Wednesday 9 December 2020

இனி மேல் தான் அமைக்கும்!

கோவில்கள் ஏன் உடைக்கப்படுகின்றன என்று கேள்விகள் எழுப்பினால் ஒர் உடனடி பதிலாக ஒரு பதிலை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் கைவசம் வைத்திருக்கின்றனர்!

இப்போதும் தான் கைவசம் வைத்திருந்த பதிலைஅமைச்சர் உடனடியாக வீசி எறிந்தார்! நாளை கேட்டாலும், நான்கு நாள்கள் கழித்துக் கேட்டாலும், நான்கு ஆண்டுகள் கழித்துக்  கேட்டாலும் - அதே உடனடி பதில் கிடைக்கும்!

இதில் எந்த சமரசமும் இல்லை. எந்த அரசாங்கம் வந்தாலும், எந்த அமைச்சர் வந்தாலும் உடனடியாக இந்தப் பதிலைக் கொடுத்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய் விடுவார்!

ஆனாலும் கோவில் உடைப்புகள் தொடர்கின்றன.  எந்த ஒரு முடிவும் காணப்படுவதில்லை. ஒவ்வொரு முறையும் ஏதோ "ஏனோ தானோ" என்று பதில்!  பொறுப்பற்ற பதில். அதற்கு  மேல் யாரும் ஒன்றும் பேச முடியாத பதில்!

இந்தியர்களை நாங்கள் தான் காப்பாற்றுகிறோம் என்று மார்தட்டும் ஆளுங்கட்சியினரும் அதற்கு மேல் பேசுவதில்லை.  அவர்களுக்கு அந்த பதிலே  போதும்! தற்காலிகமாக பெருமூச்சு விடுவதோடு சரி!

ஆனால் அப்படி ஒரு பதில்  அரசாங்கத்திலிருந்து வந்த பின்னர் பொறுப்புள்ள ஒருவன் என்ன செய்வான்? இது நமது வழிபாடு சார்ந்த பிரச்சனை அதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் அதுவும் நிரந்தர தீர்வு காண வேண்டும். சும்மா இழுத்துக் கொண்டே போகக் கூடாது  என்று மக்களின் நலனில் அக்கறை உள்ளவன் எண்ணுவான்.

ஆனால் ஆளுங்கட்சியில் அப்படி ஓர் அரசியல்வாதியை நாம் இது நாள் வரை கண்டதில்லை என்பது தான் நமது பிரச்சனை! இனி மேலும் காண முடியுமா?  முடியாது! கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி விட்டது! கட்டெறும்பு கூட ஆபத்து என்றால் துள்ளி எழும்! 

இனி மேல் அரசாங்க என்ன செய்யப் போகிறது என்பதைச் சொல்லி விட்டார்கள்! நாமும் கேட்டுக் கொண்டோம். நமது அரசியல்வாதிகளும் கேட்டுக் கொண்டார்கள். 

அடுத்ததொரு கோவில் இடிக்கும் வரை நாமும் சும்மா இருப்போம், அவர்களும் சும்மா இருப்பார்கள்! உடைத்த பிறகு கோவில் தலைவர்கள் எல்லாம் சேர்ந்து  அறிக்கை விடுவார்கள்.  நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்கப்படும்.  அமைச்சர் மீண்டும்  ஒரு குழு அமைத்து பிரச்சனைக்குத் தீர்வு காண முற்சி செய்வோம் என்பார்!

இனி வரும் அந்த நாளை எதிர்பார்ப்போம்!

No comments:

Post a Comment