Saturday 21 December 2019

முஸ்லிம்கள் மட்டும் அல்ல!


பிரதமர், டாக்டர் மகாதிர், மீண்டும் ஒரு கோணலான பார்வையையே பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடு என்பது உண்மை தான்  அதே போல மலேசியாவும் ஒரு மதச் சார்பற்ற நாடு என்பதும் உண்மை தான்!

இந்தியா கொண்டு வந்திருக்கும் குடியுரிமைச் சட்டம் என்பது முஸ்லிம்களுக்குப் பாகுபாடு காட்டுகிறது என்பதில் கருத்து வேறுபாடில்லை.  இங்கும் அது தான் நடக்கிறது!

பிரதமர் மோடி அரசு முஸ்லிம்கள் மேல் காட்டும் வெறுப்பை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அதை நாம் வரவேற்கவில்லை.

ஆனால் அவர்கள் முஸ்லிம்கள் மேல் மட்டும் தான் வெறுப்பைக் காட்டுகிறார்கள் என்பது தவறான செய்தி. அவர்கள் இந்துக்கள் மீதும் வெறுப்பைக் காட்டுகிறார்கள் என்பதையும் டாக்டர் மகாதிர் புரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கையில் இருந்து இந்தியாவில் அடைக்கலம் புகுந்திருக்கும் இலங்கைத் தமிழர்கள் அனைவரும் அல்லது பெரும்பாலும் இந்துக்கள் தாம்.மேற்கு நாடுகளில் தஞ்சம் புகுந்த இலங்கைத் தமிழர்களில் பலரும் இப்போது குடியுரிமை கொடுக்கப்பட்டு அந்த அந்த நாடுகளின் அரசியலிலும் பங்குப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக வேறு பல உயர் பதவிகளிலும் அங்கம் வகிக்கின்றனர்.

ஆனால் இந்தியாவின் நிலைமையோ வேறு.  சுமார் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இரண்டரை  இலட்சம் இலங்கை இந்துக்கள் இந்தியாவில் குடியுரிமை அற்றவர்களாகத்தான் வாழ்ந்து வருகின்றனர். அதிலும் சுமார் ஒரு இலட்சம்  இந்துக்கள் அகதிகள் முகாம்களில் தான் இன்னும் வாழந்து வருகின்றனர்! 

இதனை நீங்கள் வேறு நாடுகளில் பார்க்க முடியாது. இந்தியாவில் தான் பார்க்க முடியும்!

அதனால் இந்தியாவின் மோடி அரசு முஸ்லிம்களிடம் மட்டும்தான் பாரபட்சம் காட்டுகிறது என்று சொல்லுவது ஒரு பக்க உண்மை மட்டும் தான்.  அவர்கள் இந்துக்களிடமும் பாரபட்சம் காட்டுகிறார்கள் என்பதையும் மாண்புமிகு பிரதமர் புரிந்து கொள்ள வேண்டும்.

அதிலும் கொடுமை உலக இந்துக்களுக்காக குரல் கொடுக்கும் விஸ்வ இந்து பரிஷத்தோ போன்ற அமைப்புக்கள் கூட இலங்கை இந்துக்களைக் கண்டு கொள்ளவில்லை என்பது தான்!

ஆக, முஸ்லிம்கள் மட்டும் அல்ல! இந்துக்களும் தான்!

No comments:

Post a Comment