Monday 30 December 2019

இஸ்லாமிய உலக மேதை!

ஸாகிர் நாயக் இஸ்லாமிய உலக மேதை!

நமக்கு அதில் ஆட்சேபனை இல்லை. உலக மேதை மட்டும் அல்ல அதை விட வேறு ஏதாவது பெரிதாக இருந்தால் அதைக் கூட பயன்படுத்திக் கொள்ளுங்கள். நமக்கு அதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ஒரே காரணம் நாங்கள் அவரின் இஸ்லாமிய மேதைத்துவத்தை அறிந்திருக்கவில்லை என்பது மட்டும் தான். வேறு காரணங்கள் இல்லை.

ஆனால் ஒரு சில நெருடல்கள் உண்டு.  இந்த அளவுக்கு உலக பிரசித்தப் பெற்ற ஓர் இஸ்லாமியை மாமேதையை ஏன் இஸ்லாமிய உலகம்  அவருக்கு சரியான அங்கீகாரம் கொடுக்கவில்லை என்பது தான். அது மட்டும் அல்ல எந்த ஓர் இஸ்லாமிய நாடும் அவரை ஏற்றுக்கொள்ளாத நிலையில் மலேசிய மட்டும் அவருக்கு அங்கீகாரம் கொடுத்து, நாட்டில் தங்க அடைக்கலம் கொடுத்திருப்பது இஸ்லாமிய மேதை என்பதாலா அல்லது மனிதாபிமான அடிபடையிலா என்னும் கேள்வி எழுத்தான் செய்கிறது.

பிரதமர் டாக்டர் மகாதிர் பல முறை அதற்கான பதிலைச் சொல்லியிருக்கிறார். ஸாகிர் நாயக்கை எந்த இஸ்லாமிய நாடும் ஏற்றுக் கொள்ளாத நிலையில் நாங்கள் மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறோம் என்பது தான்!

ஆக இந்த நாட்டில் அடைக்கலம் கொடுக்கப்பட்டிருப்பது மனிதாபிமான அடிப்படையில் தானே தவிர அவர் ஓர் இஸ்லாமிய மேதை என்பதற்காக அல்ல! இஸ்லாமிய நாடுகளில் மேதைகள் பலர் இருப்பதால் இவருடைய மேதைத்துவம் அங்கு எடுபடவில்லை 

அதே சமயத்தில் நாடு சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து நாட்டை ஆட்சி செய்த பாரிசான் கட்சி இஸ்லாமிய மேதைகளை அல்லது அறிஞர்களை உருவாக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியதாகவே நாம் எடுத்துக் கொள்ளலாம்!  

மாரா கல்லுரிகளை ஆரம்பித்து அனைத்து அரசாங்க வேலைகளைக்கும் அவர்களைப் பயன்படுத்திக் கொண்ட அரசாங்கம் இஸ்லாமிய மத போதகர்களை, அறிஞர்களை, மேதைகளை உருவாக்குவதில் தோல்வி அடைந்துவிட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

இல்லாவிட்டால் இஸ்லாம் அல்லாத இந்திய நாட்டைச் சேர்ந்த ஒருவரை இஸ்லாமிய மேதை என்பதும், இஸ்லாமிய நாடு என்று சொல்லிக்கொள்ளும் மலேசியா நாட்டில் ஓர் இஸ்லாமிய மேதையை உருவாக்க முடியவில்லை என்பதும் ஏற்புடையதல்ல என்பதே நமது கருத்து!

ஒரு பழமொழி ஞாபகத்திற்கு வருகிறது: ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரையாம்!

No comments:

Post a Comment