Friday 20 December 2019

இந்த சத்தியங்களை நம்பலமா...?

பொதுவாக ஏதாவது ஒரு பிரச்சனையில் நாம் சிக்கிக் கொண்டால் எதிர் தரப்பு  "கோயிலில் சத்தியம் செய்யத் தயாரா?"  என்று சவால் விடுவதை நாம் பார்க்கிறோம்.  

எதிர் தரப்பு மட்டும் அல்ல பாதிக்கப்பட்ட தரப்பும் கூட "கோயிலில் நான் சத்தியம் செய்கிறேன்!" என்கிற நிலைமையும் உண்டு.  அதைத்தான் முன்னாள் பிரதமர் நஜிப் சமீபத்தில் செய்தார். அவரை யாரும் கோயிலில் சத்தியம் செய்யுங்கள் என்று கேட்கவில்லை. ஆனால் அந்த அவசியம் அவருக்குத் தேவையாய் இருந்தது. அவர் அரசியல்வாதி. இந்த சத்தியத்தின் மூலம் தனது செல்வாக்கை தனது ஆதராவளர்களிடம் "நான் குற்றமற்றவன்" என்று சொல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது!  அதனால் தான் அவரே வலிய வந்து அந்த சத்தியத்தைச் செய்தார்! இப்படி கேட்காமலே செய்பவர்கள் தங்கள் சுயநலனுக்காக செய்கிறார்கள் என்பது ஒன்றும் அதிசயமில்லை!

ஆனால்  பொதுவாக இப்படி சத்தியம் செய்பவர்களை எப்படி நாம் எடுத்துக் கொள்ளுவது? 

கோயில் சத்தியங்களை எப்படி நாம் எடுத்துக் கொள்ளலாம்? நம்பலாமா? நம்பக்கூடியதா?  கோயில் சத்தியங்கள் என்பது நமக்கு முன்னும் நடந்திருக்கிறது, நமக்குப் பின்னும் நடக்கும். அதற்குக் காரணம் நாம் கடவுளை நம்புகிறவர்கள்.  கடவுளின் பேரில் சத்தியம்செய்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்கிற நம்பிக்கை நமக்கு உண்டு.

ஆனால் அதுவெல்லாம் ஒரு காலம். அவனுக்கு உண்மையான கடவுள் பயம் இருந்தது. பொய் சத்தியம் செய்தால் அவன் குடும்பம் தழைக்காது என்கிற ஒரு பய உணர்வு அவனுக்கு இருந்தது. அவனது குடும்பத்திற்கு அது சாபத்தைக் கொண்டு வரும் என்கிற அச்சம் இருந்தது.  இன்றும் சராசரி மனிதனுக்கு அந்த பயம் உண்டு.

பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும்  பயம் என்று ஒன்று இருக்கிறதா என்பதை எதைக் கொண்டு கண்டுபிடிப்பது?  பயமே இல்லாதவன்! பதவியைத் தவிர வேறு எதற்கும் பயப்படாதவன்! அவனா இந்த சத்தியத்திற்கெல்லாம் பயப்படப் போகிறான்!  அப்படியெல்லாம் பயப்படுகிறவனாக இருந்தால் கோயில்களில் ஏன் இத்தனை அடிதடி! தெய்வம் நின்று தான் கொல்லும். அதனால் உடனடியான பலன்கள் எதுவும் இருக்கப் போவதில்லை! அதுவே அவனது பலம்!

ஒன்று மட்டும் உறுதி.  கோயில்களில் சத்தியம் செய்வது என்பது, ஒருவன் தவறானவனாக இருந்தால்,  அது அவனுக்குக் கேடு விளைவிக்கும். அவனது குடும்பத்திற்கு நாசத்தைக் கொண்டுவரும். பாதகத்தை ஏற்படுத்தும்!

நம்பலாம்!

No comments:

Post a Comment