மீண்டும் ஆட்டம் காட்டுகிறாரா, ஸாக்கிர் நாயக்?
சமீபத்தில் இஸ்லாமிய மாநாட்டிற்குப் பின்னர் பிரதமர் மகாதிர், இஸ்லாமிய சமயப் போதகர் ஸாகிர் நாயக்கைப் பற்றி குறிப்பிடும் போது, ஸாகிர் நாயக் இனங்களைப் பற்றி பேசி இனங்களுக்கிடையே மோதலை உண்டாக்குவதைத் தவிர்க்க வேண்டும் என்பதாக அறிவுறுத்தப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார்.
நல்லது, நாமும் வரவேற்கிறோம். ஆனால் சொறிந்து கொண்டிருப்பவனுக்கு சொறிந்து கொண்டிருப்பது தானே சுகம்!
பிரதமர், ஸாகிர் நாயக்கிற்கு அறிவுரை கொடுத்த அடுத்த நாளே அவரது சிஷ்யப்பிள்ளை ஸம்ரி வினோத் தனது முகநூலில் யாருமே யோசிக்காத ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார்!
"தாய் மொழிப் பள்ளிகள் எதற்காக?" என்கிற பாணியில் தனது முகநூலில் கேள்விகள் எழுப்பியிருக்கிறார். அவர் தேசிய மொழி பள்ளியில் படித்தாராம் ஆனால் நன்றாகத்தான் தமிழ் பேசுகிறாராம், அப்புறம் எதற்கு தாய் மொழிப்பள்ளிகள் என்கிறார் இவர்!
நிச்சயமாக ஒரு தமிழனால் இப்படியெல்லாம் பேச முடியாது. கூடா நட்பு கேடில் முடியும் என்பார்கள். ஸம்ரி வினோத்தின் ஸாகிர் நாயக்குடனானது கூடா நட்பு! ஸாகிர் தன்னால் வெளிப்படையாக பேச முடியாது என்பதால் இப்போது ஸம்ரி வினோத்தைப் பயன்படுத்துகிறார் என்பது நமக்குத் தெரிகிறது! எப்படியும் குழப்பத்தை உண்டாக்குவது தான் ஸாகிர் நாயக்கின் குறிக்கோள். அவரின் குறிக்கோளை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் அவர் போவார்! யார் காலிலும் அவர் விழுவார்! இப்போது ஸம்ரி வினோத் என்னுமொரு பிள்ளைப்பூச்சி அவரது காலைச் சுற்றிக் கொண்டிருக்கிறது!
இப்போது தாய்மொழிப் பள்ளிகள் ஏன் என்று கேள்வி கேட்கும் இந்தப் பிள்ளைப்பூச்சி வருங்காலங்களில் இன்னொரு கேள்வியையும் கேட்கலாம். இந்திய முஸ்லிம்கள் ஏன் தங்களது தாய் மொழியை தங்களது பள்ளிவாசல்களில் பயன்படுத்த வேண்டும், சீனர்கள் ஏன் தங்களது பள்ளிவாசல்களில் சீன மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்று கூட கேள்விகள் கேட்கலாம்! தமிழ் முஸ்லிம்களின் தமிழ் மொழிப்பற்று எவ்வளவு தீவிரமானது என்பதை நாம் அறிவோம். அவர்களை எல்லாம் வேற்று கிரகங்களுக்குப் போங்கள் என்கிறாரா வினோத்? சொன்னாலும் சொல்லுவார்! தமிழ் படித்திருந்தால் பண்பாடு தெரியும். எது சரி, எது தவறு என்று புரிந்து கொள்ள முடியும். அதற்கு அவருக்குக் கொடுப்பனை இல்லை!
ஸாகிர் நாயக்கின் ஆட்டம் இனி இவரை வைத்துத் தான் தொடரும்! பார்ப்போம்!
No comments:
Post a Comment