கல்வி மறுக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் பெண்கள்
சமீபத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டின் குழு ஒன்று நமது நாட்டின் கல்வி அமைச்சரைச் சந்தித்திருக்கிறது.
அந்தச் சதிப்பு ஏன் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது என்பதில் தெளிவில்லை. ஏன், அவரின் துணை அமைச்சருக்கே அவர்களின் வருகைத் தெரிவிக்கப்படவில்லை என்பதும் கேள்விக்குறி. ஒரு வேளை மக்களின் எதிர்ப்புக்குரல் ஒலிக்கலாம் என்கிற தயக்கம் அரசாங்கத்திற்கு இருந்திருக்கலாம். ஆனால் இஸ்லாமிய நாடு என்றால் பிரதமர் அவர்கள் பக்கம் தான் இருப்பார் என்பதும் நமக்குத் தெரியும்.
எப்படியோ வந்தார்கள் போனார்கள் அவ்வளவு தான். பெரிதாகப் பேச ஒன்றுமில்லை. ஆனாலும் நமக்கும் சில கேள்விகள் உண்டு. ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கம் பெண்களை மதிக்காத ஒரு நாடு என்பது நமக்குத் தெரியும். பெண்களுக்குக் கல்வி வேண்டாம் என்று நினைப்பவர்கள் அவர்கள். பெண் குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வியோடு சரி அதற்கும் மேல் வேண்டாம், தேவை இல்லை என்பது தான் அவர்கள் கொள்கை. அதனால் இடைநிலைக் கல்வியே பெண்களுக்கு மறுக்கப்பட்ட ஒரு நாடு.
ஒரு காலகட்டத்தில் ஆப்கானிஸ்தானில் பெண்கள், கல்வி கற்று, உயர்ந்த நிலையில் இருந்தவர்கள். விமானிகளாக இருந்திருக்கிறார்கள் இன்னும் டாக்டர்களாக, வழக்கறிஞர்களாக - இப்படி கல்விகற்ற சமுதாயமாக இருந்தவர்கள். இன்று அவர்களுக்குக் கல்வியே மறுக்கப்பட்ட ஒரு நிலைமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது தான் தலிபான் அரசாங்கத்தின் கொள்கையாக வைத்திருக்கிறார்கள்.
இன்று கல்வி அமைச்சரை அவர்கள் சந்திருப்பது ஒரு வேளை நல்ல நோக்கத்தோடு கூட இருக்கலாம். எத்தனை நாள்களுக்குத்தான் பெண்களைப் பூட்டி வைக்க முடியும்? எல்லாவற்றுக்கும் ஓர் எல்லை உண்டு. அது இப்போது ஒரு முடிவுக்கு வருகிறது என்று எடுத்துக் கொள்ளலாம்.
நம் நாட்டில் பெண் கல்வி என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. கல்வி கற்பதற்கு எந்த எல்லையும் இல்லை. தடையும் இல்லை. இந்நாட்டின் கல்வி முறைகளை தெரிந்து கொண்டு அவர்கள் நாட்டில் அதனை நடைமுறைக்குக் கொண்டுவர நினைக்கலாம். அப்படி ஓர் எண்ணம் அவர்களுக்கு வந்தாலே அதுவே பெரிய வெற்றி!
ஏதோ ஒரு நல்ல நோக்கத்துக்காகத் தான் அவர்கள் கல்வி அமைச்சரைச் சந்தித்திருக்கிறார்கள். கல்வியில் மாற்றம் வரும் என்றால் நமது பாராட்டுகள்!
No comments:
Post a Comment