Thursday 3 December 2020

இது சரியா தவறா?

 இது சரியா தவறா என்று எனக்குத் தெரியவில்லை! இது முடியுமா முடியாதா என்பது எனக்குத் தெரியவில்லை! இது பயனா அல்லது பயனற்றதா என்பது எனக்குத் தெரியவில்லை!

இப்படி ஆயிரம் கேள்விகள் உள்ளன. ஆனால் இது சரியே என்பது தான் எனது கருத்து. ஆனால் எனது கருத்தை அரசியல் கொள்ளைக் கூட்டம் ஏற்றுக் கொள்ளாது  என்பது தான் துயரம். அதற்காக வாய்மூடி, கைகட்டி மௌனியாக இருக்க முடியுமா?

நம்மால் முடியாவிட்டாலும் கோம்பாக் நாடாளுமன்ற தொகுதி மக்கள் துணிச்சலானவர்கள். அவர்களைப்  பாராட்டலாம்; பாராட்டுகிறேன்!

கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்மின் அலியின் மீது நம்பிக்கை மோசடி வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அது என்ன மோசடி?  அவர் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை மீறியிருக்கிறார்.  ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக - ஊழலலில் திளைத்துப் போன அம்னோ கட்சியைக் கடுமையாக எதிர்த்து,  14-வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹரப்பான் ஆட்சி மலர பிரசாரம் செய்தார். அதனால் தான் "எங்கள் தொகுதி மக்கள் அஸ்மின் அலிக்கு ஆதரவு கொடுத்ததோடு அவரை நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுத்தோம்."

ஆனால் அஸ்மின் அலி,  அவர் கொடுத்த வாக்குறுதியை மீறிவிட்டார். அவர் கட்சி மாறினார். கட்சி மாறியது மட்டும் அல்லாமல் எந்தக் கட்சி ஊழலின் ஊற்றூக்கண் என்று சொன்னாரோ இன்று அந்த கட்சியோடு கூட்டணி அமைத்து இப்போது அமைச்சராகவும் ஆகிவிட்டார்! இப்போதும்  அவர் மேடைகளில் "ஊழல்"  என்று முழங்கிய அந்தக்  கட்சி ஊழல் மிக்க கட்சி என்கிற பெயரோடு தான் மக்களிடையே விளங்கிக் கொண்டிருக்கிறது! 

இப்படி ஒரு வழக்குப் போடுவதால் எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை என்று நமக்குத் தெரிகிறது.  பயன் இருக்கிறதோ இல்லையோ முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் கூட "நான் வந்து நீதிமன்றத்தில் சாட்சி சொல்லுகிறேன்" என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார்!

ஆனால் இந்த வழக்கினால் எந்தப் பயனும் இல்லை என்று சொன்னாலும் எப்படி,  அப்படி ஒரு முடிவுக்கு வர முடியும்? அங்கும் ஆளுங்கட்சி வைத்தது தான் சட்டம்! ஆளுங்கட்சியில் உள்ளவர்கள் அஸ்மின் அலி தங்களுக்கு ஆபத்தானவர் என்று நினைத்தால் அவருடைய நிலை ஆபத்தாக முடியும்!

அரசியலில் எதுவும் நடக்கலாம். இங்கு நண்பன், விரோதி என்கிற பாகுபாடுகள் எல்லாம் கிடையாது! அங்கு உள்ளதெல்லாம் ஒரே கொள்கை: பணம், பதவி மட்டும்தான்!

ஆனால் இது ஒரு சரியான ஆரம்பம். இதற்குப் பதிலாக  நாடாளுமன்றத்தில் சட்டமாகக் கொண்டு வந்து தீர்மானம் போடலாமே என்று நினைத்தால் அங்கும் இந்தக் கொள்ளைக் கூட்டம் அந்தத் தீர்மானத்தை ஆதரிப்பதில்லை! இதில் மட்டும் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள்!

இது சரியா, இது வெற்றி பெறுமா என்று கேட்டால், பதிலில்லை! இந்த வழக்கு வெற்றி பெற்றால் அது ஒரு முன்னுதாரணம்! வெற்றி பெறாவிட்டால் வெட்டி வேலை என்று எடுத்துக் கொள்ள வேண்டியது தான்! ஆனாலும் முயற்சி செய்யட்டுமே, என்ன கெட்டுவிடப் போகிறது? நறுக் என்று நாக்கைப் புடுங்கவது போல  நாலு வார்த்தைகளையாவது கேட்கலாமே!

இது சரியா, தவறா என்று கேட்டால், பிரச்சனை அதுவல்ல, நாலு பேர்  அறிய வேண்டும் என்பது தான் முக்கியம்! இது சரியே!

No comments:

Post a Comment