Friday 4 December 2020

இலஞ்சம் கொடுப்பதில்லையோ!

 ம.இ.கா. தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன், கெடா மாநில மந்திரி பெசாருக்கு,  சரியான கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.

"சட்டவிரோதமாக கட்டப்பட்ட இந்து ஆலங்களை இடித்துத்  தள்ளுவேன் என்று சூளுரைக்கும்  மந்திரி பெசார், சட்டவிரோதமாக இயங்கும் தொழிற்சாலைகளை இடித்துத் தள்ளுவாரா, உடைக்கும் தைரியம் உண்டா?" என்று கேள்விகளை எழுப்பியுள்ளார் ம.இ.கா. தலைவர், விக்னேஸ்வரன்!

சபாஷ்! இது சரியான கேள்வி. ஏன், அவரால் முடியாதா? என்று நமக்கும் தான் தோன்றுகிறது.

கோவில்களை உடைப்பதால் சொர்க்கம் போகலாம் என்று எந்த ஒரு மதமும் சொல்லவில்லை. இப்போதும் சொல்லவில்லை! அப்போதும் சொல்லவில்லை!  இப்போதும் இல்லை! அப்போதும் இல்லை! இனி மேலும் இருக்கப் போவதில்லை!

"வழிபாட்டுத் தலங்களை உடைத்தால் சொர்க்கம் போகலாம்" என்று மதங்கள் சொல்லவில்லை. மதம் பிடித்தவர்கள் சொல்லியிருக்கலாம்!

சரி, நமது மாண்புக்குரிய கெடா மந்திரி பெசார் இந்த இரண்டாவது கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டும். ஏகப்பட்ட சட்டவிரோத தொழிற்சாலைகள் பல இடங்களில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அந்த தொழிற்சாலைகளினால் ஏகப்பட்ட பிரச்சனைகள்.

சமீப காலங்களில் சிலாங்கூர் மாநிலத்தில் ஏற்பட்ட தண்ணீர் பிரச்னைகள் அனைத்தும் சட்டவிரோத தொழிற்சாலைகள் தான் காரணம்.

கோவில்கள் உடைபட மெனக்கெடும் மந்திரி பெசார் சட்டவிரோது தொழிற்சாலைகளை உடைக்க  அவர் ஏன் மெனக்கெடவில்லை? நாமும் கேட்கிறோம். இது போன்ற சட்டவிரோத தொழிற்சாலைகள் திறந்த வெளியில் குப்பைகளைக் கொட்டுவதால் ஏற்படும் காற்றுத் தூய்மைக்கேடு மிகச் சாதாரண விஷயம் என்று நினைக்கிறாரா மந்திரி பெசார். 

அல்லது வேறு ஒரு கோணத்தில் பார்த்தால் சட்டவிரோத தொழிற்சாலைகள், சட்டவிரோதமாக இயங்கினாலும் அவர்கள் மூலம் கிடைக்கின்ற சட்டவிரோத மாமூலை எப்படித் தவிர்ப்பது என்று நினைக்கிறாரா? 

இந்த இடத்தில் தான் நாம் ஒரு முடிவுக்கு வர வேண்டும். ஒரு வேளை எல்லா வழிபாட்டுத் தலங்களும் அரசாங்கத்திற்கு மாமூல் கொடுக்க வேண்டும் என்று அவர் நினைக்கிறாரோ, தெரியவில்லை! அப்படி நினைத்தாலும் தப்பில்லை.  எல்லாவற்றிலும் அப்படித் தானே நடக்கிறது! இங்கு மட்டும் நடக்கக் கூடாது என்பதில் எந்த நியாயமும் இல்லை! 

இப்போது சம்பந்தப்பட்டவர்கள் மாநில மந்திரி பெசாருடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். சர்வ சமய மன்றம் இதற்கான முன்னெடுப்பை எடுக்க வேண்டும். மந்திரி பெசார் என்ன நினைக்கிறார் அவருக்கு என்ன தேவை என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். கோவில்கள் உடைபடுவதிருந்து தடுக்கப்பட வேண்டும். அது தான் முக்கியம்.

இது இலஞ்சம், ஊழல் என்று சொல்ல வேண்டாம். தேவை என்னவோ அதனைப் பூர்த்தி செய்ய வேண்டும்!

No comments:

Post a Comment