Friday 27 December 2019

பள்ளிக்குப் போகலாம் வாங்க..!


புதிய ஆண்டு தொடங்குகிறது      

 பிள்ளைகள் பள்ளிக்குத் தயாராகிறார்கள். பாலர் பள்ளிக்குப் போகிறவர்கள், முதலாம் ஆண்டுக்குப் போகிறவர்கள். ஏற்கனவே போகிறவர்கள். பெற்றோர்களுக்குச் சுமையோ சுமை.

என்ன செய்வது? பிள்ளைகள் படிக்க வேண்டுமென்றால்  வேறு வழியில்லை. செலவுகளை ஏற்றுக்கொள்ளத் தான் வேணும்.

நம்மிடையே நடுத்தரக் குடும்பங்கள்தான் அதிகம்.  ஏழ்மையில் வாடும் குடும்பங்களும் கணிசமாகவே இருக்கின்றனர்.

இப்போதெல்லாம் நிறைய இயக்கங்கள், அரசியல் கட்சிகள், தனி மனிதர்கள் - ஏழை மாணவர்களுக்குப் பலவிதமான உதவிகளைச் செய்யத்தான் செய்கின்றனர்.  ஏழைகள் மீது அக்கறை காட்டும் இவர்களுக்கு நாம் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

இந்த இடத்தில்  ஒரு சில குறைபாடுகளைச் சுட்டிக் காட்டுவது பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன்.

பள்ளிச் சீருடைகள், காலணிகள்,   பள்ளிப்பைகள், போக்குவரத்து செலவுகள் - என்று தங்களால் முடிந்த அளவு உதவிகள் செய்கின்றனர். ஆனால் இதனை இவர்கள் செய்கின்ற விதத்தை நம்மால் ஜீரணிக்க முடியவில்லை. பலரின் முன்னிலையில்  மேடைப் போட்டு, ஒலிபெருக்கியில் அறிவித்து இந்த உதவிகளைச் செய்வதை நம்மால் வரவேற்க முடியவில்லை.

அவர்கள் ஏழைப் பிள்ளைகள் என்பதை நாம் அறிவோம். அதனை ஊரறிய.உலகறிய  எல்லோர் முன்னிலையிலும் அதனை  ஒலிபெருக்கியில் அறிவித்து அவர்களுக்கு இந்த உதவிகள் செய்ய வேண்டுமா என்பது தான் எனது கேள்வி. ஏற்கனவே தங்களது பெற்றோர்களின் இயலாமையினால் பல குறைபாடுகளோடு வாழும் இந்த குழைந்தைகளின் மனதைப் பாதிக்கும் என்பது நமக்குத் தெரியாதா என்ன?  அந்த குழைந்தைகளும் தலை நிமிர்ந்து பள்ளி போக வேண்டும் அல்லவா?

இதனைத் தவிர்க்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.  தாராளமாக உதவி செய்யுங்கள். அந்த பொறுப்பை பள்ளி ஆசிரியர்களிடமோ, தலைமை ஆசிரியர்களிடமோ விட்டு விடுங்கள்.  அப்படி செய்தால் அது பள்ளி அளவிலேயே முடிந்துவிடும்.   வெளியே யாரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் அவசியமில்லை.

நாம் சொல்ல வருவதெல்லாம் அந்தக் குழைந்தைகளுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி விடாதீர்கள் என்பது தான்.

உதவிகளைச் செய்யுங்கள். ஊரார் மெச்சுவதற்காக செய்ய வேண்டாம்! உண்மை மனதோடு செய்யுங்கள்! உண்மையாய்ச் செய்யுங்கள்!

No comments:

Post a Comment