பொதுவாகவே ஏதோ ஒரு பிரச்சனை என்று வரும் போது உடனே அரசியவாதிகளுக்கு தீடீரென்று ஞானோதயம் வந்து விடுகிறது!
ஞானோதயம் வந்து விட்டாலே "மீண்டும் மே 13 வரும், வரும்படி பார்த்துக் கொள்ளாதீர்கள்!" என்று பூனைக்குட்டிகள் கூட சிங்கமாக கர்ஜிக்கும்!
ஏதோ ஓரிருமுறை இதனைச் சொன்னால் ஏதோ மனதிலே கொஞ்சம் அச்சம் ஏற்படத்தான் செய்யும். இதனையே மீண்டும் மீண்டும் சொல்லும் போது "மே 13 - வது, மே 14-வாவது!" என்று அலட்சியப் படுத்தத் தான் செய்வார்கள்!
என்னைக் கேட்டால் மே 13 வரும் என்று சொல்லுபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் சொல்லுவேன். அப்படி என்ன அரசியல்வாதிகளுக்கு மக்கள் மீது அவ்வளவு அக்கறை? ஒவ்வொரு அரசியல்வாதியும் திருட்டுப்பயல் என்று பொது மக்களுக்குத் தெரியும். அவன் திருடும் போது மே 13 வேண்டாம். திருட முடியாத போது மே 13 வேண்டும்! இது தான் இவர்களின் அரசியல் என்பது நமக்கும் தெரியும்!
மே 13 என்று கூறி அச்சத்தை ஏற்படுத்துபவர் யார்? அதனையே திரும்பத் திரும்பக் கூறி அச்சத்தை ஏற்படுத்துபவர்கள் யார்? பெரும்பாலும் ஓரிரு மலாய் அரசியல்வாதிகள். அப்படி என்றால் என்ன அர்த்தம்? ஏன் அவர்கள் மட்டும் அப்படிக் கூறுகிறார்கள்?
மற்ற இன அரசியல்வாதிகள் யாரும் அப்படிக் கூறுவது இல்லையே! சீன அரசியல்வாதிகளோ, இந்திய அரசியல்வாதிகளோ அப்படிக் கூறுவதில்லையே! மற்ற இன அரசியல்வாதிகள் அது பற்றி பேசாதிருக்கும் போது மலாய் அரசியல்வாதிகள் ஒரு சிலர் மட்டும் ஏன் இப்படிக் கூற வேண்டும்?
எந்தப் பிரச்சனையையும் உட்கார்ந்து பேசித் தீர்க்க முடியும் என்கிற அறிவு ஏன் இவர்களிடம் இல்லை என்று நமக்கும் புரியவில்லை! படித்தவர்கள் என்று அவர்களே சொல்லிக் கொள்ளுகிறார்கள்! அறிவு இல்லாதவர்கள் தான் இப்படி சொல்லிச் சொல்லி மற்ற இனங்களை அச்சுறுத்த முடியும்.
இப்படிப் பேசுபவர்களின் நோக்கம் என்ன என்பது நமக்குத் தெரியும். நாட்டில் அமைதி நிலவக் கூடாது என்பது தான் அவர்களின் உயரிய நோக்கம்! காரணம் அவர்கள் சார்ந்திருக்கும் நாடுகள் எதுவும் அமைதியில் இல்லை. இங்கும் அமைதி இருக்கக் கூடாது என்று தான் அவர்கள் விரும்புகிறார்கள்!
மீண்டும் மீண்டும் இந்த மே 13 என்கிற வார்த்தையே வேண்டாம்!
No comments:
Post a Comment