Wednesday 11 December 2019

ஏன் மாற்றங்கள் கூடாது...?

இந்திய உணவகங்களில் ஆள் பற்றாக்குறை என்பதைப் பல காலமாக நாம் கேட்டு வருகிறோம்.

உணவக உரிமையாளர்கள் வைக்கின்ற குற்றச்சாட்டு அரசாங்கம் தமிழகத் தொழிலாளர்களுக்கு அனுமதி கொடுப்பதில்லை என்பது தான். நாம் அவர்கள் மீது வைக்கின்ற குற்றச்சாட்டு "நீங்கள் அவர்களுக்கு ஒழுங்காக சம்பளம் கொடுப்பதில்லை, தங்கும் வசதிகள் இல்லை, ஓய்வு என்பதில்லை!" போன்ற குற்றச்சாட்டுக்கள்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.  நம்முடைய குற்றச்சாட்டுக்களை அவர்கள் ஏற்றுக்கொள்ளுவார்களா என்பது தெரியவில்லை! அது வேறு கதை.

ஒன்று மட்டும் தெரிகிறது. அவர்கள் சிந்தனைப் போக்கை அவர்கள் மாற்றுவதாகத் தெரியவில்லை. ஒரே வழி, ஒரே பாதை!  எங்கள் அப்பன் காலத்தில் இப்படித்தான், நாங்களும் இப்படித்தான் என்கிற மனப்போக்கு. 

உணவகங்களை காலை ஆறு மணிக்குத் திறந்து இரவு ஒன்பது மணி வரை திறந்து தான் ஆக வேண்டும் என்று யார் இவர்களுக்குச் சொன்னது?  நேரத்தை மாற்ற முடியாதா? 

என்னைச் சுற்றி பார்க்கிறேன். மலாய்க்காரர்கள்,  தாய்லாந்துகாரர்கள்,  இந்தோனேசியர்கள்  ஒர் இந்தியர் உணவகம், இரண்டு மாமாக் உணவகங்கள் இயங்குகின்றன.  மலாய்க்காரர் உணவகங்கள் காலை மதியம்,  தாய்லாந்து உணவகங்கள் ஒன்று காலை மதியம், இன்னொன்று மதியம் இரவு,  தாய்லாந்து, இந்தோனேசிய ஸ்டால்கள் இரவு மட்டும்.  வேலை செய்பவர்கள் அனைவரும் இந்தோனேசியர்கள், தாய்லாந்துகாரர்கள்.

நம் பக்கம் வருவோம். இந்தியர் உணவகம், இரண்டு மாமாக் உணவகங்கள்  காலை ஆறு மணியிலிருந்து இரவு பத்து மணி வரை. அவர்கள் அனைவரும் கேரள, தமிழகத் தொழிலாளர்கள். கடுமையான வேலை நேரம், ஓய்வு என்பது போதுமானதாக இல்லை. எப்போதும் ஓர் உறக்க நிலையிலேயே இருக்க வேண்டிய சூழல்!  அதற்கு ஏற்றது போல் வருமானமா, அதுவும் இல்லை. சிரம்பான் நகரில் ஓர் இந்தியர் உணவகம். காலை மதியம் என்பதோடு சரி.  மூன்று மணிக்கு மேல் இயங்குவதில்லை.  பெரும்பாலும் மலேசிய இந்தியப் பெண்களே வேலை செய்கின்றனர்.  மகிழ்ச்சியாகவே வேலை செய்கின்றனர்.

இதோ எனது பக்கத்தில் மலாய்க்காரர் ஒருவர் இந்த மாதம் தான் உணவகம் ஆரம்பித்திருக்கிறார்.  அந்த உணவகம் இயங்கும் நேரம் மதியம் மட்டுமே. காலை, இரவு என்பதெல்லாம் இல்லை. சீனர்கள் உணவகங்களும் அப்படித்தான்.  ஒரு நேரம் மட்டுமே.

நமக்குத் தெரிந்து எல்லாம் மலேசியர்கள் வேலை செய்ய மாட்டார்கள் என்பதில்லை.  நமது இந்திய உணவகங்களின் நேரம் என்பது மிகக் கொடுமையானது.  காலை மதியம் என்று தங்களது நேரங்களை மாற்றினால் மலேசியர்கள் வேலை செய்வார்கள்  அவர்களுக்கு நல்ல ஓய்வு கிடைக்கும். மற்ற நேரங்களில் தங்களது சொந்த வேலைகளையும் கவனித்துக் கொள்ளுவார்கள். 

நமது உணவகங்கள் தமிழகத் தொழிலாளர்களை மனிதர்களாக நினைப்பதில்லை.  அவர்கள் எல்லாம் இவர்களுக்குக் கிடைத்த அடிமைகள்! 

நமது உணவகங்கள் நேர மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். அது ஒன்றே இந்த பிரச்சனைக்குத் தீர்வு.

No comments:

Post a Comment