Sunday 29 December 2019

இது இன வெறி என்று சொல்லலாமா!

எது எப்படியோ இருக்கட்டும்! கேமரன்மலையில் நடந்ததை என்ன வென்று சொல்லலாம்?

முற்றிலுமாக அதனை ஒரு இனப் பாகுபாடு என்று சொல்லலாமா?  அல்லது இன வெறி என்று சொல்லலாமா? பாதிக்கப்பட்ட அறுபது விவசாயிகள் அனைவரும் இந்தியர்கள் என்பது தான் முக்கியமான செய்தி.  பாதிக்கப்பட்டவர்களில் ஓரிரு மலாய்க்காரர்கள் இருந்திருந்தால் கூட இந்த நிகழ்வு நடந்திருக்க வாய்ப்பில்லை!

அப்படி நடந்திருந்தால் பாஸ். அம்னோ கட்சிகள் அத்தோடு மலாய் அரசு சாரா இயக்கங்கள் அனைத்தும் வரிந்து கட்டிக் கொண்டு வந்திருப்பார்கள்! ஏன், "'மீண்டும் மே 13 வேண்டுமா" போன்ற கேள்விகள் கூட எழ வாய்ப்புண்டு!

ஆனால் அவர்கள் இந்தியர்கள். அதனால் அரசு இயந்திரங்கள் சுறுசுறுப்பாக இயங்கின! அவர்களது அறுபது ஆண்டு கால உழைப்பு அனைத்தும் ஒரு நொடியில் அழிக்கப்பட்டன! விவசாயிகளுக்கு பல இலட்சங்கள் நட்டம். அது பற்றி கவலைப்பட வேண்டியவர்கள் விவசாயிகள் மட்டும் தான்.  மாநில மந்திரி பெசார் மகிழ்ந்து போனார்! ஆமாம், இந்தியர்கள் என்றாலே "நாசமா போகட்டும்!" என்கிற மன நிலையில் அவர் இருந்தார்!  இன்னும் அப்படியே தான் இருக்கிறார்!

கேமரன்மலை என்கிற போது அது ம.இ.கா. வின் நாடாளுமன்ற தொகுதி. பல ஆண்டுகள் அவர்கள் தான் ஆண்டு அனுபவித்தவர்கள். அங்கும் ம.இ.கா. கிளைகள் இருக்கின்றன.  தங்களது நிலங்களுக்கு நிரந்தர பட்டா வேண்டும் என்கிற சராசரி அறிவு இல்லாதவர்கள் எல்லாம் தலைவர்களாக இருந்திருக்கின்றனர்.  ஏதோ தற்காலிகமாக எதாவது கிடைத்தால் போதும் என்பதை வைத்தே அரசியல் நடத்தியிருக்கின்றனர். 

இப்படி எல்லாவற்றிலும் அலட்சியமாக இருப்பது இந்த இந்திய சமுதாயம் மட்டுமே!  மனநலம் குன்றியவர்கள் எல்லாம் தலைவர்களாக இருந்தால் இது தான் நடக்கும்! வேறு என்ன சொல்ல? சீனர்கள் இது போன்ற தவறுகள் செய்வதில்லை.  நிலப்பட்டாவுக்காக நடையாய் நடப்பதை நான் பார்த்திருக்கிறேன். தொடர்ந்து அவர்கள் செயல்பாடுகள் இருக்கும். நிரந்தர பட்டா கிடைக்கும் வரை, அது எத்தனை ஆண்டுகள் ஆனாலும், அவர்கள் மனம் தளருவதில்லை!

ந்மது நிலைமையைப் பாருங்கள். கேமரன்மலையில் மட்டும் தானா நமக்குப் பிரச்சனை? எத்தனை தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் தனியார் நிலங்களில் இருந்து கொண்டு பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றன! நமது தலைமைத்துவம் நம்மை சரியான பாதையில் வழி நடத்தியிருந்தால் நமக்கு இப்படி ஒரு நிலை ஏற்படுமா?

இதோ உரக்கச் சொல்லுவோம், இது இன வெறி  என்று!

No comments:

Post a Comment