Tuesday 24 December 2019

காலம் மாறிப்போச்சு!

இப்போது,  பிரதமர் டாக்டர் மகாதிர் பற்றியான அபிப்பிராயம் நம்மிடையே வேறுபட்டியிருக்கலாம்.

ஆனால் ஒருகாலக் கட்டத்தில் அவரை நாம் வாழ்த்தினோம், வணங்கினோம்.  காரணம் நாட்டின் வளர்ச்சிக்கு அவரே மூல காரணமாக இருந்தவர்.  நிறைய  வேலைகளை நாட்டில் உருவாக்கியவர்.  வளர்ச்சியின் தந்தை என போற்றப்பட்டவர்.

அவரைப் பற்றி அப்போதும் குறை சொல்லப்பட்டது. ஆனால் சராசரி மனிதர்களைப் பொறுத்தவரை தாங்கள் பிழைத்துக்கொள்ள, தங்களது குடும்பங்களைக் காப்பாற்ற அவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள்  காத்துக் கிடந்தன.  சராசரி மனிதனுக்கு அதுபோதும்.

அப்போதும் அவரது வெளி நாட்டு உறவுகள், அவரது பேச்சுக்கள்,  அவரது சீண்டல்கள், அவரது சவடால்தனங்கள் - ஒரு சில ஏற்றுக் கொள்ளப்பட்டன, ஒரு சில கண்டனங்களுக்கு உள்ளாயின!  ஆனாலும் அதனையெல்லாம் முறியடித்து வந்தவர் அவர். அது ஒரு காலக் கட்டம்

ஆனால் இன்றைய நிலை வேறு. இப்போது அவரது பேச்சுக்கள், கருத்துக்கள் நாடளவிலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை, உலகளவிலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை!  அந்தக் காலத்தில் உள்ள தலைவர்களின் நிலை வேறு, இப்போதுள்ள தலைவர்களின் நிலை வேறு.

இன்றைய நிலையில் அவர் பேசுவதை தாத்தா-பேரன் உறவு போல் தான் இருக்கிறது! தாத்தா நல்ல அறிவுரைகளைச் சொல்லலாம்.  ஆனால் பேரன்கள் யாரும் தாத்தா சொல்லுவதைக் காதில் போட்டுக் கொள்ளுவதில்லை! ஏதோ தாத்தாவின் உளறல் என்று தான் நினைக்கிறார்கள்! எல்லாம் வயது கோளாறு என்று நினைப்பவர்களும் உண்டு!

இன்று டாக்டர் மகாதிர் பேசுவதெல்லாம் நாட்டு நலனுக்கு ஏற்றதாக இல்லை என்பது சரியான வாதம். உண்மை தான். அப்படித்தான் அவரது பேச்சுக்கள் அமைகின்றன. "எனக்கென்று தனி கரூத்துக்கள் இருக்கின்றன! அதனை நான் சொல்லியே தீருவேன்!"  என்கிறார். அது அவரதுசொந்த நலன்  சம்பந்தப்பட்டது என்றால் அதனை யாரும் சட்டைப் பண்ணப் போவதில்லை! அது நாட்டு நலன் சம்பந்தப்பட்டது என்றால் அது நாட்டுக்குக் கேடு!

இன்று இவர் நாட்டுக்குச் செய்கின்ற கேடுகள் நாளை பிரதமராக வருபவருக்கு ஏகப்பட்ட பிரச்சனைகளை உருவாக்கும். 

என்ன செய்வது? இப்போது அவரது கையில் தான் மந்திரக்கோல் இருக்கிறது!  மக்கள் தான் சகித்துக் கொள்ள வேண்டும்!

No comments:

Post a Comment