்து, அவர்களைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். பாடங்கள் கடினம் என்பதைவிட அதனைச் சுலபமாக்க வழிவகைகள் காண வேண்டும். பள்ளிகளின் சுற்றுச்சூழல் சரியாக இருந்தால் இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பில்லை.
எப்படியோ மாணவர்களின் எதிர்காலம் நமக்கு முக்கியம். நல்லதே நடக்கும் என நம்புவோம்.
No comments:
Post a Comment