Saturday, 9 November 2024

கல்வி கடன் கட்டியபாடில்லை!


இன்றைய காலகட்டத்தில் கல்வி என்பது பெரும் வியாபாரமாக மாறிவிட்டது  என்பது நமக்குத் தெரியும்.

ஏழைகளுக்கு எட்டாத கனியாக  கல்வி மாறிவிட்ட நிலையில்  அரசாங்கமே அந்த நிலையை மாற்ற எடுத்த முயற்சி தான் கல்விக் கடன் என்பது.  அரசாங்கம் கொடுத்த  கடன் உதவியியால்  தான்  இன்று  பல ஏழை மாணவர்கள் பட்டதாரிகளாக மாறி இருக்கின்றனர்  வாழ்க்கையை வளப்படுத்திக் கொண்டனர். தங்கள் நிலையை உயர்த்திக் கொண்டனர்.

ஆனால் அப்படிக் கடன் பெற்று, இன்று நல்ல நிலையில் இருக்கும் அந்த மாணவர்கள் கல்விக்காக வாங்கிய அந்தக் கடனைத் திரும்பக் கட்டுகிறார்களா என்று பார்த்தால்  நமக்கும் வருத்தம் தான்  வருகிறது. பலர் கட்டுவதில்லை என அறியும் போது  நமக்கும் வேதனை  அளிக்கத்தான் செய்கின்றது.  

இது பொறுப்பற்றத் தனம்  என்று சொல்லுவதைத் தவிர  வேறு என்னவென்று சொல்லுவது?  தனது நிலையை உயர்த்திக் கொண்ட பின்னர் ஏறி வந்த ஏணியை உதைத்துத் தள்ளுவது தான்  இன்றைய வாழ்க்கை முறை. அதைத்தான் தவறாமல் செய்கின்றனர்  இன்றைய தலைமுறை.  இவர்களுக்கு மாபெரும் வழிகாட்டி என்றால் அது அரசியல்வாதிகள் தான்!

அவர்கள்,  ஒரு கணம் சிந்தித்துப் பார்த்தால் இப்படிச் செய்வது மாபெரும் குற்றம்  என்பது அவர்களுக்கே புரியும். வருங்காலங்களில் உயர்கல்வி கற்க வரும் இன்னும் பல  ஏழை மாணவர்களுக்கு உதவுவது அரசாங்கத்தின் கடமை.  ஆனால் மாணவர்கள் இப்படிக் கடனைத் திரும்ப செலுத்தாமல்  இருந்தால் அரசாங்கம் எப்படி உதவ முடியும்?  உயர் கல்வி அமைச்சர்   ஸம்ரி அப்துல் காடிர் நாடாளுமன்றத்தில் கொடுத்த பதிலில் சுமார் 320 கோடி வெள்ளி கடன் இன்னும் திரும்பச் செலுத்தப்படவில்லை  என்பதாகக்  கூறியிருக்கிறார்.

மாணவர்கள் என்ன கல்வி கற்று என்ன பயன்? அவர்கள் திரும்பச் செலுத்தவில்லை என்றால் இன்னும் வருங்காலங்களில் பல ஏழை மாணவர்கள் உயர் கல்வி கற்பதில் சுணக்கம் ஏற்படுமே என்கிற அக்கறை அவர்களுக்கு இல்லையே.  வருத்தமாகத்தான் இருக்கிறது.  அவர்கள் கற்ற கல்வி பயனிக்கவில்லையே என்று தான் தோன்றுகிறது!

நாம் சொல்ல வருவது எல்லாம்: கற்ற கல்வியின் கடனைக் கட்டுங்கள். கட்டுப்பாடோடு வாழுங்கள். அவ்வளவு தான்!

No comments:

Post a Comment