Thursday 10 December 2020

அரசியல்வாதிகளே! கொஞ்சம் சிந்தியுங்கள்!

 அரசியல்வாதிகளே! கொஞ்சம் சிந்தியுங்கள்! இதை நான் சீனர்களுக்குச் சொல்லத் தேவையில்லை!  ஆனால் இந்தியர்களுக்கு?  மிக மிகத் தேவை!

நம் நாட்டில் ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்பது ஒன்றும் புதிதல்ல. எப்போது ஆளுங்கட்சி என்று ஒன்று தோன்றி விட்டதோ அப்போதே எதிர்கட்சியும் தோன்றி விட்டது. 

எதிர்கட்சி என்று ஒன்று இல்லாவிட்டால் நாட்டையே விற்றுவிடுவார்கள்! அந்த அளவுக்கு ஆரசியல்வாதிகளின் அராஜகம் அதிகமாகி விட்டது! ஏன் நமது இந்திய சமூகமே பலவழிகளில் பல்லாங்குழி ஆடப்பட்டிருக்கிறது!  ஆனால் அது பற்றி இப்போது நாம் பேசப் போவதில்லை!

நாம்  எந்தக் கட்சியைச் சார்ந்திருந்தால் என்ன?  கட்சி என்பது கொள்கை சார்ந்தது. கருத்து வேறுபாடுகள் என்பது சகஜம்.இருந்துவிட்டுப் போகட்டும்.

ஆனால் அதற்கும் நமது நட்புக்கும், நமது உறவுக்கும் சம்பந்தமில்லை. நாம் எப்போதும் போல நண்பர்கள் தான்.

அதுவும் குறிப்பாக இனம் சார்ந்த சில விஷயங்களில் நாம் நமக்கு எதிராக நடந்து கொண்டு எதிரிகளாக நடந்து கொள்ளக் கூடாது. ஆனால் நாம் அப்படி நடந்து கொள்ளுகிறோம்!

தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் என்கிற பிரச்சனை வரும் போது நாம் ஒன்றிணைய வேண்டும். மொழி என்று வரும் [போது நாம் ஒன்று சேர வேண்டும். இந்தியர்களின் இடுகாடு, சுடுகாடு என்று வரும் போது நாம் பிரிந்து செல்வது கேடு.  இந்து கோவில்கள் என்று வரும் போது நாம் ஒருவர். காரணம் இவைகள் எல்லாம் நமது சமுதாயத்தைப் பாதிக்கும் விஷயங்கள். இதற்கெல்லாம் இரு அணிகளாக இருந்தால் "ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்!" என்பார்களே அது போல அவர்கள் கூத்தாடுவார்கள் நாம் தோல்வியாளர்கள்!

அரசியல்வாதிகளை நாம் கேட்டுக் கொள்வதெல்லாம் இந்தியர்களைப் பாதிக்கும் பிரச்சனைகள்என்று  வரும் போது ஒன்று சேருங்கள்.  அது சீனர்களிடம் இயற்கையாகவே இருக்கிறது. அது ஏன் நம்மிடம் இல்லை என்பது எனக்குப் புரியவில்லை. சீனர்களைப் போலவே நாம் படித்தவர்களாக நடந்து கொள்ள வேண்டும். ஆனால் படிக்காதவர்கள் போல் நடந்து கொள்ளுகிறோம்.

அரசியல்வாதிகளே! கொஞ்சம் சிந்தியுங்கள்! சமுதாயம் தான் முக்கியம்!

No comments:

Post a Comment