Sunday 15 December 2019

வெங்காயம் கொடுத்த வெற்றி...!

வெங்காயம் என்றாலே மக்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு அதன் விலையேற்றம். கண்களில் நீர் கசியும் அளவுக்கு அதன் பற்றாக்குறை தமிழ் நாட்டில்! அதுவும் அந்த பொன் விளையும் பூமியில்!

அந்த சோகச் செய்தியிலும் ஒரு வெற்றி செய்தி அதே வெங்காயத்தின் மூலம். தமிழ் நாட்டில் அல்ல, கர்நாடகா மாநிலத்தில்.

கர்நாடக மாநிலத்தின், சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி மல்லிகர்ஜுனா. விவசாயத்தின் மூலம் பல இலட்சங்களை இழந்தவர். கடன்காரர் ஆனவர். 

வங்கியில் பதினைந்து இலட்சத்தைக் கடன் வாங்கி  தனது நிலத்தில் வெங்காயத்தில் முதலீடு செய்தவர். இது தான் அவர் வங்கியில் வாங்கிய பெரிய கடன்.  ஏதோ ஓர் ஐந்து அல்லது பத்து இலட்சம் கிடைத்தாலே பெரிய புண்ணியம் என்று நினைத்தவர். ஆனால் அடித்ததோ யோகம்!

"வெங்காய விலை மட்டும் அடிமட்ட விலைக்குப் போயிருந்தால் எனது நிலையும் அடிமட்டத்திற்குப் போயிருக்கும்!" என்கிறார் மல்லி.

வெங்காய விலை ஒரு கிலோ 200 ரூபாய் அளவுக்கு ஏற்றம் கண்ட நேரத்தில் அவருடைய வெங்காய அறுவடை 240 டன் அளவுக்கு அறுவடையானது. அதாவது சுமார் 20 லாரிகளில் கொண்டு செல்லும் அளவுக்கு அறுவடை.

நீண்ட காலமாக, தனது பத்து ஏக்கர் நிலத்தில், வெங்காயம் பயிர் செய்வதில் ஈடுபட்டிருக்கிறார்  மல்லி. சென்ற ஆண்டு அவர் கண்ட இலாபம் சுமார் ஐந்து இலட்சம்.  பெரிதாக சொல்ல ஒன்றுமில்லை. சராசரி தான்.

ஆனால் இன்றைய நிலையில்,  வெங்காய விலை ஏற்றத்தில், அவர் அதிரடியாக கோடிஸ்வரராகி விட்டார்! இப்போது  அவர் சுற்று வட்டார விவசாயிகளிடையே கதாநாயக அந்தஸ்தோடு வலம் வருகிறார்!

"எனது கடன்களையெல்லாம் அடைத்து விட்டேன். இப்போது நான் ஒரு வீடு கட்ட வெண்டும். இன்னும் கொஞ்சம் நிலம் வாங்கி விவசாயத்தை அதிகப்படுத்த வேண்டும்"  என்கிறார் மல்லிகர்ஜூனா.

தான் விரும்பிய துறையில் நிலைத்து நிற்பவர்களுக்கு தானாகவே கதவுகள் திறக்கும் என்பது உண்மை தான்!

No comments:

Post a Comment