Saturday 5 December 2020

ரசம் கூட மருந்து தான்!

 

நமது இளைய தலைமுறை ரசம் என்றாலே "உவ்வே!" என்று சொல்லுகின்ற அளவுக்குத் தான்  வளர்க்கப்படுகின்றனர்! அது மட்டும் அல்லாமல் இப்போதுள்ள இளம் தாய்மார்கள் கூட "உவ்வே!" போடுகின்றவர்களாகவும் மாற்றப்பட்டிருக்கின்றனர்!

அதனால் இளம் தலைமுறையினரிடையே ரசத்திற்கு உள்ள மதிப்பு அவ்வளவு தான்.ஆனாலும் நிறைய விதிவிலக்குகளும் உண்டு. மறுப்பதற்கில்லை. அதுவும் எனது வீட்டிலேயே உண்டு. எனது பேரப்பிள்ளைகள் - மலாய், சீன, தமிழ் - பேரப்பிள்ளைகளுக்குத் தினசரி பெரும்பாலும் ரசம் வேண்டும். ஏதோ ஓரிரு நாள் தயிர் வேண்டும். அதுவும் ரசம் இல்லாவிட்டால் பெரும் ரகளையே நடக்கும்! அதற்குக் காரணம் எனது மனைவி ரசம் என்றால் "நோய் எதிர்ப்பு சக்தி" என்றும், கொரோனா வராது என்றும்  எப்போதும் அவர்களுக்கு நினைவூட்டுவார்.

ஆனல் இப்போது அதனை பெரிய தொழிலாகவும்,  கொரோனா தொற்று நோய்க்கான எதிர்ப்பு சக்தியாகவும்  பிரபலபடுத்தியிருக்கிறார் சமையல் கலைஞர் அருண் ராஜதுரை. இங்கல்ல, அமரிக்காவில்!

அருண் ராஜதுரை தமிழ் நாட்டில், அரியலூர் மாவட்டம்,  மீன்சுருட்டி என்னும் பகுதியைச் சேர்ந்தவர். அவர் அமெரிக்காவில் அஞ்சப்பர் பிரின்ஸ்டன் ஹோட்டலில் பணிபுரிந்த போது இந்த ரசத்தைப் பிரபலப்படுத்தியிருக்கிறார். இந்த ரசத்தை  கொரோனா தொற்றின் எதிர்ப்பு சக்தியாக அறிமுகப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக நியு யோர்க், நியு ஜெர்சி மற்றும் கனடாவின் அவர்களின் கிளை உணவகங்களிலும் ரசம் வெகுவாகப் பாராட்டுப்பட்டதும் அல்லாமல் கொரோனா தொற்று நோயின் எதிர்ப்பு சக்தியாகவும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த நேரத்தில் ஒன்றை நான் ஞாபகப்படுத்துகிறேன். நமது நாட்டில் இந்தியர்களுக்குப் பெரிய அளவில் கொரோனா தொற்று நோய் பாதிப்பு இல்லை என்கிற ஒரு கருத்து உண்டு. அதற்குக் காரணம் நமது உணவு முறை. நமது பாரம்பரிய உணவில் நாம் நிறையவே நோய் எதிர்ப்புச் சக்தி தரும் மூலிகை வகைகளைப் பயன்படுத்துகிறோம். இப்போதும் அது உண்டு. அது ரசத்திலும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. மஞ்சள், பூண்டு, மிளகு, வெங்காயம் அனைத்துமே நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டவை. 

ஒரு வேளை வருங்காலங்களில் ரசம் நிரந்தரமாகவே கொரோனா தொற்றுக்கு பயன்படுத்தப்படலாம். மருந்து கண்டு பிடித்தாலும் அதன் விலை  சராசரி மனிதனுக்குக் கட்டுபடியாகுமா என்பது கேள்விக்குறியே!

எப்படி இருப்பினும் ரசம் என்பது ஒரு மருத்துவம் என்பதை அருண் ராஜதுரை நிருபித்திருக்கிறார்.

ராஜதுரை பாராட்டுக்குரியவர். "உவ்வே!" என்று சொல்லப்படுகின்ற ரசத்தை  உயரிய இடத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார்! அவரும் உயர்ந்திருக்கிறார்! ரசமும் ஒருவரை உயர்த்தும் என்பது இப்போது தான் நமக்குப் புரிகிறது!

No comments:

Post a Comment