Sunday 27 December 2020

இனிமேலும் அப்படித்தானா!

மனிதன் என்றால்  என்றும் மாறிக் கொண்டிருப்பவன். அப்போது தான் அவன் மனிதன். 

குறிப்பாகச் சொன்னால் கருத்துகள் மாறும் போது நம்மை நாமே மாற்றிக் கொள்ளுகிறோம். தவறான கருத்துகளை அப்படியே இழுத்து வைத்துக் கொண்டிருப்பதில்லை. .நாம் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.

இந்த ஆண்டு பத்துமலையில் தைப்பூசத் திருவிழா நடக்குமா என்பது கேள்விக்குறி என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் இப்போதே இந்து  சங்கம் "வேண்டாம்!" என்கிறது என்பதாக ஒரு வதந்தி பரவிக் கொண்டிருக்கிறது! நம்மால் இதனைப் புரிந்து கொள்ள முடியவில்லை! 

நமது நாட்டில் இந்து சங்கம் மட்டும் தான் இந்துக்களைப் பிரதிநிதிக்கும் ஓர் அதிகாரப்பூர்வமான சங்கம் என்பதை  நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். குறைபாடுகள் இருக்கலாம். குறைபாடுகள் இல்லை என்றால் கூட இருக்கிறது என்று அடித்துச் சொல்ல நம்மில் பலர் தயாராக இருக்கிறோம்! என்ன செய்வது? நாம் அப்படியே வளர்ந்துவிட்டோம்!

திருவிழா நடக்குமா, நடக்காதா என்பது சுகாதார அமைச்சு என்ன சொல்லுகிறதோ அது தான் நடக்கும். முதலில் அதைப் புரிந்து கொள்ள வேண்டும். பத்துமலை என்பது இலட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுகின்ற ஒரு புண்ணிய தலம்.

இப்போது கொரோனா தொற்று குறைவதாகவும் தெரியவில்லை. அதனால் பத்துமலையில் எந்த அளவை வைத்து பக்தர்கள் வரலாம் போகலாம் என்று கணக்கிடுவது பெரும் சிரமம். மூன்றில் ஒரு பகுதி என்றாலும் சாதாரண விஷயமல்ல.

ஒவ்வொருவரையும் காய்ச்சல் இருக்கிறதா என்று சோதனை செய்து அனுப்ப வேண்டும். இவர்களும் உண்மையைச் சொல்லப் போவதில்லை. தொற்று பரவுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.

இப்படி ஒரு சூழலில் தைப்பூசத் திருவிழாவுக்கு இந்து சங்கம் தான் தடையாக இருக்கிறது என்று குற்றம் சாட்டுவது சுத்த அபத்தம். அவர்களால் ஒன்றும் செய்ய இயலாது என்பது நமக்குப் புரிகிறது.

ஓர் இயக்கத்தை அவதுறு பேசுவது மிக எளிது.  ஆனாலும் அவர்களை நாம் நம்ப வேண்டும்.  யாரையாவது நம்பித்தான் ஆக வேண்டும். ஒவ்வொருவரையும் குற்றம் சொல்லிக் கொண்டும், குறை கண்டு கொண்டும் இருந்தால் சொல்லிக் கொண்டே இருக்கலாம்.  ஆனால் அதன் முடிவு தான் என்ன?

நாம், நமது தலைவர்களை நம்ப வேண்டும்.  சொல்லுவதை  ஏற்றுக் கொள்ள வேண்டும். இப்படி காலாகாலமும் நம்பாமலே போய்க் கொண்டிருக்க முடியாது.

நம்மை நாமே திருத்திக் கொள்ள வேண்டிய காலம் வந்து விட்டது! திருந்துவோம்! இனிமேலாவது திருந்துவோம்!

No comments:

Post a Comment