இது மழை காலம். எட்டு மாநிலங்கள் வெள்ளத்தால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. பிரச்சனை என்னவென்றால் இது ஒன்றும் நமக்குப் புதிதல்ல. நீண்ட காலமாக நடந்து கொண்டு தான் இருக்கின்றது.
இதற்குத் தீர்வு இல்லையென்றும், எல்லாம் கடவுளின் செயல் என்று கடவுளின் மீது பழி போடுவதும் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றது. கடவுள் நம்பிக்கை தேவை தான்.
சமீபத்தில் வீடமைப்பு ஊராட்சித்துறை துணை அமைச்சர் ஒரு கருத்தைக் கூறியிருக்கிறார். மலேசியர்களின் பொறுப்பற்ற செயல்களும் திடீர் வெள்ளத்திற்குக் காரணம் என்பதாகக் கூறியிருக்கிறார். ஆம், நாம் அனுதினமும் பார்க்கிறோமே அதுவே தான். நமது இருப்பிடம் அருகே கால்வாய்கள் அல்லது ஆறுகள் இருந்தால் என்ன செய்கிறோம்? வீட்டில் இருக்கும் அத்தனை தேவையற்ற பொருள்களையும் அங்கே கொண்டு கொட்டுகிறோம்.
இதுவே நாளடைவில் தீடீர் வெள்ளத்தை ஏற்படுத்துகிறது என்பது தான் அமைச்சர் வைக்கின்ற குற்றச்சாட்டு. அதில் உண்மை இல்லை என்று சொல்ல முடியாது. நாம் செய்கின்ற தவறுகள் நமக்கே பெரும் தீங்காக திரும்ப வருகிறது என்பது தான் உண்மை.
குப்பைகளை ஏன் ஆறுகளில் கொட்ட வேண்டும்? குப்பைகளை அள்ளிக்கொண்டு போவதற்கு 'இண்டா வாட்டர்' நிறுவனம் செயல்படுகிறது. அங்கே கொட்டாமல் ஏன் ஆற்றினில், கால்வாய்களில் கொட்டி நிரப்ப வேண்டும்? அது ஆபத்தைக் கொண்டு வரும் என்பதை நாம் அறியாதவர்களாகவே இருக்கிறோம்?
நாம் போடுகிற குப்பைகளின் அடைப்பினால் தான் திடீர் வெள்ளம் வருகிறது என்பதை நாம் எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம்? அமைச்சர் சொல்லுவது போல பெரும்பாலான திடீர் வெள்ளம் கால்வாய்களின் உள்ள அடைப்பினால் தான் வருகின்றது என்பதை உறுதிப்படுத்தி விட்டார்.
நாம் சொல்ல வருவதெல்லாம் மழைக்காலங்களில் வரும் பெரும் வெள்ளத்தை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது தான். ஆனால் திடீர் வெள்ளத்தை ஏற்படுத்தும் இந்த கால்வாய் அடைப்புகளை நம்மால் தவிர்க்க முடியும். அதற்குத் தேவை எல்லாம் கொஞ்சம் பொறுப்புணர்வு தான்.
நாட்டின் நலன் கருதி நம்மால் முடிந்ததைச் செய்வோம்.
No comments:
Post a Comment