நமது அரசியல்வாதிகள் செய்கின்ற சில விஷமத்தனங்களால் சமுதாயம் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகின்றது என்பதை நமது மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் புரிந்து கொள்ள முயற்சி செய்யாததால் தான் அவர்கள் தங்களின் விருப்பபடி செய்து கொண்டும், மக்களை ஏமாற்றிக் கொண்டும் வருகின்றனர்.
இந்து பெருமக்கள் இறந்த பின்னர் அவர்களுக்கு ஈமச் சடங்குகள் செய்ய நிலமில்லை, இடமில்லை, ஆளுவோருக்கு மனமில்லை! இந்த பிரச்சனை ஒராண்டு, ஈராண்டு காலம் அல்ல கடந்த 61 ஆண்டுகாலமாக தீர்க்கப்படாத ஒரு பிரச்சனை!
இது நடந்தது மலாக்கா மாநிலத்தில். ஆளுங்கட்சியில் ம.இ.கா.வினர் ஆட்சிக் குழுவில் இருந்தனர். யாரும் கண்டு கொள்ளவில்லை. காரணம் அந்த அளவுக்கு அவர்களுக்குப் பயம் இருந்தது! பதவி பறி போய்விடும் என்கிற பயம்! நம்மாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர்களின் பிள்ளைக்குட்டிகள் பிழைக்க வேண்டுமே! அது தானே அவர்களுக்கு முக்கியம்!
கடந்த பொதுத் தேர்தலில், அரசியலில் அபூர்வமாக, பக்காத்தான் ஹராப்பான் கட்சி பதவிக்கு வந்தது. அவர்கள் தேர்தலில் வாக்களித்தபடி அவர்கள் ஆட்சி காலத்தில் இரண்டு ஏக்கர் நிலம் இந்துக்களின் ஈமச்சடங்குக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு, மாநில ஆட்சிக் குழுவிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
ஆனால் அந்த திட்டம் நிறைவேறு முன்னரே ஆட்சி கைமாறியது! திட்டம் நிறை வேறவில்லை!
இப்போது இந்த திட்டம் மீண்டும் பூஜ்யமாகி விட்டது! நிலமும் கைமாறும் நிலைமைக்குத் தயாராகி வருகிறது! என்ன ஆயிற்று?
இங்கு ஈமச்சடங்கு செய்தால் எங்களது ஆத்மா சாந்தியடையாது என்பது ம.இ.கா.வினர் வாதம்! ம.இ.கா. வினருக்கு எந்த காலத்திலும் ஆத்மா சாந்தியடையப் போவதில்லை! அதனாலென்ன மற்றவர்களுக்காவது சாந்தியடையட்டுமே என்பது தான் நமது வாதம்!
இப்போது 61-ஆண்டுகளுக்குப் பின்னர் ம.இ.கா.வினர் மீண்டும் மலாக்கா இந்துக்களுக்கு ஈமச்சடங்குகள் செய்ய நிலத்தைத் தேட ஆரம்பித்திருக்கினறனர்!
சரி, அப்படியே, அவர்களுக்கு நிலம் கிடைத்தாலும் ஒரு விஷயம் நம்மை உறுத்துகிறது. செனட்டர் பதவி என்னாவது? அரசு சார்பு நிறுவனக்களில் பதவிகள் கிடைக்குமே, என்னாவது?டான்ஸ்ரீ, டத்தோஸ்ரீ. டத்தோ - இப்படி எத்தனையோ விருதுகள் கிடைக்க வேண்டும்! இவர்களின் சாதனைகளைப் பார்த்து பெண்டாட்டிகள் மகிழ வேண்டுமே! இந்த கனவுகள் என்னாவது?
இந்த ஆசைகள் எல்லாம் தவிர்ப்பது முடியாது தான்! இதற்குத் தான் அவனவன் பிழைப்பை அவனவன் பார்த்துக் கொண்டிருந்தால் இப்படி சமுதாயத்திற்குத் துரோகம் செய்யும் எண்ணம் வராது!
என்ன செய்வது? பிழைப்பு நாறித்தான் ஆக வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய முடியும்!
ஆனால் நமக்குக் காரியம் ஆக வேண்டும். ஈமச்சடங்குகள் மரியாதைகுரிய முறையில் நடக்க வேண்டும்.
மாநில மக்கள் சீறி எழ வேண்டும். இந்த துடைப்பக்கட்டைகளைத் தூக்கி எறிய வேண்டும்! வேறு வழி தெரியவில்லை! சமுதாய துரோகிகளுக்கு சாக்கடையைக் காட்ட வேண்டும்! வெண்சாமரம் வீசிக் கொண்டு இருக்க முடியாது!
மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்! மரியாதை கிடைக்க வேண்டும்!
No comments:
Post a Comment