Saturday 7 December 2019

தந்தையின் தியாகம்...!

பிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் பலர் எவ்வளவோ தியாகங்கள் செய்கின்றனர்.  

அதுவும் பெற்றோர்கள் படித்தவர்களாக இருந்தால் அவர்களை விட இன்னும் நல்ல முறையில் தங்களது பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும் என்னும் ஆசை இல்லாத பெற்றோர்களே இல்லை. அதனால் தான் இன்று நாம், நமது சமூகத்தில், டாக்டர்களையும்,  வழக்கறிஞர்களையும், கணக்காளர்களையும்,   பொறியிலாளர்களையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் ஏழ்மை நிலையில் உள்ளவர்களின் நிலை என்ன?  எப்பாடுப் பட்டாவது பிள்ளைகளுக்குக் கல்வியைக் கொடுக்க வேண்டும் என்னும் எண்ணம் இப்போதுங்கூட ஒரு சில பெற்றோர்களிடம் இல்லை. பலருக்குக் கல்வியின் அருமை தெரிந்தாலும் வறுமையில் வாடும் ஒரு சிலருக்கு அது எட்டாக் கனியாகவே ஆகி விடுகிறது. ஆனாலும் அவ்வளவு மோசமான நிலைமையில் நாம் இல்லை.  மனமிருந்தால் மார்க்கம் உண்டு.

ஒரு முறை, ஒரு பெண்மணியும் அவரது மகளும் ஒரு கடிதம் அடித்துக் கொடுக்கச் சொன்னார்கள்.  அவரது மகள் தனது ஐந்தாம் பாரத்தை முடிக்காமல் ஏதோ ஒரு பொய் சொல்லி ஒரு நிறுவனத்தில் சேர்ந்து விட்டாராம். பொய் சொன்னார் என்பதற்காக அவரது சம்பளத்தை அவர்கள் கொடுக்கவில்லை. அதனால் அது குறித்து அவர்களுக்கு ஒரு கடிதம் தேவைப்பட்டது. ஏன் ஐந்தாம் பாரம் முடிக்கவில்லை என்று கேட்டேன்.  ஐந்தாம் பாரம் படிக்கும் போது  "அவரது தகப்பனார் தவறிப்போனார் அதனால் என்னால் அவளைப் படிக்க வைக்க முடியவில்லை" என்று அவரது தாயார் பதிலளித்தார். இன்னும் ஏழு மாதங்கள் தான் ஆனாலும் அவரால் படிக்கவைக்க முடியவில்லை! இது தான் நமது தமிழ்க் குடும்பங்களின் நிலை. இங்கு ஏழ்மை என்பதை விட அக்கறையற்ற ஒரு தன்மை என்பது தான் உண்மை!



இதோ பாருங்கள். ஆப்கானிஸ்தான் நாட்டில் வறுமையில் வாடும் ஓரு குடும்பம். பெண்கள் கல்வி கற்றாலே அவர்களைச் சுட்டுத் தள்ளும் ஒரு தீவிரவாதிகள் கூட்டம். இந்த சூழ்நிலையில் ஒரு தந்தை தனது மூன்று பெண் பிள்ளைகளையும் தனது மோட்டார் சைக்களில் ஏற்றிக் கொண்டு தினசரி பன்னிரெண்டு கிலொமீட்டர் பயணம் செய்து பள்ளிக்குக் கூட்டிச் செல்கிறார்.  அவர்களுடைய வகுப்பு முடியும் வரையில் அங்குக் காத்திருந்து வகுப்பு முடிந்ததும் மீண்டும் அவர்களை வீட்டிற்குக் கூட்டி வருகிறார். இது தான் அவரது தினசரி நடைமுறை வாழ்க்கை. 

ஏன் பெண் பிள்ளைகளின் மேல் இந்த அக்கறை? "என் ஆண் பிள்ளைகளைப் போல் அவர்களும் கல்வி கற்க வேண்டும். எனது கிராமத்தில்  பெண் டாக்டர்கள் இல்லை. அவர்கள் படித்து வந்து எங்கள் கிராமத்தில் சேவை செய்ய வேண்டும்"  

ஒரு தந்தையின் ஆசை இது. பெண் டாக்டர் இல்லாத ஒரு கிராமம். படித்து வந்த சேவை செய்ய வேண்டும். 

தந்தைக்கு உயரிய நோக்கம்.  அதே சமயத்தில் அவரது தியாகம். தனது கிராம மக்களின் மீது அவருக்குள்ள அக்கறை.

அவரது ஆசை நிறைவேற நமது பிரார்த்தனைகள்!

No comments:

Post a Comment