Tuesday 10 December 2019

எனது எடை 62 கிலோ...!

பொதுவாக பிரதமர் டாக்டர் மகாதிர் எது பற்றிப் பேசினாலும் அதிலே ஒரு 'கிக்' இருக்கும்!  ஒரு சுவாரஸ்யம் இருக்கும்! நாம் எழுதவதற்கு ஒரு செய்தி இருக்கும்.

அப்படித்தான் சமீபத்தில் அவர் சொன்ன ஒரு செய்தி.  அந்த செய்தி எல்லா மலேசியர்களுக்கும் பொருந்தும். 

"கடந்த நாற்பது ஆண்டுகளாக எனது எடை 62 கிலோவாகவே இருந்து வருகிறது. என்ன தான் உணவு ருசியாக இருந்தாலும் கூட நான் அதிகம் சாப்பிடுவது கிடையாது! வயதானாலும் விரும்புகின்ற வேலையைச் செய்வதால் களைப்பு என்பது தெரிவதில்லை" என்கிறார் மகாதிர்.

நல்ல செய்தி. ஒவ்வொரு மலேசியரும் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு செய்தி. 

யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ எனக்கு அது பொருந்தி வருகிறது.  எனது எடை எந்த காலத்திலும் 60 - 65 கிலோவுக்கு மேல் போனதில்லை. உணவு என்று வரும் போது அதில் அதிக ஈடுபாடு கிடையாது. சாப்பிட்டால் சரி.  எனது வேலையில் எனக்குக் களைப்பு ஏற்படுவதில்லை.

அவர் சொன்னதில் முக்கியமான ஒன்று  அவர் விரும்பி செய்கின்ற வேலை அவருக்குக் களைப்பை ஏற்படுத்துவதில்லை. அரசியல் தான் அவரது வேலை. சரியாகச் சொன்னால் 1969 - ம் ஆண்டில் தான் அவர் அரசியல் வெளிச்சதிற்கு வந்தார். அந்த அரசியல் ஈடுபாடு தான் அவரை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது.  அரசியலில் அதிகம் நன்மைகள் செய்தால் அதனால் வரும் திருப்தி. அதனை அவர் சார்ந்த மக்களுக்கு நிறையவே செய்திருக்கிறார்.

மனோதத்துவம் என்ன சொல்லுகிறது? உனக்குப் பிடித்தமான வேலை செய்தால் உனக்குக் களைப்பு தெரிவதில்லை என்கிறது. 

கவிஞர் வாலி ஒரு முறை சொன்னாராம். "நான் இஷ்டப்பட்டுத் தான் கஷ்டப்பட வந்தேன்! என்றாராம்.  அவர் இஷ்டப்பட்டது சினிமாவில் பாடல் எழுதுவது. ஆனால் அது அவ்வளவு எளிதில் கிடைத்து விடாது, ஏகப்பட்ட கஷ்டங்களைச் சந்திக்க வேண்டி வரும் என்று தெரிந்தே அவர் கஷ்டப்பட வந்தார். ஆனால் அது அவருக்கு  கஷ்டம் அல்ல.  காரணம் அது அவருக்குப் பிடித்தமானது. 

டாக்டர் மகாதிர் தனக்குப் பிடித்தமான அரசியலைச் செய்வதால் அவருக்கு அதனால் எந்த களைப்பும் ஏற்படுவதில்லை.  சுமையாகவும் தெரிவதில்லை.

நமக்குள்ள செய்தி என்ன?  நாம் தெர்ந்தெடுத்த வேலைகளைச் செய்தால் நமக்குச் சோர்வு என்பதில்லை!                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         

No comments:

Post a Comment